2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

Monday 22 November 2010

| 1 comments

தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும் - முனைவர்.வே. பாண்டியன்


சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றியும் கண்டனர். அதோடல்லாமல், தமிழின் உண்மையான மேன்மையை உணர்ந்திருந்த அவர்கள், அதைப் பொறுக்க முடியாமல் தமிழை 'நீச பாஷை' என்று இழித்துரைத்தனர். ஒரு அடிமையின் மொழி நீசமாகத்தானே இருக்க முடியும். தமிழனுக்கென்று ஏதாவதொரு மாண்பு இருந்து விட்டாலும் அவன் தன்னை உயர்ந்தவனாக எண்ணி தனது அடிமைத் தனத்திற் கெதிராகக் கிளர்ச்சி செய்வானே! எனவே அவனது மொழியைக் கீழ்த்தரமான மொழியென்று மூளைச்சலவை செய்தனர்.

இந்த நீண்ட கால கட்டத்தின் இறுதியில்,1800களில், கால்டுவெல் என்ற, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அருட்தந்தை தமிழகம் வந்தார். தமிழ் கற்று, சமற்கிருதம் கற்று, தென்னிந்திய மொழிகளையும் கற்றுத் தௌிந்து, திராவிட மொழிகளின் மூலம் தமிழ் என்றும், அது சமற்கிருதத்திலிருந்து உருவான மொழி அல்லவென்றும் ஐயமின்றி நிறுவினார். இதை ஒரு வெளிநாட்டினர் தான் முதலில் சொல்ல வேண்டியிருந்தது என்பதிலேயே, ஒட்டு மொத்த தமிழினமும் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டிருந்தது என்பது சொல்லாமலேயே விளங்கும். அதன் பிறகு வந்த சூரியநாராயன சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) தமிழைச் செம்மொழி என்று ஆய்ந்துரைத்தார். சமற்கிருதத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளான தமிழை மீட்கத் தனித்தமிழே சிறந்த வழியென்று முனைந்து மறைமலை அடிகளார் 'தனித்தமிழ்' இயக்கத்தைத் தோற்றுவித்தார். தேவநேயப்பாவாணரும் எண்ணற்ற அரும்பனிகளைச் செய்தார். தமிழின் மீட்சி தொடங்கியது. அதன் விளைவாக தமிழில் 50 விழுக்காடாக புழங்கி வந்த சமற்கிருதச் சொற்கள் தற்போது 20 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அந்த 20 விழுக்காடு அயல்மொழிச் சொற்களையும் அறவே நீக்கித் தமிழைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

அதேநேரம், தொல்காப்பியர் காலத்திலேயே இசைவளிக்கப்பட்ட, அயல் மொழிக்குரிய ஒலிகளைக் குறித்த, எழுத்துக்களையும் தவிர்ப்பது எனக்கு நல்லதொரு கொள்கையாகப் படவில்லை. நான் முன்வைக்கும், தன்னியலான தமிழின் வளர்ச்சித் திட்டத்திற்கு இது உவந்ததாக இருக்காது. இதைப்பற்றி அலசி மொழி விரிவாக்கம் பற்றிய எனது கருத்தைப் பதிவு செய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம்.

இக்கட்டுரையை தொடரும் முன்பு ஒரு செய்தியை குறிப்பிட்டே ஆகவேண்டும். அன்று சமற்கிருதத்தால் ஏற்பட்ட பாதிப்பைவிட இன்று ஆங்கிலத்தால் மிகுதியான பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலை நாடுகளின் பொருளாதார மேன்மையும், தமிழினிடத்தில் பார்ப்பனீயத்தால் ஏற்படுத்தப்பட்ட தம்மைப்பற்றிய தாழ்வு மனப்பாண்மையும் தான் இந்த ஆங்கிலக் கவர்ச்சிக்குக் காரணிகள். அதோடு தமிழின் மேன்மை, தொன்மை, பண்பாடு பற்றிய விழிப்புணர்வு பெருவாரியான தமிழிரிடத்தில் ஏற்படுத்தப் படாமையும் இந்த இழிவு நிலையின் மற்றொறு காரணி. நிற்க.

உலகிலுள்ள அனைத்து மொழியினங்களும் ஒரேமாதிரியான ஒலியமைப்புகளை தங்களது மொழிகளில் பயன்படுத்தவில்லை. பொதுவான ஒலிகள் பலப்பல இருந்தாலும் ஒவ்வொரு மொழிக் குடும்பத்திற்கென்றும் தன்னியலான ஒலிகளும் ஏராளம். இந்த தனித்தன்மைகள் அம்மொழியினங்கள் வாழ்ந்த இயற்கைச்சூழல், அச்சூழலில் வழ்ந்த பறவைகள், விலங்குகள் எழுப்பிய ஒலிகளின் அடிப்படையில் உருவானதாகும். இந்த மொழிகள் ஒவ்வொன்றும் நிறைவு பெற்றதாகவும் தமக்குத் தேவையான அனைத்து (அல்லது அனேக) ஒலிகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் விளங்கின.

ஆனால், இந்த மொழியினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் போது தான் ஒவ்வொரு மொழியின் போதாமை உணரப்பட்டது. இன்றுள்ள எந்த ஒரு மொழியும் மற்ற அனைத்து மொழிகளின் அனைத்து பெயர் சொற்களையும் உச்சரிக்க வல்லமை அற்றதாகவே உள்ளது. அந்த வல்லமை ஒவ்வொரு மொழிக்கும் முகாமையான தேவை என்பதே எனது கருத்து. அந்த வகையில் தமிழும் அந்த இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என்பது எனது விழைவு. இத்தகைய விரிவாக்கத்திற்கு தமிழும், தமிழ் சார்ந்த மொழிகள் தவிர ஏனைய அனைத்து உலக மொழிகளும் இசைவற்றதாகவே உள்ளன. அம்மொழிகளை விரிவாக்கம் செய்வதோ கற்பதோ எளிதல்ல. ஆனால், தமிழின் அடிப்படை அமைப்பு, தமிழின் விரிவாக்கத்திற்கோ கற்பதற்கோ உகந்த முறையில் உள்ளது. நாம் அடுத்துக் காணப்போகும் மொழி பற்றிய செய்திகளில் இது தௌிவாகும்.

கட்டுரையைத் தொடரும் முன்பு ஒரு சிறு விளக்கம்: சீனத்தைச் சார்ந்த அனைத்து கீழை மொழிகளும் ஒலிகளச் சார்ந்த எழுத்துகளைக் கொண்டிருக்க வில்லை. அவை கருத்துகளைத் தான் வெளிப்படுத்து கின்றன. ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு வரிவடிவம் (எழுத்துவடிவம்). கருத்தின் அடிப்படையில் எழுத்துகள் அமைவதால் அவை ஒவ்வொன்றின் தனிப்பட்ட உச்சரிப்புகளைக் கற்றல் இன்றியமையாதது. இயல்பாகவே, இம்மொழிகள் எல்லாம் மிகக் கடினமான மொழிகள். இம்மொழிகளும் விரிவாக்கத்திற்கு உவந்தவையல்ல. சீனமொழி பழம்பெரும் இலக்கியங்களைக் கொண்ட மொழி. எனினும், இக்குடும்பம் ஒரு வளர்ச்சி யடையாத மொழிக் குடும்பமே. ஆதிகால மனிதர்கள் பட எழுத்துகளைப் பயன்படுத்தினர். அதையொத்த எழுத்துகள் தாம் சீன எழுத்தமைப்பும். ஓரெழுத்துப்பேச்சு (Mono Sylabic) காலத்திலேயே தமிழகத்திலிருந்து பிரிந்து சென்ற இனம் தான் சீன மொழிக் குடும்பம். இக்குடும்ப மொழிகளில் ஒவ்வொரு புதிய கருத்திற்கும் (சொல்லிற்கும்) ஒரு புதிய வரிவடிவமும், உச்சரிப்பும் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும். இது எளிதல்ல. தமிழும், ஏனைய உலக மொழிகளும் ஒலி சார்ந்த மொழிகள் என்பதாலும், நமது கட்டுரை அதை மையப்படுத்தியது என்பதாலும் சீன மொழிக்குடும்பம் பற்றிய இந்த விளக்கம் தேவைப்பட்டது. நிற்க.

ஒரு மொழியை கற்கின்றவர் மூன்று முகாமையான கூறுகளைக் கற்க வேண்டும். அவை முறையே;

1. எழுத்தும் அதன் ஒலியும்

2. சொல்லும் அதன் உச்சரிப்பும்

3. சொல்லின் பொருள்.

(இங்கே நான் கற்பது பற்றி எடுத்துக்கொண்டது எழுத, படிக்க என்ற நோக்கில் மட்டுமே.)

1. எழுத்தும் அதன் ஒலியும்

எளிமையானதாக இருக்க வேண்டும். கற்பதை எளிமைப் படுத்தும் நோக்கில், எண்ணிக்கையில் குறைவானதாக இருக்க வேண்டும் அல்லது, எழுத்துக்களை அமைக்கும் முறை அவற்றைக் கற்பது எளிதாயிருக்க வேண்டும். எழுத்துகளுக்கு நிலையான, மாறாத ஒலிகள் இருக்க வேண்டும்.

உலகில் புழக்கத்தில் உள்ள அத்தனை சொற்களையும் முறையாக உச்சரிக்க வேண்டு மெனில் தேவையான மிகு அளவிலான எழுத்துகளும் அதற்குரிய ஒலிகளும் இன்றியமையாதது. ஆனால், மிகு அளவிலான எழுத்துக்கள், எழுத்தை உருவாக்குவது முதல், கற்பது, கணணியில் பயன்படுத்துவது உட்பட எண்ணற்ற சிக்கல்களை உள்ளடக்கியது. எனவே, முரன்பட்ட இந்த இரண்டு எதிர்பார்ப்புகளுக்கும் (அதாவது, மிகு எண்ணிக்கை, பயன்படுத்தலில் எளிமை) தீர்வு உண்டா எனில் உண்டு; அது தமிழுக்கே உள்ள சிறப்பு. இதைப்பற்றி பிறகு விரிவாக காணலாம்.

2. சொல்லும் அதன் உச்சரிப்பும்

எழுத்துக்களின் கூட்டு தான் சொல். அந்த எழுத்துகளுக்குரிய ஒலிகளின் சேர்க்கை தான் அந்த சொல்லின் உச்சரிப்பு. எழுத்துகளையும் அவற்றின் ஒலிகளையும் முறையாக கற்ற எவரும் சொற்களில் உள்ள எழுத்துகளை (அவற்றின் ஒலிகளோடு) கூட்டிப் படிக்கும் போது மயக்கமற்ற உச்சரிப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, எழுத்துகளுக்கு நிலையான ஒலிகள் இருப்பின் (அதாவது, இடத்திற்கு தகுந்தவாறு பிறழ்ன்று ஒலிக்காத தன்மை) மயக்கமற்ற உச்சரிப்பு இயல்பானதாகும். மிகு எண்ணிக்கையிலான எழுத்துகளைப் பயன் படுத்தும் போது அவ்வெழுத்துகளுக்குரிய நிலையான, மாறாத ஒலிகள் இயல்பாகிவிடுகிறது. இங்கு முகாமையாக நாம் உணரவேண்டியது என்னவென்றால் சொல்லின் உச்சரிப்பை, சிறப்பித்துக் கற்பிக்கத் தேவையில்லை. இது கற்றலின் சிக்கலிளுள்ள ஒரு பரிமானத்தை எளிதாக்கி விடுகிறது. எனவே, சொல்லைக் கற்கின்ற ஒருவர் சொல்லிற்குரிய எழுத்துகளைக் (Spelling) கற்றாலே போதுமானது.சரியான உச்சரிப்பு இயல்பாகவே வந்துவிடும்.

ஆங்கில மொழியை இங்கு ஒப்பு நோக்கினால் நான் சொல்வது எளிதாகப் புரியும். ஆங்கிலத்தில் மொத்தமும் 26 எழுத்துகளே யுள்ளன, அததற்கு ஒதுக்கப்பட்ட ஒலிகளோடு. இந்த குறைவான ஒலிகளை வைத்துக்கொண்டு வகைவகையான சொற்களை ஒலிப்பது இயலாத செயல். எனவே, ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகளை மிகையேற்றம் (Over-Loading) செய்கின்றனர். எனவே, சொற்களைக் கற்கவேண்டிய ஒவ்வொருவரும் Spelling மட்டுமில்லாது உச்சரிப்புகளயும் (Pronunciation) கற்கவேண்டியுள்ளது. இது ஆங்கிலம் கற்பதை மிகவும் கடினமாக்கி விடுகிறது. சான்றாக, Bus என்பதை 'புஸ்' என்றுதான் இயல்பாகப் படிக்க முடியும். Card என்பதை 'சார்டு' என்றுதான் இயல்பாகப் படிக்க முடியும். ஆக, 26 எழுத்துகளயும் முறையாக பயின்ற பின்னும், எழுத்துகளைக் கூட்டி சொற்களைப் படிக்கும் போது, கிட்டத்தட்ட அனைத்து ஆங்கில சொற்களுக்கும், ஒரு ஆசானின் துணை இன்றியமையாதது. ஆனால், தமிழுக்கு இந்த அளவு கற்பித்தல் தேவையில்லை. இதைப்பற்றி பிறகு மேலும் பார்ப்போம். இந்தக் கட்டுரையாளர், சிறுவயதிலேயே சொந்த முயற்சியால் ஆங்கிலம் கற்றவர் என்ற முறையில் அது ஒரு Illogical (ஏரணமற்ற) மொழியென்பதை உணர்ந்தவர். அறிவியல் வழியாக முயன்று ஆங்கிலம் கற்க முடியாது. ஆனால், தமிழ் அறிவியல் அடிப்படையில் அமைந்த மொழி.

