2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

2011ம் ஆண்டு சறே தமிழ் பாடசால நடத்தும் தமிழ்ப் பெரு விழா

அபஸ்வரம்

Saturday, 23 October 2010

|
அபசுரம்

நடிகர்களுக்குச் சில குறிப்புகள்

1. இந்த நாடகம் மேற்கத்தைய அபத்த (absurd) நாடக வகையின் சாயலைக் கொண்டது.

2. இது சிரிப்புக்காக எழுதப்பட்ட நாடகம் அல்ல. ஆகையால் சபையோரிடம் சிரிப்பை வரவழைக்கும் முயற்சியில் நடிகர் ஈடுபடக்கூடாது.

3. அவரவர் கொள்ளும் பாத்திரத்தை, பாத்திரத்þ‘டு ஒன்றிக் காத்திரமாக நடிக்க வேண்டும்.

4. அங்கச் சேட்டைகள், மற்றக் கதாபத்திரங்களை அமுக்கும் நோக்கத்தோடு நடித்தல் 'நக்கல்' வருவது போன்ற பேச்சுத் தொனி ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.

5. பேசும் வசனங்கள் யாவும் பேசப்படுவதில் நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை உள்ளனவர் போன்ற தன்மையோடேயே பேசப்படவேண்டும்.

6. இத்தகைய கதாபாத்திரங்கள் பார்வையாளர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் (அதுவே ஒரு நோக்காதலால்) சாதாரண கதாபாத்திரங்களை விட ஒரு படி மேலே நின்றே தொழிற்பட வேண்டும். இதற்குச் சிறிதளவு செயற்கைத் தன்மையைப் பேச்சில், அங்க அசைவுகளில் கூட்டவேண்டும்.

7. இத்தகைய செயற்கைத் தன்மை எந்நேரத்திலாவது அளவிற்கு அதிகமாகக் கூடக் கூடாது, அவ்வாறு நடப்பின் கதா பாத்திரங்கள் 'ஹாஷ“ய' கதாபாத்திரமாக மாறிவிடும். இந்நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும்.

8. பேசப்படும் வசனங்கள் ஒவ்வொன்றும் பாவம், பாவனை ஆகியவற்றோடு சேர்த்தே பேசப்படவேண்டும்.

9. 'பிரச்சினை' சிறிது நேரந்தான் மேடையில் தோன்றுகிறார் என்றாலும், மிக முக்கியமான கதாபாத்திரம் இவர்தான். எல்லோருக்கும் கேட்கும்படியாகவும் தெளிவாகவும் ஆறுதலாகவும் இரகசியம் சொல்லு ம பாவனையில் இவரது வசனம் பேசப்படவேண்டும்.

10. இவர் கூறுவதைக் கொண்டே பார்வையாளரின் கற்பனை உருவாக்கம் சரியான திசையில் திரும்புவதால் இப்பாத்திரத்தை நடிப்பவர் தன்பொறுப்பை உணர்வது மிக அவசியம்.

11. முதல் வாசிப்பின் போது வசனங்களுக்குவசனம் பொருத்தமில்லாதது போன்றுதான் தோன்றும். ஆனால் அவற்றிடையே ஒரு பொதுத் தொடர்பு இழையோடியிருப்பதை எல்லா நடிகரும் உணர்தல் அவசியம்.

12. எக் காரணத்தைக் கொண்டும் நாடகம் முழுவதும் 'பிரச்சினை' தவிர்ந்த ஏனைய நடிகர் பின் விசிறியைப் பார்க்கவோ அல்லது அது இருக்கும் உணர்வை வெளிக்காட்டவோ கூடாது. அவ்வாறு செய்யின் மேற்கொண்டு நாடகத்தை நடிப்பது அர்த்தமற்றதாகிவிடும்.