3. சொல்லின் பொருள்

சொல்லின் பொருளைக் கற்பது ஒவ்வொரு மொழிக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவை. வேர்ச்சொல்லின் அடிப்படையில் அமைந்த சொல்லமைதிகளக் கொண்ட சிறந்த மொழிகளுக்கு சொற்களையும் அதன் பொருளையும் நினைவில் இருத்துவது ஒப்பீட்டளவில் எளிதானது. அந்த சிறப்பும் தமிழுக்கு இயல்பாகவே அமைந்த ஒன்றாகும். தமிழில் அனைத்து சொற்களும் வேர்கொண்டு எழுந்தவையே. மற்றபடி, சொற்களைக் கற்றல் என்பது அனைத்து மொழிகளுக்குமான இன்றியமையாத பரிமாணம் தான்.

மொழி விரிவாக்கத்தைப் பற்றி கருதுகின்ற போது, எழுத்துகள் அதிகமாவதால், தமிழர்களைப் பொருத்தவரை, சொற்கள் மிகுதியாக வேண்டிய தேவை இல்லை. ஆனால், புதிய கலைச்சொற்களை உருவாக்கும் போது புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துகளும் பெருமளவில் உதவும். மொழி விரிவாக்கத்தின் முதன்மை தேவை என்னவெனில், மாற்று மொழிகளில் உள்ள அனைத்து பெயர்களையும் (பெயர்ச் சொற்களையும்) பிழையின்றி எழுதி உச்சரிப்பதே. இன்று நாம் அனைத்தும் தமிழில் என்று முன்னேற விரும்பும்போது இது ஒரு இன்றியமையாத தேவையாகும்.

நாம் மேலே கண்டவற்றிலிருந்து, உலகின் அனைத்து சொற்களின் மயக்கமில்லாத உச்சரிப்பை இயல்பாக்க நிறைய எழுத்துகளும் அதேநேரம் அவற்றைக் கற்பதை எளிமைப் படுத்தக்கூடிய தாகவும் அமையவேண்டும். இந்த வசதி தமிழுக்குள்ள இயல்பான தகுதியாகும். இதை நாம் எண்ணி எண்ணிப் பூரிப்படையலாம்.

தமிழில் பண்டைய முறைப்படி 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், இவற்றின் சேர்க்கையால் உருவான 216 (12*18 = 216) உயிர்மெய் எழுத்துக்களும் உள்ளன. உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என்ற வகைப்பாடே சுவையான அறிவியல் அடிப்படையினால் செய்யப்பட்டது. அ முதல் ஔ வரையிலான ஒலிகளை நாம் ஏற்படுத்தும்போது உதடுகள் ஒட்டாமல், மேலண்ணத்தை நாக்கு எங்கும் தொடாமல், காற்றுக் குழாயை அல்லது உதடுகளைக் குறுக்கியோ, விரித்தோ காற்றை ஒழுங்குபடுத்தி ஒலிக்கின்றோம். உயிருக்கு முதன்மையானது காற்றுதானே! எனவே, காற்றை மட்டும் பயன்படுத்தி உருவாக்கும் ஒலிகள் உயிரொலிகள் எனப்பட்டன. மெய்யொலிகளை உருவாக்கும்போது (க், ங்,ச் . . . . ) நாவானது மேலண்ணத்தைத் தொட்டோ அல்லது உதடுகள் ஒட்டியோ ஒலிக்க வேண்டியுள்ளது. அதாவது, காற்றைவிட உடலின் (மெய்யின்) பங்கே அதிகம். அவை மெய்யொலிகள் எனப்பட்டன. ஒவ்வொரு மெய்யெழுத்தையும் ஒவ்வொரு உயிரெழுத்தோடு சேர்த்தொலிக்கும்போது வகைவகையான புதிய ஒலிகளை உருவாக்க முடியும். அவ்வெழுத்துக்கள் (ஒலிகள்) உயிர்-மெய் எழுத்துக்கள் எனப்பட்டன. அத்தகையவை எத்தனை எழுத்துக்கள் என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்துகளின் எண்ணிக்கையைப் பொருத்தது.

இதில் குறிப்பிட வேண்டிய சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு மெய்யெழுத்தும், ஒரு குறிப்பிட்ட உயிரெழுத்தோடு சேர்த்தொலிக்கும்போது, அதன் மெய்யெழுத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாற்றத்தை அடைகின்றன. சான்றாக, ஆ என்ற உயிரெழுத்தோடு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தொலிக்கும்போது, கா, ஙா, சா, நா, மா......என்ற உயிர்மெய்கள் ஒரே மாதிரியான மாற்றங்களைப் பெருகின்றன. ஒருசில தேவையான வேறுபாடுகளைத்தவிர, இது அனைத்து உயிரெழுத்துகளுக்கும் பொருந்தும். இதன்மூலம் நாம் உணரும் உண்மை என்னவெனில் உயிர்மெய்களுக்கு எழுத்து, வடிவங்களை உருவாக்குவதோ, கற்பிப்பதோ மிகவும் எளிது. அது மட்டுமல்லாமல் உயிர்மெய்கள் கூட்டொலிகள் என்பதும் அவை உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்துக்கள் தனித்தனியே கூடுவதால் உருவாவதாலும் இவற்றின் ஒலிகளை, அவற்றினோடு கூடிய எழுத்துக்களோடு நினைவில் இறுத்துவதும் எளிது. இவை மிகமிக முகாமையான உண்மைகள். தமிழின் சிறப்பின் அடிப்படையே இவைதான்.

பாவாணரின் வேற்சொல் ஆய்வு தமிழினத்தை வியக்க வைத்தது. தமிழ்ச்சமூகம் உலகின் தொன்மையானது. முதன்முதலில் பேசத்தொடங்கிய தமிழ்மாந்தன், ஒவ்வொரு சொல்லையும் காரணத்தோடே உருவாக்கிக் கையாண்டிருகின்றான். அதோடு சங்கம் வைத்து ஆய்ந்து செம்மைப் படுத்தப்பட்ட மொழி தமிழ் என்பதும் இச்சிறப்புகளின் அடிப்படை.

மீண்டும் ஆங்கிலத்தை ஆய்வு செய்வோம். ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களும் அவற்றிற்குரிய அடிப்படை ஒலிகளுமே உள்ளன. இந்த 26 எழுத்துக்களுமே ஒன்றிற்கொன்று எந்த தொடர்பும் அற்ற தனித்தனி எழுத்து, ஒலிகளே. எனவே, இம்மொழியை விரிவாக்கம் செய்ய வேண்டுமெனில், எத்தனை புதிய எழுத்துகள் தேவையோ அத்துனை எழுத்துகளுக்கும் புதிய வரி (எழுத்து) வடிவங்களை உருவாக்க வேண்டும். அவையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தனித்தனி வடிவங்களாகத்தான் இருக்க முடியும். (இல்லையென்றால் ஆங்கிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பே மாறிவிடும்.) இவற்றின் வடிவங்களையும் ஒலிகளையும் உருவாக்குவதும் கற்பதும் ஒப்பீட்டளவில் தமிழைவிட மிகமிகக் கடினமானதாகும். எல்லாவற்றையும்விட முகாமையான செய்தி என்னவென்றால் அப்படி விரிவாக்கம் செய்யப்பட்ட, ஆங்கிலம் போன்ற, மொழிகளை கணணியில் பயன்படுத்துவது இயலாததாகிவிடும். ஆனால், தமிழின் அடிப்படை அமைப்பு கணணி பயன்பாட்டுக்கு மிகவும் உவந்ததாக உள்ளது. உயிரும், மெய்யும் சேர்ந்து உயிர்மெய் உருவாக்கப் படுவதால் கணணியின் விசைப் பலகையில் உயிரெழுத்துகளுக்கும், மெய்யெழுத்துகளுக்கும் மட்டும் விசைகள் இருந்தாலே பொதுமானது. தற்போதுள்ள முறைப்படி, 12+18 = 30 விசைகளே போதுமானது. உற்று நோக்குங்கால், தமிழின் எழுத்துமுறை ஏதோ கணணிக்கென்றே உருவாக்கப்பட்டது போல் உள்ளது. இப்படித் தொன்மையான மொழியாக இருப்பினும், தமிழ் அரியபல மேன்மைகளைப் பெற்றிருக்கும்போது, இதன் விரிவாக்கம் பற்றிய தயக்கம் ஏன்?

கட்டுரையைத் தொடரும்முன்பு ஒரு விளக்கம் அளிப்பது தேவையாகிறது. தமிழ் ஒரு அறிவியல் மொழிதான். கணணி பயன்பாட்டுக்கு உவந்ததுதான். ஆனால், கணணியில் தட்டச்சு செய்யும்போது பெரும்பாலான எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளை அழுத்த வேண்டியுள்ளதே (அதாவது உயிரும், மெய்யும்) . அதனால், ஒரே கருத்தை கணணியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சேற்றும்போது தமிழுக்கு கூடுதல் விசைகளை அழுத்த வேண்டியிருக்குமே என்று கேட்கலாம். அது தான் இல்லை!!!! எப்படி? ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்கள் அதிக எழுத்துக்களைக் கொண்ட நீண்ட சொற்கள். ஆனால், தமிழில் பெரும்பாலான சொற்கள் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட சிறிய சொற்களே. இது எதனால் எற்பட்டது என்றால், மீண்டும், ஆங்கிலத்தின் எழுத்துப் பற்றாக்குறைதான். இதைக் கணித ஆய்வு வழியாக விளக்குகின்றேன்.

மூன்றெழுத்து சொற்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். ஆங்கிலத்தில் 26 எழுத்துகளிலிருந்து ஒவ்வொரு முறையும் வெவ்வேறான 3 எழுத்துக் குழுக்களை (Combinations) எடுத்து அவற்றை வெவ்வேறாக இடவமைதி (Permutations) செய்து மேலளவாக எத்தனை சொற்களை உருவாக்கமுடியும் என்றால், அவை மொத்தம் 15,600 மட்டுமே. அதே நேரம் தமிழில் 247 மொத்த எழுத்துக்களிலிருந்து 1,48,86,690 எண்ணிக்கையான 3 எழுத்து சொற்களை உருவாக்க முடியும். இந்த இரண்டு எண்ணிக்கைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த இரண்டு மொழிகளிலுமே இந்த எண்ணிக்கை களிலிருந்து மிகச்சிறிய விழுக்காடு தான் பயன்படு சொற்களாகும். ஏனென்றால் அத்துனை சொற்களுக்கும் சொற்களுக்கான ஓசையமைதி இருக்காது; வேர்ச்சொல் தொடர்பும் இருக்காது. இங்கு நாம் காணவேண்டியது வாய்ப்புகளைப் பற்றியதுதான். குறைந்த எழுத்துகளையுடைய ஆங்கிலத்திற்கு சிறிய சொற்களுக்கான வாய்ப்புகள், ஒப்பீட்டளவில், தமிழைவிட மிகமிகக் குறைவு. ஆகவே, ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்கள் நீண்ட சொற்களே. சான்றாக, சிலவற்றைப் பார்ப்போம்.

Complication சிக்கல்Beauty அழகுStop நில்Compettition போட்டிCompare ஒப்பிடுListen கவனிStatue சிலைUncomparable ஒப்பற்றGo போDifficulty கடினம்Situation சூழ்நிலைSilence அமைதிSound ஒலிComfort வசதிExhibition காட்சிShadow நிழல்Doubt ஐயம்Place இடம்Concentration கவனம்Install நிறுவுHouse வீடுCome வாGovernment அரசுJustice நீதி

மேலும், ஓரெழுத்துச் சொற்கள் இந்த இரண்டு மொழிகளிலும் எத்துனை உள்ளன என்று பார்த்தாலே விளங்கிவிடும். ஆங்கிலத்தில் ஓரெழுத்துச் சொற்கள் இரண்டே இரண்டு தான். அவை A (ஒரு), I (நான்) என்பன. ஆனால், தமிழில் எத்துனை என்று பாருங்கள்.

நீ, வை, கை, தை, போ, வா, கோ, மா, மை, பா, நா, பை, தா, தீ, ஈ, ...............

இந்தப் பட்டியல் முடிவானதல்ல. இதற்கு இணையான ஆங்கில சொற்கள் அனைத்தும் பல்லெழுத்துச் சொற்களே. ஆக, சராசரியாக, ஒரே கருத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேற்றும் போது, ஆங்கிலத்தைவிட தமிழுக்கு குறைவான விசையழுத்தங்களே தேவைப்படும் என்பது உண்மை. அதோடு, தமிழ் மென் பொருளில் சுயமாக புள்ளியிடும் வசதியும் உண்டு. நிற்க.

இக்கருத்துக்கு உரம் சேர்க்க, திருக்குறளையும், அதன் ஆங்கில மொழியாக்கமும் (கவிதை வடிவிலேயே, G. U. Pope) ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். இங்கு சான்றாக எடுத்துக் காட்டும் குறள், நேரடியாக பொருள் கொள்ளக் கூடிய எளிய குறளே.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. (35 எழுத்துக்கள்)

The loveless to themselves belong alone;The loving men are others' to the very bone. (68 எழுத்துக்கள்)

வேறு ஏதாவதொரு சொற்றொடரை மொழிபெயர்த்தாலும் இதே போன்ற முடிவே கிடைக்கும். (34 எழுத்துக்கள்)If any different sentence is translated, similar result would be arrived at. (62 எழுத்துக்கள்)

ஆக, நான் முன்பே குறிப்பிட்டதுபோல் தொல்காப்பியர் இசைவளித்த ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ எழுத்துகளைக்கூட தவிர்ப்பது முறையன்று. பார்ப்பனீயத்தின் மீதுள்ள வெறுப்பால் தமிழை முடக்குவது எள்ளளவும் சரியன்று. அழகிய தமிழின் தூய்மையைக் காப்பதாக எண்ணி, தமிழை தேக்கி வைப்பது ஒரு அடிப்படை வாதமே. அடிப்படை வாதங்கள் முன்னேற்றத்தின் எதிரிகள்.

உலகின் அனேக மொழிகள் விரிவாக்கத்திற்கு இயைந்த மொழிகள் அல்ல. தமிழுக்கு மட்டுமே இந்தத் தகுதியுண்டு. விரிவாக்கதின் மூலம் தமிழை உலகின் முதன்மை மொழியாக்க முடியும். அதற்குரிய அத்துனை தகுதிகளும் தமிழுக்குண்டு.

மொழி விரிவாக்கம் பற்றிய கருத்தை ஒரு சான்றோடு விளக்குவோம். ஆடுகள் தமிழ் மண்ணிற்குரிய விலங்கு. இருந்தும் ஆடு கத்தும் ஒலியை தமிழில் எழுத முடியாதென்பதே வருந்தக்கூடிய செய்தி. தற்போது ஆடு கத்துவதை 'மே' (ம்+ஏ = மே) என்றே எழுதுகின்றோம். இது May என்பதில் உள்ள ஏ தான். ஆனால், Man என்பதில் உள்ள ஏ தான் சரியான உச்சரிப்பு. அதற்குரிய உச்சரிப்பு (எழுத்து) தற்போது நம்மிடத்தில் இல்லை. மாறுபட்ட இந்த 'ஏ' க்கான ஒரு உயிரெழுத்தை உருவாக்கினால் இந்த புதிய 'மே' மட்டுமல்ல 18 புதிய உயர்மெய்கள் கிடைக்கும்.

சரி. எவ்வாறு விரிவாக்கம் செய்யலாம் என்று இப்போது பார்ப்போம். நமது குறிக்கோள், உலகிலுள்ள அனைத்து மொழியினங்களின் பெயர்ச் சொற்களை அவ்வினங்களின் உரிய உச்சரிப்புகளோடு எழுதிப் படிப்பதே. எனவே, அத்தகைய மொழிகளைக்கற்ற தமிழர்களின் உதவியோடு என்னென்ன ஒலிகள் தமிழில் சேர்க்கப்பட வேண்டும் என்பதைப் பட்டியலிட வேண்டும். பிறகு, அப்புதிய ஒலிகளை உருவாக்க என்னென்ன புதிய உயிரொலிகள், மெய்யொலிகள் தேவையென்பதை ஆய்ந்தறிய வேண்டும். இந்த ஆய்வின்பின் அவ்வுயிர் மெய்களுக்குறிய, தமிழின் தன்மையோடு இயைந்த, புதிய வரிவடிவங்களை உருவாக்க வேண்டும். இதைச்செய்த உடனேயே பட்டியலிட்ட அனைத்து ஒலிகளுக்கும் வரிவடிவங்கள் எளிதாக உருவாகிவிடும்.

தற்போது உள்ள செந்தமிழின் அமைப்பில் உயிரும், மெய்யும் உயிர்மெய்யும் சேர்த்து 12+18+(12*18=216)+1 = 247 எழுத்துக்கள் உள்ளன. இதனுடன், எடுத்துக் காட்டுக்காக, 8 உயிரெழுத்துக்களையும், 2 மெய்களையும் சேர்த்தால் 20+20+(20*20 = 400)+1 = 441 மொத்த ஒலிகளையும், எழுத்துக்களையும் பெறமுடியும். வெறும் 10 புதிய ஒலிகளையும், வரி வடிவங்களையும் மட்டும் உருவாக்கி கிட்டத்தட்ட 200 பதிய ஒலிகளையும், எழுத்துக்களையும் பெறுவது என்பது எப்பேர்ப்பட்ட விந்தை! அதுதான் தமிழ். இதற்குரிய, புதிய எழுத்துக்களுக்கு, விசைகளாக விசைப்பலகையில் Num Lock பகுதியில் உள்ள விசைகளைப் பயன்படுத்தலாம்.

நான் மேற்கூறியது ஒரு எடுத்துக்காட்டே. எத்தனை உயிர்கள், எத்தனை மெய்கள் என்பது மொழி வல்லுனர்கள் முடிவு செய்ய வேண்டியது. விரிவாக்கம் செய்யப்பட்ட தமிழுக்கு 'பெருந்தமிழ்' என்று பெயரிடலாம். ஐந்தாம் வகுப்பு வரை செந்தமிழும் அதன்பிறகு பெருந்தமிழும் மாணவர்களுக்கு கற்பிக்கலாம். தமிழின் இலக்கணத்தில், இந்த விரிவாக்கத்தால், ஏதேனும் மாறுதல் வேண்டின் அதனையும் கவனிக்க வேண்டும். தொல்காப்பியர் ஏற்படுத்திய வட எழுத்துக்கள் இப்பெரும் விரிவாக்கத்தின் ஒரு சிறிய அங்கமாக இருக்கும். பெருந்தமிழ் என்பதற்கு பதிலாக "உலகத்தமிழ்" என்றும் பெயரிடலாம்!

இக்கட்டுரையாளர் ஒரு மொழி வல்லுனரல்லர், ஒரு இயற்பியல் அறிஞர் தாம். ஆனால், அறிவியல் கண்ணோட்டத்தில் மொழியை அனுகும்போது, மேற்குறிப்பிட்ட தமிழின் 'வியத்தகு' மேண்மைகள் புலப்பட்டன. இத்தகைய விந்தை மொழியை மேலும் செழுமையுறச் செய்ய வேண்டியது, இந்தத் தலைமுறையின் கடப்பாடு அல்லவா? இக்கட்டுரையின் நோக்கம், அந்தத் திசையில், இன்றியமையாததொரு தருக்கத்தை ஏற்படுத்துவது தான். காலம் தாழாமல் அப்படியொரு தருக்கம் தொடங்கினால் தமிழும், தமிழுலகமும் மேன்மையடையும். இணையத் தமிழ் அறிஞர்களும், மாநாட்டுக் குழுக்களும் இக்கருத்துக்களை பரிசீலிப்பர் என்று கருதுகிறேன். தமிழுக்கு Unicode ல் உயிரெழுத்துக்கும், மெய்யெழுத்துக்குமான குறியீடுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்க் கோப்புகளை சேமிக்க மிகையான இடமும், அவற்றைக் கையாள மிகையான கணணி நேரமும் தேவை என்ற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அனைத்து எழுத்துக்களுக்கும் தனித்தனி குறியீடுகள் கொடுக்கப்பட்டால், இடத்தேவையும், கையாளும் நேரமும் குறையும் என்பது தமிழை மட்டும் வைத்துப்பார்த்தால் உண்மையே. ஆனால், தற்போதிருக்கும் முறையிலேயேகூட ஆங்கிலத்தைவிட தமிழுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான மிகையான இடங்களும், கையாளும் நேரமும் தேவையில்லை என்ற உண்மையை, இக்கட்டுரையின் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளேன்.

வெல்க தமிழ்

குணமேவிய தமிழா!

Thursday 11 November 2010

| 0 comments
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்

சங்கே முழங்கு

| 3 comments
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்:
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! (எங்)

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்ததமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! (எங்)

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூ தூது சங்கே!
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு! (எங்)

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! (எங்)

எங்கள் தமிழ்

| 0 comments
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில் (இனிமைத்)

தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்
தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு! (இனிமைத்)

தமிழர் முரசு

| 0 comments
தமிழர் முரசு

உயர்வென்று கொட்டுக முரசே -- நல்ல
உண்மைத் தமிழர்கள் வாழ்வு!
அயர்வில்லை அச்சமிங் கில்லை -- புவி
ஆளப் பிறந்தவன் தமிழன்.
உயர்வென்று கொட்டுக முரசே!

அயல் என்று கொட்டுக முரசே!-- உற
வான திராவிடர் அல்லார்!
துயர் செய்ய எண்ணிடும் பகைவர் -- திறம்
தூள் என்று கொட்டுக முரசே!
உயர்வென்று கொட்டுக முரசே!

அறிவுள்ள திராவிடர் நாட்டில் -- சற்றும்
ஆண்மை யில்லாதவர் வந்து
நமர்பசி கொள்ள நம்சோற்றை -- உண்ண
நாக்கைக் குழைப்ப துணர்ந்தோம்.
உயர்வென்று கொட்டுக முரசே!

தமிழ்நாடு தமிழருக் கென்றே -- இந்தச்
சகத்தில் முழக்கிடு முரசே!
நமைவென்ற நாட்டினர் இல்லை -- இதை
நாற்றிசை முற்றும் முழக்கு!
உயர்வென்று கொட்டுக முரசே!

தமிழ்ப் பள்ளு

| 0 comments
தமிழ்ப் பள்ளு

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! -- தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே -- ஆடுவமே!

கோடுயர் வேங்கடக் குன்றமுதல் -- நல்ல
குமரிமட்டும் தமிழர் கோலங் கண்டே
நாம் -- ஆடுவமே...

மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் -- தமிழ்
மக்களென் றேகுதித் தாடுவமே!
கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் -- நல்ல
கதியினைக் காட்டினர் தமிழ ரென்றே
நாம் -- ஆடுவமே...

மூலமென்றே சொல்லல் முத் தமிழாம் -- புவி
மூர்க்கம் தவிர்த்ததும் அப் புத்தமுதாம்!
ஞாலமெலாம் தமிழ், தமிழர்களே -- புவி
நாம் எனவே குதித் தாடுவமே!
நாம் -- ஆடுவமே...

வானிடை மிதந்திடும் தென்றலிலே -- மணி
மாடங்கள் கூடங்கள் மீதினிலே,
தேனிடை ஊறிய செம்பவழ -- இதழ்ச்
சேயிழை யாரொடும் ஆடுவமே!
நாம் -- ஆடுவமே...