அபசுரம்
(ஓரங்க நாடகம்)

எதுவித முன்னறிவித்தலுமின்றி மண்டபத்து ஒளி விளக்குகள் மங்க ஆரம்பிக்கின்றன. மெல்ல மெல்ல மங்கி இருட்டு மண்டபம் முழுவதையும் கவ்விக் கொள்கிறது. இந்த இருட்டு பத்து வினாடிகள் வரை நீடிக்க அந்த இருளில் திரை நீங்கிக்கொள்கிறது. திடீரென்று ஒளி விளக்குகள் அங்கொன்று இங்கொன்றாக ஒளியை மேடைமீது பாய்ச்சி மறைக்கிறது. இவ்வாறு செய்யும்போது மேடைமீது வைக்கப்பட்டிருக்கும் பொருள்களை இரசிகர் அடையாளம் கண்டுகொள்ளாது இருப்பது முக்கியம், இது நடக்கும்போது பின்னணியில் குழம்பிய சத்தங்கள் தொலைவில் இருந்து கேட்பது போன்று தெளிவற்றுக் கேட்கின்றன. மீண்டும் மேடையை இருள் இரண்டு மூன்று வினாடிகளுக்குக் கௌவிக்கொண்டபின் ஒர் ஒளிப்பொட்டு மட்டும் கீழ்மேடை வலப்புறத்தில் தன் ஒளியைப் பரப்பி மெல்ல மெல்லப் பிரகாசமடைகிறது. இந்த ஒளிப்பொட்டின் நடுவே ஒரு மின்விசிறி கம்பீரமாக நிற்கிறது. அந்த மின்விசிறியின் நிறுத்தியில் "பிரச்சினை" என்று கட்டித் தொங்க விடப்பட்ட மட்டை இரசிகரின் கவனத்தை ஈர்க்கிறது. விசிறிக்கு முன்னால் ஒரு சிறிய ஸ்ரூலும் அதில் காகிதக்கட்டொன்றும் வைக்கப்பட்டுள்ளன. சில வினாடிகள் மௌனமாகக் கழிய எங்கிருந்தோ ஒரு கடிகாரம் தான் விரும்பியமட்டும் அடித்து ஓய்கிறது. கடிகாரம் ஓய்ந்ததும் திடீரென்று மின்விசிறி இயங்க ஆரம்பிக்கிறது. சிறிய ஸ்ரூல்மீதிருந்த காகிதங்கள் பறக்க ஆரம்பிக்கின்றன. இப்போது கீழ் மேடை இடப் புறத்தில் மற்றுமொரு ஒளிப்பொட்டு தன் ஒளியைப் பாய்ச்சிப் பிரகாசமடைகிறது. இந்த ஒளிப் பொட்டின் நடுவே ஒருவர் நிற்கிறார், இவர்தான் பொதுவர். அவர் பார்வை ஸ்ரூலிலும் பறந்த காகிதங்களிலும் மாறி மாறிப் பாடிய, கலவரமடைந்த பாவம் முகத்திற் படிகிறது. ஐந்தாறு வினாடிகள் இவ்வாறு கழிய ஸ்ரூலை நோக்கி அவர் மெல்ல அசைகிறார். அவர் இவ்வாறு அசைய ஆரம்பித்ததும் மற்றைய மின் விளக்குகளும் மேடைமீது தம் ஒளிகளைப் பாய்ச்சி மேடை முழுவதையும் பிரகாசமடையச் செய்கின்றன. இந்த ஒளியின் நடுவே இரண்டொரு ஸ்ரூல் அல்லது பிரம்புக் கதிரைகளும் அவற்றிற்கு எதிராக ஒரு நீளமான சிறு மேசையும் மேசைமீது ஒரு கண்ணாடிச் சாடி நிறைய நீரும் அதன் பக்கத்தே ஒரு கிளாசும் இருப்பது சபையோருக்கு நன்கு தெரிகிறது. கதிரைகளுக்குப் பின்னால் ஒரு நெடிய ஸ்ரூல்மீது தொலைபேசி இருக்கிறது. இவற்றிற்குப் பின்னால் கறுப்புத்திரை தொங்குகிறது.