கவிதைகள், காவியம், உயர்கலைகள் -- உளம்
கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம்
குவிகின்ற பொன்பொருள் செந்நெலெலாம் -- இங்குக்
குறையில வாம் என் றாடுவமே!
நாம் -- ஆடுவமே

தமிழ்

| 0 comments
தமிழ்

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

தமிழின் இனிமை!

| 0 comments
தமிழின் இனிமை! 
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 
கழையிடை ஏறிய சாறும், 
பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சும் 
பாகிடை ஏறிய சுவையும்; 
நனிபசு பொழியும் பாலும் - தென்னை 
நல்கிய குளிரிள நீரும், 
இனியன என்பேன் எனினும் - தமிழை 
என்னுயிர் என்பேன் கண்டீர்! 
பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப் 
புனலிடை வாய்க்கும் கலியும், 
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை 
கொட்டிடும் அமுதப் பண்ணும், 
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள் 
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும் 
விழைகுவ னேனும், தமிழும் - நானும் 
மெய்யாய் உடலுயிர் கண்டீர்! 
பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம் 
பக்கத் துறவின் முறையார் 
தயைமிகு உடையாள் அன்னை - என்னைச் 
சந்ததம் மறவாத் தந்தை, 
குயில் போற் பேசிடும் மனையாள் - அன்பைக் 
கொட்டி வளர்க்கும் பிள்ளை, 
அயலவராகும் வண்ணம் - தமிழ்என் 
அறிவினில் உறைதல் கண்டீர்! 
நிலச்சுடர் மணி வானம் - ஆங்கே 
நிறையக் குளிர் வெண் ணிலவாம், 
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே 
கடல் மேல் எல்லாம் ஒளியாம், 
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல 
மலைகளின் இன்பக் காட்சி, 
மேலென எழுதும் கவிஞர் - தமிழின் 
விந்தையை எழுதத் தரமோ? 
செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய் 
தேக்கிய கறியின் வகையும் 
தன்னிகர் தானியம் முதி ர்- கட்டித் 
தயிரோடு மிளகின் சாறும், 
நன்மதுரஞ் செய் கிழங்கு - காணில் 
நாவிலி னித்திடும் அப்பம், 
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை 
உணர்வை வளர்ப்பது தமிழே! 
-பாரதிதாசன்

ஒளவையார் பாடல்கள்

Wednesday 10 November 2010

| 2 comments
ஒளவையார் பாடல்கள்
ஒளவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த சங்கப்பெண் புலவர்களில்; முக்கியமானவர். தமிழ் மொழிக்காவும் இனத்துக்காவும் தன்னையே அர்ப்பணித்த அவர் அரிய பல நூல்களை இயற்றியுள்ளாh.; மூதுரை
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, ஆகியவை நமக்கு தற்போது கிடைத்துள்ள முக்கியமான நூல்களாகும்.இந்த நுல்கள் சிலவற்றில் ஒன்றுக் கொன்று முரணான கருத்துகள் சில இடம்பெற்றிருப்பதால் அவை பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இடைச் செருகல்களாக இருக்கலாம் என்ற கருத்தும்.ஒளவையார் சங்ககாலத்தில் அதாவது திருவள்ளுவருக்கு சமகாலத்தில் வாழந்தவர்  என்றும் அவர் பிற்காலத்தில் கம்பருக்கு சமகாலத்தில் வாழந்தவர் என்ற கருத்தும்  சில தமிழ் அறிஞர்களிடையே உண்டு
சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே ஒளவையார் ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருந்த போது களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.
ஒளவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற பெயர் கொண்ட தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொண்டு வந்து  ஒளவையாருக்குக் கொடுத்தாள்.
கூழை அருந்திய ஒளவையார் அந்த வீட்டின் சுவற்றிலே கரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:
அதில்  “தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே 
       மண்ணாவதுஞ் சோழ மண்டலமே" என்று எழுதியிருந்தது.
தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஒளவையார்.
“குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு தான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து தன் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டதாகவும்  அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்” என்றும் கூறிக் கரிக் கட்டியால் இவ்விரண்டு வரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் தான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.
அதைக் கேட்ட ஒளவையார் உடனே ஒரு கரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வரிகளின் கீழே கீழ்க்கண்ட வரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:
"பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும் 
 செம்பொற் சிலம்பே சிலம்பு."
ஒளவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.
தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஒளவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஒளவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஒளவையார் குலோத்துங்கனின் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஒளவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஒளவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,
"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"
என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஒளவையார்,
"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே 
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க் 
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே 
ஆரையடா சொன்னாயது."
தமிழில் "அ" என்பது எண் 8 ஐக் குறிக்கும் “வ" கால் பங்கைக் குறிக்கும். 8, மற்றும் கால்  இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.
எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.
"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற அனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

மூதுரை

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

நூல்

01. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
   என்று தருங்கொல்? என வேண்டா - நின்று
   தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
   தலையாலே தான் தருதலால்.
02. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
03 இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.
04 அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
05 அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.
06 உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.
07  நீர்ளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூலளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்.
08.நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
09 தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
10 நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
11 பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.
12 மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீருமாகாது அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்.
13 கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.
14 கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
15. வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்.
16 அடக்கமுடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
17.அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டியுறுவார் உறவு.
18 சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் 
மற்றல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?
19.ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி - தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.
20 உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
21 இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளேயாமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றமுரைக்கு மேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.
22.எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
23 கற்பிளவோடுப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப்போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 2
24 நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
25 நஞ்சுடடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
26 மன்னனும் மாசுறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
27.கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.
28 சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம் சிறியராயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியராவரோ மற்று?
29 மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமுமெல்லாம் - திரு மடந்தை
ஆம் போது அவளோடுமாகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.
30 சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
0000000000
ஆத்தி சூடி
கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடியமர்ந்த தேவனை 
ஏத்தியேத்தித் தொழுவோம் யாமே.

நூல்

1. அறஞ்செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண்ணெழுத் திகழேல்.
8. ஏற்ப திகழ்ச்சி.
9. ஐய மிட்டுண்.
10. ஒப்புர வொழுகு.
11. ஓதுவ தொழியேல்
12. ஒளவியம் பேசேல்.
13. அஃகஞ் சுருக்கேல்.
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனிநீ ராடு.
17. ஞயம்பட வுரை.
18. இடம்பட வீடெடேல்.
19. இணக்கமறிந் திணங்கு.
20. தந்தைதாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர்செய்.
23. மண்பறித் துண்ணேல்.
24. இயல்பலா தனசெயேல்.
25. அரவ மாட்டேல்.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகலா தனசெயேல்.
29. இளமையிற் கல்.
30. அறனை மறவேல்.
31. அனந்த லாடேல்.
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப் படவாழ்.
35. கீழ்மை யகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்ப தொழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட் டொழி.
43. கௌவை அகற்று.
44. சான்றோ ரினத்திரு.
45. சித்திரம் பேசேல்.
46. சீர்மை மறவேல்.
47. சுளிக்கச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வன திருந்தச்செய்.
50. சேரிடமறிந்து சேர்.
51. சையெனத் திரியேல்.
52. சொற்சோர்வு படேல்.
53. சோம்பித் திரியேல்.
54. தக்கோ னெனத்திரி.
55. தானமது விரும்பு.
56. திருமாலுக் கடிமைசெய்.
57. தீவினை யகற்று.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வ மிகழேல்.
61. தேசத்தோ டொத்துவாழ்.
62. தையல்சொல் கேளேல்.
63. தொன்மை மறவேல்.
64. தோற்பன தொடரேல்.
65. நன்மை கடைப்பிடி.
66. நாடொப் பனசெய்.
67. நிலையிற் பிரியேல்.
68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுகரேல்.
70. நூல்பல கல்.
000000
கொன்றை வேந்தன்
கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

நூல்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
14. கற்பெனப் படுவது சொல் திறம்பாமை
15. காவல் தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்றவிடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
26. சந்ததிக்கழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோட்கழகு
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்துறங்கு
34. சையொத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கரென்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பரென்பவர் தேம்பித் திரிவர்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
44. தேடாதழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்
48. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
51. நீர்கம் பொருந்திய ஊரகத்திரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
53. நூல் முறை தெரிந்து சீலத்தொழுகு
54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீர்hகாது
56. நைபவர் எனினும் நொய்யவுரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவராவர்
58. நோன்பென்பது கொன்று தின்னாமை
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடாயினும் காலம் அறிந்துண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கில்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கில்லை செற்றமும் சினமும்
000
நல்வழி
கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

நூல்

01 புண்ணியமாம் பாவம் போம் போன நாள் செய்தவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
02.சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
03.இடும்பைக்கிடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
04 எண்ணியொரு கருமம் யார்க்கும் செய்யவெண்ணாது
புண்ணியம் வந்தெய்த போது அல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.
05 வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
06 உள்ளதொழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு.
07 எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு.
08.ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்ததாயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.
09 ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.
10 ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
நமக்கும் அது வழியே நாம் போமளவும்
எமக்கு என்னென்று இட்டுண்டிரும்.
11 ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.
12.ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லைக் கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
13ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல்.
14 பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்துண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானமழியாது
உயிர் விடுகை சாலவுறும். 14
15 சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயமொரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
16 தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றேயறி.
17 செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கின்று
வெறும் பானை பொங்குமோ மேல்!
18.பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் - மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.
19 சேவித்தும் சென்றிரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.
20 அம்மி துணையாக ஆறு இழிந்தவாறொக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும்.
21 நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.
22.பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; - கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?
23 வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.
24 நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.
25 ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
26 மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.
27 ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.
28 உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.
29 மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர்.
30 தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாமொன்றா
வெறுத்தாலும் போமோ விதி.
31 இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய 
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.
32.ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.
33.வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
34 கல்லானே யானாலும் கைப்பொரு ளொன்றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.
35 பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.
36 நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.
37 வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்துமில்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.
38 நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
39 முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39
40 தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்

அவ்வையாரின் மூதுரை

| 0 comments

அவ்வையாரின் மூதுரை

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் . ஓர் அரசனைப் பார்க்க ஒரு புலவர் நெடுந்தூரம் நடந்து, களைத்து, புழுதி படிய வந்து சேர்ந்தார். அரசன் புலவருக்கு ஸ்னானம் செய்வித்து, புத்தாடை புனைந்து, வாசனைத் திரவியங்கள் பூசி அவரை தன்னிடம் அழைத்துவரும்படி சேவகனுக்கு கட்டளையிட்டார். அப்படியே அவன் செய்தான்.
 புலவருக்கு எண்ணெய் தேய்க்கும்போது அவர் சேவகனை நிறுத்தச் சொல்லி 'ஒருகையில் வைத்து எண்ணெய் தேய்க்கவேண்டாம்', இதை இப்படியே போய் அரசனிடம் சொல்லு என்று அவனை அனுப்பினார். சேவகனும் அப்படியே செய்தான். அரசனின் மதியூகத்தை சோதிக்கவே புலவர் அப்படிச் சொன்னார். அரசன் சேவகனிடம் 'புலவரை எங்கே இருத்தி எண்ணெய் தேய்த்தாய்?' என்று விசாரித்தார். அவன் 'கல்லுக்கும்பி'  என்றான். அரசனுக்கு புலவரின் அடிப்பாகம் நொந்திருக்கிறது என்பது விளங்கிவிட்டது. 'ஒரு கை' என்பதற்கு எதிர்ப்பதம் 'பலகை'. ஒரு கையில் வைத்து எண்ணெய் தேய்க்காமல் புலவரை 'பலகையில்' வைத்து எண்ணேய் தேய்க்கும்படி அரசன் கட்டளையிட்டான். புலவரும் அரசனின் மதிநுட்பத்தை வியந்து அவன் மேல் கவி பாடினார் என்பது கதை. கற்றவர் சொல்வது கற்றவருக்கே புரியும்

வெள்ளத்து அனைய மலர்நீட்டம்

| 0 comments








வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு       (குறள் 595)
வெற்றிக்கு முதற்படி உயர்ந்த இலக்கு என்று அடிக்கடி கூறுவேன். உயர்ந்த இலக்கைக் குறியாகக் கொண்டவர்கள் ஊக்கம் உடையவர்களாகத் திகழ்வார்கள். சாதனையாளர்களாக மாறுவார்கள். அவரது ஊக்கத்திற்கு இணையாக வாழ்க்கைச் சிறப்புக்கள் உயரும். ”வெள்ளத்தனைய மலர் நீட்டம், மாந்தர்தம் உள்ளத்தனையதுயர்வு” அல்லவா? எனவேதான் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்றார் வள்ளுவப் பெருந்தகை

கிணற்றுத் தவளை

| 0 comments
ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசியவர் நாம் ஒருவரையொருவர் தூற்றுவதை 
நிறுத்த வேண்டும் என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் 
இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை 
விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. 
அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அது சின்னஞ்சிறியது. அது கண்களை 
இழந்துவிட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்ல வேளையாக அங்கே பரிணாமவாதிகள் 
யாரும் இல்லை. நம் கதைக்காக, அற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். 
அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழுப்பூச்சிகளையும், கிருமிகளையும் 
மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப்படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் 
தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை 
தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்தால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது. 
ஒரு நாள் கடலில் வா‌ழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்த கிண‌ற்‌றில் 
விழுந்தது. 
`நீ எங்கிருந்து வருகிறாய்?' 
`கடலிலிருந்து' 
`கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா?' என்று கூறி, 
ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை. 
`நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று 
கேட்டது கடல் தவளை. 
கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, `உனது கடல் இவ்வளவு பெரிதாய் 
இருக்குமா?' என்று கேட்டது. 
`சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?' 
`நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றைவிட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. 
கண்டிப்பாக, இதைவிடப் பெரியதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை 
வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை. 
காலங்காலமாக இருந்து வருகின்ற கஷ்டம் இதுதான். நான் இந்து. நான் என்ற சிறிய 
கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறுதான் முழுவுலகம் என்று 
நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, 
தனது கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான். அவ்வாறு முகமதியனும் தன் சிறு 
கிணற்றில் உட்கார்ந்து கொண்டு அதுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான்.


அமரிக்கவில் சுவாமி விவேகானந்தர் சொன்ன கதை
| 1 comments

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!