மின்விசிறிக்கு முன்னால் இருக்கும் சிறிய ஸ்ரூலை நோக்கி நடந்த பொதுவர் அதை அணுகியதும் கலவரமடைந்த முகத்தோடு அதை உற்று நோக்குகிறார். பின்னர் பறந்து மேடைமீது சிதறிக்கிடக்கும் காகிதங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கிறார். துரிதமற்ற தளர்ந்த நடையோடு காகிதங்களைப் பொறுக்கி அடுக்கி மீண்டும் அவற்றை ஸ்ரூல்மீது வைக்கிறார். அவை மீண்டும் பறக்கின்றன. கலவரமும் துக்கச் சாயலும் அவர் முகத்தில் கூடுகிறது. தளர்நடை சற்று அதிகரிக்க அவர் ஸ்ரூலை அடிக்கடி திரும்பிப் பார்த்தபடியே காகிதங்களைப் பொறுக்குகிறார். பொறுக்கிய பின்னர் மெல்ல ஸ்ரூலை நோக்கி நடந்து வந்து காகிதங்களை இருகைகளாலும் பிடித்தபடியே ஸ்ரூலை உற்று நோக்குகிறார். பின்னர் கைகளிலே பிடித்திருக்கும் காகிதங்களை உன்னித்துக் கவனிக்கிறார். பின் ஸ்ரூலை ஐயத்தோடு நோக்கியபடி தயங்கித் தயங்கி காகிதங்களை அதன்மீது வைக்கிறார். அவை மீண்டும் பறக்கின்றன. இரு கைகளையும் மார்புக்குக் கிட்டக் கோர்த்துப் பிடித்தபடி வேதனையோடு மேல்நோக்கியவாறு அங்கலாய்க்கிறார். வேதனைக்குறிகள் அவர் முகத்திலே உக்கிரமாகப் படிய "இது நடந்திருக்கக்கூடாது" என்ற பாவனையில் அவர் தலை அங்குமிங்குமாகச் சில தரம் அசைகின்றது. இது ஓய அவர் கண்கள் மீண்டும் சிதறிப் பறந்த காகிதங்களில் படிய ஆரம்பிக்கின்றன. கண்கள் அவற்றைப் பார்த்தபடியே இருக்க ஒரு நீண்ட பெருமூச்சு அவரிடமிருந்து வெளிக் கிளம்பிக் காற்றோடு கலக்கிறது. மெல்லத் திரும்பி பெரும் அதிர்வுக்குள்ளானவர் போல் பிரம்பு நாற்காலியொன்றில் அமர்ந்து இரு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொள்கிறார். சோககீதம் மெல்ல இசைக்கிறது. தலையை நிமிர்த்துகிறார். கண்ணாடிச் சாடியிலே இருக்கும் நீரும் கிளாசும் அவர் கண்ணில் படுகிறது. இருந்தபடியே அசைந்து நீரைக் கிளாசில் ஊற்றிக் குடிக்கிறார். இந்த நிலையில் இருந்தபடியே திரும்பிக் காகிதங்களைப் பார்க்கிறார். எழுந்து உடையை இழுத்துச் சரிசெய்கிறார். செயற்கையான ஒரு கம்பீரத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல ஆனால் மிடுக்காக நடந்து காகிதங்களைப் பொறுக்கி அடுக்குகிறார். ஒரு கை காகிதத்தைப் பிடித்தபடி நீண்டு தூங்க மற்றக்கை மேற்கோட்டின் பையில் தஞ்சமடைய முன்னர் கொண்ட செயற்கையான கம்பீரத்துடனே ஸ்ரூலை நோக்கி நடக்கிறார். ஸ்ரூலுக்கருகே வந்து நின்று அதிலே ஒரு அலட்சியப் பார்வையைப் படியவிட்டு அந்தப் பார்வையின் தொடர்ச்சியை சபையோரிடம் படிய விடுகிறார். திரும்பவும் ஸ்ரூலைப் பார்த்தபடியே பக்கவாட்டாகச் சரிந்து காகிதத்தை ஸ்ரூல்மீது வைக்கிறார்.

அவை பறக்கின்றன.

அவரின் கம்பீரம், இறுமாப்பு சட்டெனக் கலைய, குனிந்து எஞ்சிய காகிதங்களை இரு கைகளாலும் அழுத்திப் பிடிக்கிறார். அவர் கைகளாலே காகிதங்களை அழுத்திப் பிடித்த போதிலும் அவை வெளிக்கிளம்பும் தன்மை சபையோருக்குத் தெரிகிறது. இப்போது சூறாபெளியொன்று கிளம்புவது போன்ற ஒரு ஒலி பின்னணியில் மெல்லக் கிளம்பி வலுவடைகிறது. இந்த ஒலி கூட்டக்கூட பொதுவர் காகிதங்களை அழுத்துவது போன்ற பாவனையும் அவர் முகத்தில் காட்டும் வேதனைக் குறிகளும் கூடிக்கூடி கடைசியாக சூறாவளியின் பின்னணிச் சத்தம் உச்சநிலையில் இருக்கும்போது அதால் தள்ளப்பட்டவர் போன்று பின்னடைந்து செயலற்று நிற்கிறார். காகிதங்கள் பறந்து மேடையில் விழுகின்றன. பின்னணி ஒலியும் இவையோடு இசையக் குறைந்து மறைகிறது.