சிந்தாநதி அவர்கள் மனோன்மணீயம் காவியத்தில் திரு.சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்த்தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் பகுதியைத் தன் பதிவில் இட்டிருந்தார். அந்தப் பகுதியிருலிருந்து எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்றையும் கொடுத்திருந்தார். அந்தப் பகுதிக்குப் பொருள் உரைத்தால் நலமாக இருக்கும் என்று தோன்றியதால் இந்த சிறு முயற்சி.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டம் இதில்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே

நீர் ஆர்ப்பரிக்கும் கடலினை ஆடையாக உடுத்தியிருக்கும் நிலமடந்தைக்கு அழகு கொஞ்சும் பெருமைகள் எல்லால் ஆர்ப்பரிக்கும் வதனம் (முகம்) எனத் திகழ்கிறது பரத கண்டமாகிய இந்தியா. இதில் தக்காணம் (தென்னிந்தியா) அந்த முகத்தில் இருக்கும் அதன் அழகுற்கு ஏற்ற பிறை போல் வளைந்த நெற்றி. திராவிட நல் திருநாடு அந்த நெற்றியில் தரித்திருக்கும் நறுமணம் கமழும் பொட்டு (திலகம்). அந்த கஸ்தூரித் திலக வாசனை போல் அனைத்து உலகத்தாரும் இன்பம் அடைய எல்லாத் திசையும் புகழ் மணக்க என்றும் இருந்த, இருக்கும், இருக்கப் போகும் தமிழ்ப்பெண்ணே.

இந்தப் பகுதியில் உவமையணி நன்கு அமைந்திருக்கிறது.

உலகம் - கடலாடை சூட்டியிருக்கும் நிலமடந்தை
பரத கண்டம் - அந்த நிலமடந்தையின் வதனம்
தக்காணம் - அந்த வதனத்தில் இருக்கும் நெற்றி
திராவிட நாடு - அந்த நெற்றியில் சூட்டிய திலகம்
தமிழ் - அந்தத் திலகத்தின் நறுமணம்.

பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்த படி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே

பற்பல உயிர்களையும் பற்பல உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் காத்தும் அழித்தும் எல்லாம் செய்தும் எல்லையில்லா இறைவன் எப்போதும் போல் குறைவின்றி இருப்பது போல் நீ இருக்கிறாய். எப்படி? கன்னடம், இன்பம் கொடுக்கும் தெலுங்கு, அழகு மிகும் மலையாளம், துளு என்று நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சியாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே? அதனை வியந்து வியந்து என்ன செய்வது என்பதையே மறந்து வாழ்த்திக்கொண்டே இருக்கிறோம்

இங்கும் உவமை அணி நன்கு அமைகிறது. எல்லா உயிர்களையும் உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் இறை எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது - அது போல் பல மொழிகளைத் தன்னுள் இருந்து படைத்தும் தமிழ் எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது. மற்ற மொழிகளைப் போல் அழிந்தொழியவில்லை.

கடல்குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே

கடலினைக் குடித்த குடமுனியாம் அகத்தியர் உன்னைப் படித்து உன் கரையைக் காண குருவினை நாடி உனக்கு வானத்தைத் தொடும் கடலை உவமையாகச் சொல்லுவது உனக்குப் புகழாகுமா? உன் புகழ் பெரும்புகழ். உப்புக்கடலைக் குடிக்கலாம்; ஆனால் தமிழ்க்கடலைக் குடிக்க முடியாது. அது வான் வரை உள்ளது என்கிறார்.

ஒரு பிழைக்கா அரனார் முன் உரை இழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.

ஒரு சிறு பொருட்பிழைக்காக முன்பொரு நாள் சிவபெருமான் என்ன சொல்வது என்று தெரியாமல் நெற்றிக்கண்ணை விழிப்பார் என்றால் இறையான சிவனுக்கே அறிய அரியது உனது இலக்கணம் என்று சொல்லுவதும் அற்புதமா?

விழிப்பார் என்று உலக வழக்கில் இருக்கும் ஒரு சொல்லை சிலேடையாக இங்கே சொல்லியிருக்கிறார்; நெற்றிக்கண்ணை விழித்ததைக் குறிப்பால் உணர்த்தி.

சதுமறை ஆரியம் வரும் முன் சகம் முழுதும் நினதாயின்
முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே

என்றுமுள்ளன வேதங்கள் என்று சொல்கிறார்கள். அந்த நான்கு மறைகளை உடைய ஆரியம் தோன்றும் முன் உலகம் முழுதிலும் நீ இருந்தாய் என்றால் உன்னை முதுமொழி என்றும் அநாதி என்றும் சொல்லுவதும் வியப்போ?

வேகவதிக்கு எதிர் ஏற விட்டது ஒரு சிற்றேடு
காலநதி நினைக் கரவா காரணத்தின் அறிகுறியே

வேகவதியாம் வைகையில் வேற்று மொழியில் எழுதிய நூல்களையும் தமிழ்ப்பா எழுதிய ஒரு சிற்றேட்டையும் விட்ட போது நதியின் வேகத்திற்கு எதிராக கரை ஏறியது என்றால் அது காலம் எனும் நதி உன்னை மறைக்காமல் (காலவெள்ளத்தில் அழிக்காமல்) விட்ட காரணத்தின் ஒரு அறிகுறியே.

கடையூழி வரும் தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே

உலகங்கள் எல்லாம் அழிந்து யாருமே இல்லாத போது இறைவன் மட்டுமே தனிமையாக இருப்பான். அந்தத் தனிமையின் துணையாக இருக்க வேண்டியே திருச்சிற்றம்பலம் உடையாரான சிவபெருமான் உன் வாசகமாம் திருவாசகத்தில் ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்.

தக்க வழி விரிந்து இலகும் சங்கத்தார் சிறுபலகை
மிக்க நலம் சிறந்த உன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே

தக்க நூற்களுக்கு மட்டும் வழி தந்து விரிந்தும் சுருங்கியும் இருக்கும் மதுரைத் தமிழ்ச்சங்கப் பலகை மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம்.

வியஞ்சனம் - குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்

வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.

கலைமகளுக்கு வடமொழியான ஆரியமும் தென்மொழியான தமிழும் இரு விழிகள். அவற்றிற்கு இடையே கொடிய வழக்கு (சண்டை சச்சரவு) தொடர்பவர்கள் கிழக்கு மேற்கு அறியாதவர்கள் - உலகம் அறியாதவர்கள்.

வீறுடைய கலைமகட்கு விழி இரண்டு மொழியானால்
கூறு வடமொழி வலமாகக் கொள்வார் குணதிசை அறியார்

பெருமை கொண்ட கலைமகளுக்கு விழிகள் இரண்டு மொழிகளும் என்றால் அவற்றில் வடமொழியை அவளின் வலக்கண்ணாகக் கூறுபவர்கள் குணதிசையாம் கிழக்கு எந்த திசை என்று அறியாதவர்கள்.

கலைமகள் தன் பூர்வதிசை காணும் கால் அவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்

கலைமகள் கிழக்கு நோக்கி நின்றால் அவள் விழிகளுள் வலதுவிழியாக வருவது தென்மொழியாம் தமிழ் தான் என்று அறிவுடையவர் அறியாரோ?

பத்துபாட்டு ஆதி மனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணம் இல் கற்பனையே

பத்துபாட்டு முதலிய நூற்களில் மனம் பற்றியவர்கள் எந்த வகையிலும் பொருள் இல்லாத இலக்கணம் இல்லாத கற்பனைகளைக் கூறும் நூற்களில் மனம் வைப்பார்களோ?

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி.

திருவள்ளுவர் செய்த திருக்குறளை குற்றம் இல்லாமல் நன்கு படித்து உணர்ந்து கொண்டவர்கள் மநு முதலிய ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் நூற்களை மனத்தில் கொள்ளுவார்களோ?

மனம் கரைத்து மலம் கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென்று உருவேற்றிக் கண் மூடிக் கதறுவரோ

மனத்தைக் கரைத்து நம் குற்றங்களை எல்லாம் நீக்கும் திருவாசகத்தில் ஆழ்ந்தவர்கள் கனபாடம் என்று சொல்லி வேதங்களையும் மந்திரங்களையும் உருவேற்றி கண் மூடிக் கதறுவார்களா?

வெள்ளை நிற மலிகையோ -விபுலானந்தர்

| 3 comments
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?
உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.


பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா? உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது

பூனைக்குட்டி

Tuesday 9 November 2010

| 0 comments

பூனைக்குட்டி




மியாவ் மியாவ் பூனைக்குட்டி

மீசை வச்ச பூனைக்குட்டி
பையப் பையப் பதுங்கி வந்து
பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி
பளபளக்கும் பளிங்குக் குண்டு
பளிச் சென்று முகத்தில் இரண்டு
வெளிச்சம் போடும் விழி கண்டு
விரைந்தோடும் எலியும் மிரண்டு
விரித்த பூவைக் கவிழ்த்ததுபோல
விளங்கும் பூனைக் காலடிகள்
இருந்து தவ்வ ஏற்றபடி
இயங்கும் சவ்வுத் தசைப்பிடிகள்
அழகு வண்ணக் கம்பளி யால்
ஆடை உடுத்தி வந்தது போல்
வளர்ந்து முடியும் பலநிறத்தில்
வந்து தாவும் பூனைக்குட்டி

கல்வி

| 0 comments

கல்வி

கல்வி என்பது
கண்களைத் திறப்பது!
கல்லாதிருப்பது
கண்களைத் துறப்பது!
செல்வம் அனைத்திலும்
சிறப்பிடம் வகிப்பது!
இல்லார்க் கெடுத்ததை
இறைப்பினும் மிகுப்பது!
எல்லா இடத்திலும்
ஏற்றம் அளிப்பது!
பொல்லா மடமையைப்
பூண்டோ டொழிப்பது!
அல்லும் பகலும்
அணையா விளக்கது!
கல்லில் பதியும்
கலையா எழுத்தது!
சொல்லில் கனிவு
சுவையைக் குழைப்பது!
வெல்லும் துணிவு
விவேகம் விளைப்பது

அன்பு தாயின் தாலாட்டு

| 0 comments

அன்பு தாயின் தாலாட்டு

ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே

பூவைப்போல சிரிக்க வேணும் பாப்பா

| 0 comments
பூவைப்போல சிரிக்க வேணும் பாப்பா-நீ
புகழ் பெறவே வளர வேணும் பாப்பா!
நல்லவற்றைப் படிக்க வேணும் பாப்பா-நீ
நடக்க வேணும் அதுபோல பாப்பா!
அன்னை தந்தை தெய்வமுனக்கு பாப்பா-நீ
அவர்கள் பாதம் பணிய வேணும் பாப்பா!
கூடி வாழப் பழக வேணும் பாப்பா
நம் கூட்டுறவே நாட்டுயர்வு பாப்பா!
நமது நாடு நமது கண்ணே பாப்பா-நீ
நாடு உயர உழைக்க வணும் பாப்பாஆ
உலகம் வியக்க உயர வேணும் பாப்பா-நீ
உறுதியோடு வெற்றி பெறுக பாப்பா

கதிரைமலைப்பள்ளு

Monday 1 November 2010

| 0 comments
பள்ளியா தத்தம் நாட்டுவளங் கூறல்

நஞ்சு போல்விழி மங்கையர் கூடி
நயங்கள் பேசி யிசைபாடி யாடி
பஞ்சு போலடி மெல்ல நடந்து
பணைத்த கொங்கை கனத்திடை தொய்ய
விஞ்சு கோதை விரித்து நறும்புனல்
மீது லாவிவி ளையாடக் கண்டு
மஞ்சு மஞ்சு மலையி லொளிக்கின்ற
மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 2

வஞ்ச வஞ்சியர் கற்பழித் தோர்மறை
வாண ராருயிர் மாய்த்தவ ரேனும்
செஞ்சொல் வேத விதியால் வருபுனல்
தேவ தேவன் திருக்காசி மேவித்
தஞ்ச நீணதி யென்று மனத்துன்னித்
தர்ப்ப ணம்புரிந் தாலவர் தங்கள்
பஞ்ச பாதக மெல்லாந் தொலைக்கும்
பகீரதா கங்கை நாடெங்கள் நாடே. 3

காசில் பொற்சிலம் பின்சிக ரத்தைக்
கால்வ றித்தே யெறிந்திட வந்த
மாசில் தென்கோண மாமலையைச் சூழும்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே. 4.

வரமு டைக்கபி லன்முன் னெரித்தநல்
வன்மைச் சாகர ரின்சுவர்க் கம்பெறப்
பரம னைத்தவம் பண்ணியே பெற்ற
பகீரதா கங்கை நாடெங்கள் நாடே

ஈழத்து பூதந் தேவனார்

| 0 comments
அகநானூறு, குந்தொகை, நந்றிணை ஆகிய நூல்களிலே மொத்தம் ஏழு பாடல்கள் பூதன்றேவனாராற் பாடப்பட்டுள்ளன. அவை பாலை, குறிஞ்சி ஆகிய திணை வகையை விளக்குவன.


குறிஞ்சி

இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகந்
தோழி சொல்லியது

முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல் உ­இய பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக்
கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய 5
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்
நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
சென்றனன் கொல்லோ தானே குன்றத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள்மலிபு இழிதருங் காமர் கடாஅம் 10
இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்து
இருங்கல் விளரளை அசுணம் ஓர்க்குங்
காம்புபயில் இறும்பிற் பாம்புபடத் துவன்றிக்
கொடுவிரல் உளியங் கெண்டும்
வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே. 15
- அகநானூறு

தலைமகள் சிறைப்புறத்தானாக வெறியஞ்சிய தோழிக்குச்
சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது.