தளர்ச்சியும் முதுமையும் அவர் மேற்கவிய பார்வையை மேலே செலுத்தி, சிந்தனை லயத்தோடு திரும்பி, பின்னாலே தொங்கும் கறுப்புத் திரையை அணுகிறார், அதனூடாக எதையோ வெறித்துப் பார்த்தபடி நிற்கிறார். நிலை அவ்வாறே இருக்கத் தலை மட்டும் திரும்பி மேடையிலே சிதறிக் கிடக்கும் காகிதங்களில் படிகிறது. மீண்டும் அவர் காகிதங்களைப் பொறுக்கத் தொடங்கும்போது கதவு மணி அலறுகிறது. பொதுவர் நின்று, கதவைத் திறக்கப் போகும்போது கடிகாரம் மூன்று முறை அடித்து ஒய்கிறது.

பொதுவர் கதவைத் திறக்கிறார். ஒருவரும் உள்ளே வராததால் வெளியே எட்டிப் பார்க்கிறார். பின்னர் கதவை மூடுகிறார். கதவடியில் நின்றபடியே ஸ்ரூலைப் பார்கிறார். திரும்பப் போகும்போது கதவு மணி மீண்டும் அலறுகிறது. கதவைத் தயக்கத்தோடு திறக்கிறார்.

அருளரும், தியாகரும் எதிரே நிற்கிறார்கள். அருளர் வேட்டி நாஷனல் சாயலை ஒத்த உடுப்பும் கழுத்தைச் சுற்றிச் சால்வையும் போட்டிருக்கிறார். தியாகர் நிற லோங்சும் கோட்டும் 'ரை' கட்டாது திறந்த கழுத்தோடுள்ள சேட்டும் அணிந்திருக்கிறார். இருவரையும் கண்ட மகிழ்ச்சி முகத்தில் தோற்ற ஆனால் நடந்த நிகழ்ச்சியின் பாதிப்பிலிருந்து விடுபடாமல் அவர்களை உற்றுப் பார்க்கிறார் பொதுவர். இந் நேரத்தில்



அருளர்: (இராகத்தோடு) ஏமாத்திப் போட்டம்..... ஏமாத்திப் போட்டம்..... ஏமாத்திப் போட்டம் தானே.....

தியாகர்: பொதுவர் பாவம்..... நல்லாய் ஏமாந்து போனுர்,

அருளர்: அவருக்கு உதெல்லாம் நல்ல பழக்கம். என்ன பொதுவர். (சிரித்தபடியே இராகத்தோடு இருவரும்)

இருவரும்: ஏமாத்திப் போட்டம்..... ஏமாத்திப் போட்டம்...... ஏமாத்திப் போட்டம் தானே.......

பொதுவர்: (இவர்களுடைய சம்பாஷணையைப் பொருட்படுத்தாமல் முன்னைய சோகம் முகத்திற் கவிய) என்ன கெடுகாலமோ எனக்குத் தெரியாது முந்தி எப்பவும் நடக்காத ஒரு பெரிய காரியம் எனக்கிப்ப நடந்து போச்சு. (பெருமூச்சு விடல்) (அருளர் கலவரத்தோடு தியாகரைப் பார்க்க இருவரும் பொதுவரைப் பற்றியபடி)

அருளர்: ஓ... பொதுவர்..... நீங்கள் இதுக்கெல்லாம்..... ஓ... ஓ..... அழக்கூடாது..... பாவம். வாருங்கோ...... (அழைத்தபடியே) மெல்ல..... மெல்ல..... இதிலை இருங்கோ..... ஆறுதல்..... ஆறுதல்..... உடம்பை அலட்டாதையுங்கோ..... நாங்கள் சும்மா பகிடிக்கு... (தியாகர் கண்ணாடிச் சாடியில் இருந்த நீரைக் கிளாசில் ஊற்றி பொதுவரிடம் நீட்டியபடியே)

தியாகர்: தெரியாதே... எங்கடை வழக்கமான விளையாட்டுத் தான் பொதுவர். பொதுவர்... இதைக் குடியுங்கோ... ஒண்டுமில்லை. வெறுந் தண்ணிதான். குடியுங்கோ.....களைப்புக்கு நல்லதாக சாந்தி. இந்த நேரத்திலை உங்களுக்குத் தரக்கூடியது இது ஒண்டுதான். (அருளர் கிளாசை தியாகரிடமிருந்து வாங்கித் தானே பொதுவருக்குப் பருக்குகிறார். அவர் பருக்கி முடிந்ததும் தியாகர் அருளரின் சால்வையால் அவர் வாயைத்துடைத்து விடுகிறார்)

அருளர்: (இரக்கக் குரலோடு) பொதுவர், பெரிய பெரிய காரியங்களைக் கண்ட உடனை மனம் தளரக் கூடாது. நாங்கள் தமிழரல்லே.