வெறியென உணர்ந்த வேலன் நோய்மருந்து
அறியா னாகுதல் அன்னை காணிய
அரும்பட ரெவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரற்
பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல் 5
உண்கிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்புஞ் சோலை
இலங்குமலை நாடன் இரவி னாமே.

- குறுந்தொகை - 360

பாலை

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத்
தோழி சொல்லியது

செறுவோர் செம்மல் வாட்டலுங் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கு முதவி யாண்மையும்
இல்லிருந்து அமைவோர்க்கு இல்லென்று எண்ணி
நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்ததோர் 5
படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கைக்
கள்ளியம் பறந்தலைக் களர்தொறுங் குழீஇ
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை
வெஞ்சுரம் இறந்தன ராயினும் நெஞ்சுருக
வருவர் வாழி தோழி பொருவர் 10
செல்வமங் கடந்து செல்வா நல்லிசை
விசும்பிவர் வெண்குடைப் பசும்பூட் பாண்டியன்
பாடுபெறு சிறப்பிற் கூட லன்னநின்
ஆடவண்டு அரற்று முச்சித்
தோடர் கூந்தல் மரீஇ யோரே.
- அகநானூறு - 231


பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளைச்
செலவு விலக்கியது.

சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்
பகலுங் கங்குலு மயங்கிப் பையெனப்
பெயலுறு மலரிற் கண்பனி வார
ஈங்கிவள் உழக்கும் என்னாது வினைநயந்து 5
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை
அடுமுரன் தொலைத்த நெடுநல் யானை
மையலங் கடா அஞ் -ருக்கிமதஞ் சிறந்து
இயக்குநர்ச் செகுக்கு மெய்படு நனந்தலைப்
பெருங்கை யெண்கினங் குரும்பி தேரும்
புற்றுடைச் சுவர புதலியவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழைமையிற் றுறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுத லாறே.
- அகநானூறு 307

வினை தலைவைக்கப்பட்டவிடத்துத் தலைமகன்
பாகற்கு உரைத்தது

இன்றை சென்று வருவது நாளைக்
குன்றிழி யருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
காலியற் செலவின் மாலை யெய்திச் 5
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மா ணாகம் மணந்துவக் குவமே.
- குறுந்தொகை - 189


தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது.

நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புவலிப் பகுவா யேற்றை
வெண்கோடு செம்மறுக் கொளீஇய விடர்முகைக்
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை 5
வாடுஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரு மாறே.
- குறுந்தொகை - 343

உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

அரவுக்கிளர்ந் தன்ன விரவுறு பல்காழ்
வீடுறு நண்துகில் ஊடுவந்து இமைக்குந்
திருந்திழை யல்குற் பெருந்தோட் குறுமகள்
மணியேர் ஐம்பால் மாசறக் கழீஇக்
கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி 5
மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த
இரும்பல் மெல்லணை யொழியக் கரும்பின்
வேல்போல் வெண்முகை விரியக் கரும்பின்
வேல்போல் வெண்முகை விரியத் தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை
மூங்கி லங்கழைத் தூங்க ஒற்றும் 10
வடபுல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழியிவ் வுலகத் தானே
- நற்றிணை - 366

சின்னத்தம்பிப் புலவர்,

| 1 comments
சின்னத்தம்பிப் புலவர், நல்லூர் - Nallur Sinnathamby Pulavar 18ம் நூற்றாண்டு:

அக்காலத்திலே குலத்தாலும் செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய வில்லவராய முதலியார் என்பவர் ஒருவர் நல்லூரில் இருந்தார். கூழங்கைத் தம்பிரான் இவ்வில்லவராயர் முதலியார் வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகால§க்ஷபஞ் செய்து வந்தனர். முதலியார் புத்திரன், தம்பிரான் கால§க்ஷபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர் என்றால் அப்புத்திரனுடைய விவேகம் இவ்வளவென்று சொல்லவேண்டுமா? ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,

பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்

நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை

வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்

வாசலிடைக் கொன்றை மரம்.


என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனாரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக் கூறிக் கட்டித்தழுவி உச்சி மோந்து சென்றனர். அப்புத்திரனாரே சின்னத்தம்பிப் புலவர். அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய மேல்வருங்கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது:

செந்தா தியன்மணிப் பூம்புலி யூரரைச் சேர்ந்துநிதம்

சிதா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்

நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்

அந்தாதி மாலையை வேதாட வேசர்க் கணிந்தனனே

ஈழத் தமிழ் இலக்கியம்

| 0 comments
தமிழ் நாட்டிலே தமிழ் வரலாறு அகத்தியரிலிருந்து தொடங்குகின்றது. ஈழநாட்டிலே தமிழ் இலக்கிய வரலாறு அரசகேசரியிலிருந்து தொடங்குகின்றது.ஆங்கிலேயரும் அவர்களுக்கு முன் ஒல்லாந்தரும் அவர்களின் முன் போர்த்துக்கீசரும் ஈழநாட்டை ஆண்டார்கள். இற்றைக்கு நானூறு வருடங்களிற்கு முன் அதாவது போர்த்துக்கீசருக்கு முன் ஈழநாட்டை தமிழரும் சிங்களவரும் ஆண்டு வந்தார்கள். யாழ்ப்பாணத்திலே தமிழரசாங்கம் நடைபெற்று வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என்று பெயர் வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தை தமிழரசர்கள் நீண்டகாலம் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்தார்கள். பரராசசேகரன் என்ற தமிழரசன்காலம் சுட்டியுணரத்தக்க சிறப்பு வாய்ந்தது. அவனுக்கு உறவினன் செகராசசேகரன். மருகன் அரசகேசரி. இவர்கள் காலத்திலே யாழ்ப்பாணத்து நல்லூரிலே ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. நல்லூர் இராசதானி. சங்கத்திலே புலவர்கள் பலர் அங்கத்தவர்களாய் இருந்தார்கள். தமிழ் இலக்கண இலக்கியங்களே யன்றி சோதிடம் வைத்தியம் முதலியனவும் வேறுபல கலைத்துறைகளும் அந்தச் சங்கத்தால் வளர்க்கப்பட்டன.

நல்லூருக்கு அண்மையிலே நாயன்மார்கட்டு என்ற இடத்திலே வயல்களுக்கு மத்தியில் அழகியதொரு தாமரைத்தடாகம் இருக்கின்றது. அத்தடாகத்துக்கு தென்மேற்கு மூலையிலே ஒரு மேலடுக்கு மாளிகையில் அரசகேகரி வசித்து வந்தார். அவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மகாவித்துவான். தமிழிலே அவரியற்றிய இரகுவமிசம் என்ற காவியம் வடமொழியிலே காளிதாச மகாகவி இயற்றிய இரகுவமிசத்தின் மொழிபெயர்ப்பு. தமிழிரகுவமிசத்தை மேலே குறிப்பிட்ட மாளிகையிலிருந்து அரசகேசரி இயற்றினாரென்றும், நல்லூரிலுள்ள தமிழ்ச்சங்கத்திலே பரராசசேகரன் முன்னிலையில் அரங்கேற்றினார் எனவும்
கூறுவர்.

இந்த இரகுவமிசத்தை பரிசோதித்து அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவர் வித்துவசிரோமணி ந.ச. பொன்னம்பலப்பிள்ளை. அவர் அதனை பலருக்கு பாடம் சொல்லியும் வைத்தார்.

இரகுவமிசத்திலே அழகியனவுங் கடினமானவையுமான செய்யுள்களை தெரிந்து அவைகளை வடமொழி இரகுவமிசத்தோடு ஒப்பிட்டாராய்ந்து, அவற்றிற்கு ஒரு குறிப்புரையும் இயற்றி, இரகுவமிசக்கருப்பொருள் என்ற நூல் வெளியிட்டார் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர். இந்நூல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழிலே தொடர்ந்து வெளிவந்தது.

வித்துவசிரோமணியையும் புலவரையும் தமது வித்தியா குரவர்களாக பெற்று, அவர்கள் வழியைத் தொடர்ந்தார் மகாவித்துவான் கணேசையர். ஐயர் அவர்கள் அரசகேசரி இயற்றி இரகுவமிசத்திற்கு ஒரு நல்லுரை கண்டிருக்கின்றார்கள்.

அரசகேசரியிலிருந்து நம் கண்முன்னிருந்த கணேசையர் பரியந்தம் ஓரிலக்கியவழி தொடர்ந்து வந்திருக்கின்றது என்பது ஊகிக்கத்தக்கது. இந்த வழி இடையிடையே செடிகொடிகளால் மறைந்து தொடர்பு புலப்படாது போனாலும், வழியொன்று எவ்வாறோ தொடர்புற்று வந்திருக்கின்றது என்பதற்குச் சான்றுகள் உண்டு.

அரசகேசரியிலிருந்து போர்த்துக்கீசர் காலம் முடிய ஒல்லாந்தர் காலம் வரை தமிழிலக்கிய வழி புலப்பாடிலதாயினும் ஆங்காங்கே புலவர்கள் தலைமறைவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு பெருஞ்சான்றாக விளங்குகின்றார் சின்னத்தம்பிப்புலவர். அவர்காலம் இற்றைக்கு 240 வருடங்களுக்கு முந்தியது. தக்கதொரு இலக்கண இலக்கிய வழியிலே புலமை கனிந்த பரம்பரையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பிப்புலவர் என்பதனை அவரியற்றிய நூல்கள் கொண்டு சாதிக்கலாம். 'கல்லாமற் பாதி குலவித்தை' என்கின்ற பழமொழியும் ஒரு பரம்பரையின் ஆவசியகத்தை தெரிவிப்பதாயிருக்கின்றது.

மகாவித்துவசிரோரத்தினமாய் விளங்கியவரும், சொற்குற்றம் பொருட்குற்றம் முதலிய வழுக்களை நுண்ணிதின் ஆராய்ந்து தூய்மை செய்வதில் இணையற்றவரும், ஆதலினால் தோடஞ்ஞர் என்று பாராட்டப்பட்டவருமான சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், தம் மாணவரின் கசடுகளை போக்கி, அவர்களை இலக்கிய இலக்கண வரம்பில் நடத்துவதற்கு முதலில் படிக்கும்படி வதிக்கும் புத்தகங்கள் இரண்டு. ஒன்று மறைசையந்தாதி், சின்னத்தம்பிப்புலவர் இயற்றியது. மற்றையது கலைசைச் சிலேடை வெண்பா. மறைசையந்தாதியிலே புலவருக்கு ஆராமை அதிகம். அதில் வரும் சொற்கள் தொடர்களை அடிக்கடி சொல்லி சொல்லிச் சுவைப்பார் புலவர். தோடஞ்ஞரான புலவர் அவர்கள் கொண்டாடுவதிலிருந்தே மறைசையந்தாதியி்ன் தமிழ்வரம்பு மரபு எத்தகையது என்பது உணரத்தக்கது. (தோடம் - தோசம், ஞர் - அறிபவர், ஆராய்பவர்). சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய பறாளை விநாயகர் பள்ளுச் சாதாரண நாட்டுப்பாடல்களின் வரிசையில் வைத்து மதிக்கற் பாலது போன்று கல்லாதாரையும் இனிக்கச் செய்வதொன்றாயினும், அதன் செந்தமிழ் வளம் வித்துவான்கள் கைகூப்பி வணங்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது.

இவ்வாறான புலமை, அரசகேசரியிலிருந்து தொடங்கித் தலைமறைவாக நடந்துவந்ததொரு இலக்கியவழி, அடங்காது கிளர்ந்தெழுந்ததோர் எழுச்சியன் பெறுபேறேயாம்.

சின்னத்தம்பிப் புலவர் காலத்திலே 'சிவராத்திரி புராணம்' இயற்றிய வரதபண்டிதர் சுன்னாகத்திலிருந்தவர். 'யாழ்ப்பாண வைபவம்', 'புலியூரந்தாதி' என்னும் நூல்களியற்றிய மயில்வாகனப்புலவர் மாதகலிலிருந்தவர். பண்டிதரும் புலவரும் நிறைந்த புலமையுடையவர்கள். தலைமறைவாயிருந்து வந்த இலக்கிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்பதிற் சந்தேகமில்லை.

சின்னத்தம்பிப் புலவருக்குப் பிறகு ஒல்லாந்தர் காலம் முடிந்து ஆங்கிலேயர் காலத்திலுந் தொடக்க காலம் வரை இலக்கண இலக்கிய பரம்பரைவழி மறைவாயேயிருந்தது. ஆயினும் ஒல்லாந்தர் காலம் ஆங்கிலேயர் காலம் ஆகிய இரு காலங்களி்ன் பொருத்தத்திலும் இருந்தவர் முத்துக்குமார கவிராயர். இவர் உடுவிலையும் சுன்னாகத்தையும் சேர்ந்தவர். இவருடைய புலமை சந்தர்ப்ப விசேடத்தால் மணலில் மூடுண்டு மூழ்கிப்போகாமல் திடீரென்று வீறிட்டெழுந்து பிரவாகித்து விட்டது. இவரியற்றிய நீண்ட ஆசிரிய விருத்தங்கள் தாயுமானவரின் விருத்தங்களே என்று சொல்லத்தக்க வகையிற் சற்றேனும் எடைவிடாமற் செந்தமிழ் வளங்கொழித்து ஒழுகி வழிபவை. இவர் காலத்திலேயே இருபாலையில் இருந்தவர் சேனாதிராய முதலியார். சிறந்த புலமை கனிந்தவர் முதலியார்.