பொதுவர்: (வேதனையோடு) நான்..... நான்..... என்ன செய்ய. எத்தனையோ பிரச்சினைகளை நான் சமாளிச்சிருக்கிறன். ஆனால் இது..... ஓ..... இதுவரைக்கும் நடக்காதது இப்ப ஏன் நடந்தது?

அருளர்: பிரச்சினையா? (தியாகரும் அருளரும் உசார் அடைகின்றனர்.) பொதுவர் இதுக்கு நீர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பிரச்சினைகள் ஏற்படுகிறது இயற்கை. பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையே இல்லை.

தியாகர்: சுருங்கச் சொன்னால் பொதுவர்..... வாழ்க்கை பிரச்சினைகளோடேயே பிறக்குது.

அருளர்: (தியாகரிடம்) ஆனால் இவற்றை பிரச்சினை வேறை. எங்கிடை வாழ்க்கை வேறை.

தியாகர்: ஓம். எங்களுக்கு வாழ்வெண்டால் இவருக்கு கட்டாயம் இறப்புத்தான். (அதிர்ச்சியோடு பொதுவர் எழுகிறார்)

அருளர்: ஓ... நீங்கள் எழும்பக் கூடாது. அது இருதயத்துக்குக் கூடாது, (இருக்க வைக்கத் தெண்டிக்காமல்) உங்களுக்கு இருக்க விருப்பமில்லாட்டில் நீங்கள் நிக்கலாம். நிக்கிறதும் உடம்புக்கு நல்லது.

தியாகர்: அது மாத்திரமில்லை, உங்கிட விருப்பத்துக்கு எதிராய் உங்களை இருக்கச் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. சுருங்கச் சொன்னால் எம் கடன் பணி செய்துகிடப்பது மாத்திரம் தான்.

பொதுவர்: (தன்னுடைய கவலையின் மேலீட்டால்) இதுவரைக்கும் பிரச்சினைகளுக்கு நான் மனந் தளரேல்லை. ஆனால் இண்டைக்கு..... ஓ..... பெரிய சூறாவளிமாதிரி.....

அருளர்: ஓ..... பொதுவர்..... பொதுவர்..... கவலைப்படக் கூடாது.... அது உடம்புக்குக் கூடாது.....

தியாகர்: ஓம். ஓம். பொதுவர். நீங்கள் கவலைப்படக் கூடாது உங்களுக்கு ஏதாவது நடந்தால் பிறகு இதைப்பற்றிக் கவலைப்பட வேறை ஆரிருக்கினம்.

அருளர்: பொதுவர்..... பிரச்சினைகள் உங்களோடை... அதைப் பற்றிய கவலை எங்களோடை. பிரச்சினைக்கு தீர்வை நீங்கள் காணக்கூடாது. அது எங்களின்ரை வேலை.

தியாகர்: ஓம் பொதுவர். தீர்வை நீங்கள் கண்டால்..... பிறகு எங்களுக்கென்ன வேலை.....

அருளர்: கவலை மனிசனுக்கு மகா தரித்திரம். கவலைப்படுகிறதே இப்ப எல்லாருக்கும் தொழிலாய்ப் போச்சுது. அதை மறவுங்கோ. இல்லை. இல்லை. அதை முதலிலை சொல்லுங்கோ.

தியாகர்: பொதுவர், உணவைப் பகிர்ந்தால் வயித்துக்கு நட்டம். கவலையைப் பகிர்ந்தால் மனதுக்கு லாபம்.

அருளர்: (தியாகரிடம்) ஆனால் லாப நட்டம் அதிகமாய் வியாபாரத்திலைதான் பாக்கிறது.

தியாகர்: ஓம். ம் (தலையாட்டி) அது வரவையும் செலவையும் பொறுத்திருக்கு.

பொதுவர்: (தனது கவலை மேலீட்டினால்) ஆனால் எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வந்தது?

அருளர்: அதென்னண்டு சொல்லுங்கோ அது போகிடும். எங்களை நம்புங்கோ. நீங்கள் நடந்ததைச் சொல்லுங்கோ.