முத்துக்குமார கவிராயர், சேனாதிராய முதலியார் இருவரும் யாழ்ப்பாணத்தின் இரு கண்கள். தமிழ் வளர்ச்சி தமிழிலக்கண இலக்கியவழி ஆகிய இவைகளின் இருபெருந் தந்தையர்கள் இவர்கள். 'தக்கார்' என்று வள்ளுவனார் வாயூறுகின்ற வார்த்தைக்கு பாத்திரமாகும் வாய்ப்பு இவர்களுக்கு வாய்த்து விட்டது. இந்த நாட்டிலே எச்சத்தால் உயர்ந்து விட்டார்கள் இவர்கள். எச்சம்- சந்ததி, வழி.

சி. வை. தாமோதரம்பிள்ளையைத் தமிழ் தந்த தாமோதரம்பிள்ளை என்று தமிழ் உலகு தலைமேல் வைத்து கொண்டாடும்படி வைத்தவர் முத்துக்குமார கவிராயர். கவிராயரின் எச்சம் தாமோதரம்பிள்ளை. எச்சம் என்பது இங்கே மாணவர் எனும் பொருட்டு. மாணவரும் புத்திரரே. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் கவிராயரின் உதிர பரம்பரையில் வந்தவர்.

கற்றோரும் மற்றோரும் இனிக்கத்தக்க வகையிற் செந்தமிழ் வசனநடையைத் தொடக்கிவைத்துச் செய்யுணடையிலிருந்து தமிழுக்கு மறுமலர்ச்சி செய்த பரோபகாரசீலர் சிறீலசிறீ ஆறுமுகநாவலர் அவர்கள். நாவலர், சேனாதிராய முதலியாரின் எச்சம், மாணவர்.

நாவலர், பிள்ளை ஆகிய இவர்கள் காலத்திலே வேறு வித்துவ பரம்பரைகளும் மறைவிலிருந்து வந்தன என்பதற்கு உதாரணமாக ஆங்காங்கே பலர் பிரகாசித்துக்கொண்டிருந்தார்கள். உடுப்பிட்டியிலே சிவசம்புப்புலவர் இருந்தார். அவர் மாணவர் முருகேசபண்டிதர். பண்டிதரின் மாணவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர். நீர்வேலியிலே சிவசங்கர பண்டிதர் இருந்தார். இவர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் தருக்க சமய சாத்திரங்களிலும் மாமேதை. நாவலர் அவர்களுக்கு வலக்கரம்போலுதவியவர் இந்த சிவசங்கரபண்டிதர்.

சென்னை சர்வகலாசாலை தொடங்கியது 1850 இற்கு பிறகு. அதற்கு முன்னமே யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையிலே செமினரி என்று வழங்கிய கல்லூரியிலே ஆங்கிலமுஞ் சாத்திர பாடங்களும் நன்கு கற்பிக்கப்பட்டன. அங்கே படிக்கப் புகுந்தவர்களுட் பலர் முன்னமே மறைவிலிருந்த தமிழ்ப்புலவர்களிடம் இலக்கண இலக்கியங்கள் முறையாகக் கற்றுத் தெளிந்தவர்கள். அவர்கள் தமிழ்மயமாயிருந்து கொண்டே ஆங்கிலமுஞ் சாத்திர பாடங்களுங் கற்றார்கள். ஆகையினாலே, இந்த நாட்டுக்கேயன்றித் தாய்நாட்டுக்கும் வழிகாட்டிகளாய் அவர்கள் விளங்கினார்கள். சி. வை. தாமோதரம்பிள்ளையின் தமிழ்த்தொண்டு பிரகாசிப்பதற்கு வட்டுக்கோட்டைப் படிப்பு உறுதுணை புரிந்தது.

மதுரைத்தமிழ்ச்சங்கத்தார் அச்சிட்ட தமிழகராதி, அகராதிகளுக்கு வழிகாட்டியாய், வித்துவான்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானது. ஒவ்வொரு சொல்லுந் தக்க பிரமாணங்கொண்டு தூய்மை செய்தது. இந்த அகராதியை ஆக்கியவர் நீதிபதி கதிரைவேற்பிள்ளை. இவர் சுன்னாகம் குமாரசாமிப்புலவர் தலைமையில் அறிஞர்கள் பலரின் உதவி கொண்டு இவ்வகராதியை ஒழுங்கு செய்தார். தமிழர் என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டவர் மல்லாகம் கனகசபைப்பிள்ளை. இந்நூல் தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு எழுதுபவர்களுக்கு அடிநிலையாய் உதவுவது. நியாயஇலக்கணஞ் செய்தார் வட்டுக்கோட்டை முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை. வீசகணிதம் செய்தார் சுதுமலை விசுவநாதபிள்ளை. இங்ஙனம் தமிழாக்கஞ் செய்தார் பலர்.

சி. வை. தாமோதரம்பிள்ளைதான் டாக்டர் சாமிநாதையரின் பழந்தமிழ்த்தொண்டுக்கு வழிகாட்டி. 1885 இல் தொல்காப்பியம் தாமோதரம்பிள்ளை பதிப்பு முழுவதும் உரையுடன் வெளிவந்துவிட்டது. 'இலக்கண விளக்கம்' , 'வீரசோழியம்' , 'இறையனார் களவியல்' முதலியன அதற்குமுன்னமே தாமோதரம்பிள்ளை பதித்து விட்டார். 1885க்குப் பிறகு கற்றறிந்தோரேத்துங் கலித்தொகையை அச்சிடுகிற காலத்திலேதான், தாமோதரம்பிள்ளையைத் தொடர்ந்து அவருடன் பழகி அவர் தூண்டுதலாற் சாமிநாதையர் பதிக்கத் தொடங்கினார். ஐயர் அவர்களின் முதற்பதிப்பு சீவகசிந்தாமணி. 1887ம் ஆண்டிற் பதித்தது.

தாமோதரம்பிள்ளையின் சேனாவரையப்பதிப்பு வெளிவந்தது 1868ம் ஆண்டில். அப்பொழுது சென்னைப்புலவர் சிலருக்கு ஒருவகைக் கொதிப்பு உண்டாயது. அவர்கள் திரைமறைவிலிருந்து ஒருவரைத் தூண்டித் தாமோதரம்பிள்ளையைத் தூறறிக் கண்டனப்பத்திரிகைகள் விடுத்தார்கள். அதனைக்கண்ட ஆறுமுக நாவலர் அவர்கள் 'நல்லறிவுச்சுடர் கொளுத்தல்' என்ற துண்டுப் புத்தகத்தை வெளியிட்டு்த் தாமோதரம்பிள்ளைக்கு ஊக்கம் அளிததார்கள். அப்புத்தகத்தில் உள்ள சில வசனங்கள் ஈண்டு ஞாபகப்படுத்தத்தக்கவை.

"இச் சென்னை சர்வகலாசாலையிலே தலைமைத் தமிழ் வித்தியா போதகராயுள்ள கனம்பொருந்திய பார்சிவல் துரை யாழ்ப்பாணத்திலே தமிழ் கற்றுக்கொண்டவர். சென்னை நார்மஸ்கூலில் தமிழ் வித்தியா போதகராய் முன்னிருந்த மாசிறீ செளந்தரநாயகம் பி்ள்ளை அவர்களும் இப்போதிருக்கிற மாசிறீ வேலுப்பிள்ளை அவர்களும் யாழ்ப்பாணத்தவர்கள். இங்கிலீசினின்றுந் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ் நாடெங்குமுள்ள கெவர்மென்ட் பாடசாலைகளெங்கும் வழங்குந் தமிழ்ப் புத்தகங்களுக்கு ஆசிரியராகிய மாசிறீ விசுவநாதபிள்ளை யாழ்ப்பாணத்தவர்.

தமிழிலே ஹேமாத்திரிகற்பம், இரகுவமிசம், இராமேசர்பிள்ளைவிடுதூதூ, செகராசசேகரம், பரராசசேகரம், அமுதசாகரம், தக்சிணகைலாச புராணம், சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பரகிதம், புலியூர்யமகவந்தாதி, கல்வளையமகவந்தாதி, மறைசையந்தாதி, திருவண்ணைக்குறவஞ்சி, திருமாவைக்குறவஞ்சி, திருநாகைக் குறவஞ்சி, திருநல்லைக் குறவஞ்சி, திருநல்லைக் கிள்ளைவிடு தூது, திருநல்லை வெண்பா, திருநல்லையந்தாதி, வேதாந்த செயஞ்சோதி, நியாயலக்கணம், வீசகணிதம், விரிவகராதி முதலியன யாழ்ப்பாணத்தாராற் செய்யப்பட்டன.

மதுரைச்சங்கத்தும், புதுவைச்சங்கத்தும், சென்னைச்சங்கத்தும் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய களத்தூர் வேதகிரி முதலியார் 'உதயதாரகை'ப் பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்திய 'யாழ்ப்பாணச் சிறப்பு' என்னுங் கடிதத்தில் பிற பாசை கலவாது சுத்தச் செந்தமிழ் பேசுவோர் யாழ்ப்பாணத்தார்களே யெனவும் மற்றைத் தேசத்தார்களெல்லோரும் தமிழோடு பல பாசையும் கலந்து பேசுகின்றார்களெனவுங் கூறியிருக்கின்றார்.

சிதம்பரத்திலே ஞானப்பிரகாசம் எனுங் குளஞ்செய்தவித்தவரும், சமஸ்கிருதத்திலே பெளஷ்கராகம விருத்தி, சிவஞானபோதவிருத்தி, சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை, பிரசாத தீபிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோகசாரம், சிவயோகரத்நம், சிவாகமாதி மகான்மிய சங்கிரகம் என்பவைகளையும், தமிழிலே சிவஞானசித்தியாருக்கு ஓருரையும் இயற்றினவரும், திருவண்ணாமலை யாதீனத்திற் பலருக்குச் சைவாகமோபதேசஞ் செய்தருளியவருமாகிய சிறீ ஞானப்பிரகாச முனிவர் யாழ்ப்பாணத்தவர்."


இவை நாவலர் எழுதியவை.

நாவலர் அவர்களை, 'தமிழ்நாடு முழுவதும் இணையில்லாதவர்' என்று, தாமோதரம்பிள்ளை எழுதியிருக்கின்றார். தமிழுக்குஞ் சமயத்துக்கும் உறையுளாய் அக்காலத்திலிருந்த திருவாடுதுறையாதீனம் முதலிய ஆதீனங்களும், தமிழை வளர்த்த இராமநாதபுர சமஸ்தானமும் நாவலர் அவர்களைப் பொன்னேபோற் போற்றியதை யாவரும் அறிவர்.

கற்றுணர் புலவ ருட்களிக்கும்
முற்றுண ராறுமுக நாவலனே


என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களும்,

என்னுளங் குடிகொண் டிருக்கும்
முன்னுசீ ராறுமுக நாவலனே


என்று பிள்ளையின் தலைமாணவரான தியாகராச செட்டியார் அவர்களும் நாவலர் அவர்களை போற்றினார்கள்.

நாவலர் அவர்களுக்குப் பிறகு அவர் மாணவரான கோப்பாய் சபாபதி நாவலர் மதங்கொண்ட களிற்று யானைபோலத் தமிழ்நாடு முழுவதிலும் தமக்கிணையின்றித் திக்கு விஜயஞ் செய்து செந்தமிழ் மழை பொழிந்தார். அவரியற்றிய 'திராவிடப் பிரகாசிகை' யின் மிடுக்கு பதிற்றுப்பத்து என்கின்ற சங்கப்பாட்டின் மிடுக்கோடு ஒப்பிடத்தக்கது.

நாவலரின் மாணவரில் ஒருவர் காசிவாசி செந்திநாதையர். தமிழுக்குச் சாமிநாதையர் போலச் சித்தாந்தத்துக்குச் செந்திநாதையர் என்று பாராட்டும்படி அவர் திகழ்ந்தார். அவரியற்றிய நூல்கள் பல. நாவலர் வழியின் வழியில் வந்த நா. கதிரைவேற்பிள்ளை மாயாவாததும்சகோளரி சதாவதானி. திரு. வி. கலியாணசுந்தர முதலியாரின் கணீர் என்ற பேச்சுத் தமிழுக்குக் கதிரைவேற்பிள்ளை தந்தை.

அரசகேசரியில் இருந்து தொடங்கிய இலக்கிய வழி சின்னத்தம்பிப் புலவரூடாக நடந்து, முத்துக்குமார கவிராயர் சேனாதிராய முதலியார் என்கின்ற இரு கிளைகளாய், எச்சங்களாலுயர்ந்து, வழிவழி சிறந்து வளர்ந்து வந்த வரலாறு ஒருவாறு காட்டப்பட்டது. சிறிய கிளைகளும் கிளைகளின் கிளைகளும் பல.

தெல்லிப்பழை வித்துவான் சிவானந்தையரும் திருநெல்வேலித் தர்க்க குடார தாலுதாரி தம்பு என்பவரும் விவேகத்திற் சோழவந்தான் சண்முகம்பிள்ளைக்கு இளைத்தவரேயல்லர். 'இராமநாத மான்மியம்', 'அருணாசல மான்மியம்', 'இலங்கை மான்மியம்' என்கின்ற நூல்களியற்றிய சாவகச்சேரிப்புலவர் பொன்னம்பலப்பிள்ளையும், அளவெட்டியிற் சத்தா என வழங்கும் சற்குணசிங்கமும் புராணங்கள் காவியங்கள் இயற்றவல்ல செந்தமிழ்ச் செல்வர்கள். இன்னும் குடத்துள் விளக்கம் போலிருந்து போனவர் பலர்.

கவிதையுலகிற் சின்னத்தம்பிப்புலவர், முத்துக்குமார கவிராயர், சேனாதிராய முதலியார், சிவசம்புப்புலவர், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ஐவரும் யாழ்ப்பாணத்தின் பஞ்சரத்தினங்கள்.

யாழ்ப்பாணத்திலே தமிழ்வளங்கும் ஈழமண்டலமனைத்தும் அடங்கும். வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் திருகோணமலை மட்டக்களப்பு எனும் இடங்களில் உள்ளவர்களும் இனத்தாலும் கல்வியாலும் யாழ்ப்பாணத் தொடர்புள்ளவர்களே. சுவாமி விபுலானந்தர் அவர்கள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்கின்ற வேற்றுமையின்றி யாழ்ப்பாணத்தவராயே வாழ்ந்தார்கள்.

இலக்கியவழியிற் சுவாமிகளின் பங்கு மிகப்பெரியது. சுவாமிகளின் செய்யுள்கள் அனைத்துந் தொகுத்து நீண்டதொரு விமரிசனஞ் செய்தல் வேண்டும். சுவாமிகளியற்றிய வெள்ளைநிற மல்லிகை என்ற பாட்டு தேசிய விநாயகம்பிள்ளையின் அம்மா வென்குது வெள்ளைப்பசு என்பதனோ டொப்பிடத்தக்கது. அதன் தத்துவக் கருத்து பாரதியாரின் தின்னப் பழங்கொண்டு தருவான் என்கின்ற கண்ணன் பாட்டை ஊடுருவுகின்றது. அஞ்சினார்க்கு சதமரணம் என்கின்ற குறள் வெண்செந்துறை வீரம்கொப்பளிக்கின்றது. அது மனோன்மணீயஞ் சுந்தரம்பிள்ளையின் சிவகாமி சரிதையோடொப்பிடற் பாலது. சுவர்க்க நீக்கப் பாடல் பாரதியாரின் குயிலேதான் என்று சொல்லத்தக்கது. 'தாழ்ந்து மென்மொழி பகரந்திடேல்' என்கின்ற கம்பீரமான பாட்டு - யூலியசீசர் கூற்றாய் வருவது, சீவகசிந்தாமணி பாடல்களோடு ஒப்பிடத்தக்கது. 'துருவன் அனையன் ஒருவனீங் குளனால்' என்ற சீசரின் தலையெடுப்பான கூற்று புறநானூற்று வரிசையை சேர்ந்தது. இவ்வாறே 'சிலப்பதிகார' த்தில் வரும் இனிய பாடல்கள் கலித்தொகைப்பாடல்கள் என்றிவைகளின் வரிசையில் வைத்து சுவைத்தற்குரிய சுவாமிகளின் பாடல்கள் எண்ணில. மட்டக்களப்பு வாவியின் மீன்பாடல் அழியாநிலை படைத்தது. இவ்வாற்றால் இலக்கியவழி சுவாமிகளை அணுகிய வழிப் புத்தம்புதியதொரு வழியாய் கீழிருந்து மேலே மெல்லென உயர்ந்து வீரங்கிளர்ந்து செல்வதனைக்காணலாம். அதனைச் சொல்லுவதொரு தனித்த விமரிசன நூல் மிகமிக இன்றியமையாதது.

ஈழமண்டலத்தின் இலக்கிய வழியிலே ஒழுகி வழிந்த இரசனைப்பெருக்கு ஒய்யாரமாய் எழுந்த விளையாடிய மலையடுக்கங்களுள் உயர்ந்து விளங்குவதோர் இராசசிகரம், நாவலர் அவர்களின் மருகரும் மாணாக்கருமாகிய பொன்னம்பலபிள்ளையே யாவார். அவரைப் 'பொன்னம்பலப் பெயர்ப் புட்கலாவர்த்தம்' என்று வர்ணிக்கின்றார் அவருடைய தலைசிறந்த மாணவரும் புலவருமான ஒருவர். புட்கலாவர்த்தம் - பொன்மழை பொழியும் மேகம்.

இப்புத்தகம் பொன்னம்பலப்பிள்ளையை மத்தியாக வைத்து அவர் காலத்து சிவசம்புப் புலவரையும் அதற்கு முன் சின்னத்தம்பிப்புலவர் பரியந்தமானவர்களையும் சிவசம்புப் புலவருக்குப் பின் நமது காலத்திலிருந்த சோமசுந்தரப்புலவர் மகாலிங்கசிவம் என்பவர்களையும் இலக்கியவழி ஊடுருவி நடப்பதை ஒருவாரு சுட்டிக்காட்டுவது. இவ்வாற்றால் ஈழமண்டலத்தின் இலக்கியப்புதையல் உற்று நோக்கத்தக்கது.

ஈழமண்டலம் தாய்நாடாகிய தமிழ்நாட்டின் ஒரு சிறுதுளி. தமிழ்நாட்டின் இலக்கியவளம் மகாசமுத்திரம். ஈழமண்டலத்திலக்கியவழி அந்த மகாசமுத்திரத்திற் சென்று சேராதாயின் நின்று வற்றி விடும். ஆகையினாலே இரட்டையர், காளமேகம், புகழேந்தி என்று தொடங்கிச் சிவகாமி சரிதைக்கு வந்து பின் மேலே எழுந்து கம்பரிலே சற்றுநேரந் தரித்துத் திருவள்ளுவரை வணங்கி நல்வாழ்வு பெற்றுக் கற்றோரேற்றும் கலித்தொகையைத் தீண்டி முற்றுகின்றது 'இலக்கிய வழி' எனப் பெயரிய இப்புத்தகம்.

பொதுவாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை நாடுவார்க்குஞ் சிறப்பாக ஈழமண்டலத்தின் இலக்கிய வளர்ச்சியை அறியலுறுவார்க்கும் இப்புத்தகம் உபயோகப்படும். இதற்கெழுதிய இரசனைக்குறிப்பையும் இலக்கிய வழியின் எச்சமாய் எஞ்சிய பகுதியைச் சிறிதே பூர்த்தி செய்யும்.

திருகோணமலை கனகசுந்தரம்பிள்ளை அவர்களும் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களும் ஒருதாய் வயிற்றில் ஒருங்கு பிறவாத இரட்டையர்கள். அவர்கள் தமிழிலக்கண இலக்கிய வழியிற் செய்த சேவை அதிகம். தாய்நாட்டிலே பழைய நூலுரைகள் பதித்தவர்களுக்கெல்லாம் ஊன்றுகோலாய் உதவியவர்கள், கனகசுந்தரம்பிள்ளை அவர்கள்.

குமாரசுவாமிப் புலவர் அவர்கள் செய்த 'தமிழ்ப்புலவர் சரித்திர'மும் அவர்களுக்கு முன் சதாசிவம்பிள்ளை இயற்றிய 'பாவலர் சரித்திர தீபமும்' புலவர் அவர்களுக்கு பின் மட்டக்களப்பு பூபாலபிள்ளை இயற்றிய 'தமிழ் வரலாறு' ம் படித்து, இந்த இலக்கிய வழி விரிவு செய்யற்பாலது.

இலக்கிய வழியிற் செல்பவர்கள், இலக்கியத்தினியல்பை யுணர்வது இன்றியமையாததாதலின், அவ்வழி மேலும் நடந்து, தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையை ஊடுருவி, இலக்கியத்தின் உயிரும் உடலிலும் சென்று முற்றுவதாயிற்று.

வருங்காலத் தமிழிலக்கிய உலகம் முந்தையோர் தந்த இலக்கிய வழியை மறந்து போகாமல் ஞாபகப்படுத்தவும், மேலும் வளர்ச்சிவழி வகுப்பதற்குத் தொடர்பு காணவும் உதவும் என்ற கருத்தால் இந்த முன்னுரை வளர்ந்திருக்கின்றது.

ஈழ நாட்டியம்

சமஸ்கிருதமயப்பட்ட பரத நாட்டியத்தையும்,தெலுங்கு மயப்பட்ட கர்நாடக சங்கீதத்தையும் ,நமது கலைவடிவங்களாக வருங்கால சந்ததியினருக்கு வழிமொழிகின்றனர். ஈழத்தமிழர்களுக்கென தனியான பல நடன மரபுகள் இருந்தும் அதனை கண்டு கொள்வதில்லை.பரத நாட்டியம் கடந்த நூறாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. கிருஸ்ன அய்யரும் அவர் வழி வந்த பலரும் தமிழர் நடனமுறையை சமஸ்கிருதமயப்படுத்தி இன்று பரதர் புனைந்த நாட்டிய சாஸ்திரத்தோடு தொடர்பு படுத்தியுள்ளனர்.ஈழத்தில் ஏரம்பு சுப்பையா மூலம் அறுபதுகளில்அறிமுகப்படுத்தப்பட்ட இவ் வடிவம் இன்று நம்மவர் கலையாக உலகம் முழுவதும் இந்திய நடனம் என்ற பெயரில் உலாவருகிறது.நாம் நமது மரபு வழிப்பட்ட ஈழ நாட்டியத்தை கவனத்தில் எடுக்காமல் அதனை மலினப்படுத்தியே பார்க்கிறோம். உலகமெங்கும் நமது நடன மரபாக உள்ள ஈழ நாட்டியத்தை எழுச்சி பெற செய்ய வேண்டும்.

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

பரதத் தமிழ்

பரதத் தமிழ்

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

தமிழமுதம்-நிகழ்ச்சிகள் முன் வரைவு

1.தமிழ்த் தாய் வாழ்த்து
2.தமிழமுதம் மைய நோக்கு பாடல்
3.வாழ்க தமிழ் மொழி-ஆடல்
4.தேன் தமிழ் மழலை
5.இசயோடு அசையும் தமிழ்
6.தமிழமுது-சொற்பொழிவு
7.வண்ணத் தமிழ்-பாடல்
8.இன்பத் தமிழ்-பாடல்
9.ஆறுமுகநாவலர்-சொற்பொழிவு
10.கத்தரி வெருளி-பாடல்
11.அக்கினி குஞ்ஞொன்று கண்டேன் -ஆடல்
12.சுவாமி விபுலானந்தர்-சொற்பொழிவு
13.தமிழே தமிழே அழகிய தமிழே-வில்லுப்பாட்டு
14.ஈழ நாட்டியம்-அரச வரவு
15.சங்கத் தமிழ்-சொற்பொழிவு
16.நாடகம்-ஆசிரியர்கள்
17.ஈழநாட்டியம்-அரசி வரவு
18.சிலப்பதிகாரம்-பாடல்
19.முயலார் முயல்கிறார்-சிறுவர் நாடகம்
20.சிறுவர் இசைத் தமிழ் மாலை
21.செம்மொழியான தமிழ் மொழி-ஆடல் அரங்கு


தமிழமுதம் -மைய நோக்கு பாடல்

தமிழும் அமுதும் ஒன்று
தரணியில் அதுவே நன்று


முத்தமிழை பயின்றிடுவோம்
முன்னோர்களின் வழி நடப்போம்
தமிழமுதம் கண்டிடுவோம்
தமிழ் சாரலில் நனைந்திடுவோம்

தொல் பழ நூல்கள் கற்றிடுவோம்
தொன்மை மரபைப் பெற்றிடுவோம்
புதிய இலக்கியம் நாம் படைப்போம்
புகலிட மண்ணில் தமிழ் வளர்ப்போம்

பாட்டும் கூத்தும் எங்களது
பண்பாட்டின் சிகரமது
நாட்டமுடனே நன்றாக
நமது கலைகளை போற்றிடுவோம்

தமிழ் எங்கள் தாய் மொழி
செம்மொழியாக வாழும் மொழி
ஈழம் எங்கள் தாய் நாடு
இனிமை தமிழில் நீ பாடு

ஈழ நாட்டியம் கூத்து

ஈழ நாட்டியம்  கூத்து


இன்னியம்

இன்னியம்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்


Followers

Blog Archive

Powered by Blogger.