தியாகர்: நடக்காட்டிலும் பறுவாயில்லை.

பொதுவர்: (காகிதங்களைக் கவலையோடு பார்த்து) இந்தக் காகிதங்களெல்லாம் அந்த ஸ்ரூலிலை தான் முதலிலை இருந்தது. ஆனால் பிறகு..... ஓ... அதைச் சொல்லவே எனக்குக் கவலையாய் இருக்குது. அது..... அதெல்லாம் பறந்து இப்பிடி ஆச்சுது. (இனி வரும் வசனங்களைப் பேசி நடித்துக் காட்டுகிறார். காகிதங்களை உண்மையிலே பொறுக்கி எடுக்காமல் பாவனை செய்கிறார்) நான் பிறகும் பொறுக்கி... அதே இடத்திலைதான் வைச்சன். ஆனால்... (ஆச்சரியமும், வேதனையோடும்) அது பிறகும் பறந்து போச்சது. எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. நான்... நான்... ஓ... பிறகும்... பிறகும் பொறுக்கி எடுத்து வைச்சன். அது பேந்தும் பேந்தும் பறக்குது. ஒருக்காலில்லை. இரண்டு தரமில்லை. மூண்டு... மூண்டு தரம் வைச்சன். ஆனால் மூண்டு தரமும் அது பறந்து போச்சுது. எனக்கு... எனக்கு என்ன செய்யிறதெண்டே.....

அருளர்: (திடீர் சிந்தனை லயத்தோடு) மூண்டு தரம்..... ம்.... மூண்டு.... மூண்டு.... (தியாகர் பக்கம் திரும்பி) விஷ்ணுவுக்கு மூண்டு தலை.

தியாகர்: நான்முகனுக்கு...... நாலு (கையில் காட்டுகிறார்)

அருளர்: அறுமுசனுக்கு ஆறு......

தியாகர்: ம்... இராவணனுக்கு... பத்து......

அருளர்: ஆனால் முறிவு தறிவுகளுக்கும் பத்துப் போடுறவை.

தியாகர்: எட்டுச் செலவு எண்டு சொல்லுறம். அப்பிடியெண்டால் இந்த எட்டு என்ன?

அருளர்: எட்டாம் நாத்து நடக்கிறது எட்டு. மூண்டாம் நாள் நடந்தாலும் எட்டுத்தான்.

பொதுவர்: ஆனால் மூண்டு தரம் தான் வைச்சனான்.

அருளர்: ஒருக்கால் பறந்தால் பிறகு எத்தினை தரம் வைச்சாலும் அது பறக்கும்.

தியாகர்: அது உண்மைதான். எண்டாலும் ஒருக்கால் அது இருந்தால்..... நெடுக இருக்காது.

அருளர்: இருக்கிறதும் பறக்கிறதும் அது அதுவின்ரை இயல்பைப் பொறுத்திருக்குது. எண்டாலும் பெரும்படியாய் நாங்கள் அதுக்குத் தீர்வு காணக்கூடாது. பிறகு ஆபத்திலை முடியும். எதுக்கும் நீங்கள் சொல்லுறதை ஒருக்கால் மெய்யோ எண்டு பாப்பம். அது மெய்யெண்டால் தீர்வுக்கு வழியைப் பிறகு யோசிப்பம்.

தியாகர்: அது நல்ல யோசினை. ஏனெண்டால் முந்தி இருந்த நிலைமை இப்ப இல்லாமல் இருந்துதெண்டால் அதுகள் பறவாதெல்லே. அப்ப தீர்வும் சுகமாய்ப் போகும்?

அருளர்: தீர்வு சுகமாய்ப் போகுமெண்டில்லை. அதுக்குப் பிறது ஒரு புதுப் பிரச்சினை கிளம்பும். இதெல்லாம் ஏன் இப்ப பறக்கேலை எண்டு.

தியாகர்: அப்ப புதுப் பிரச்சினைக்கு தீர்வு காணுறதெண்டால் இதெல்லாம் பறக்க வேணும்.

அருளர்: இப்போதைக்கு ஓ மெண்டுதான் சொல்ல வேணும். எதுக்கும் நாங்கள் ஒருக்கால் பறக்குதோ எண்டு பாப்பம். பிறகு யோசிப்பம். சரி இதெல்லாத்தையும் ஒருக்கால் பொறுக்குங்கோ. (மூவரும் பொறுக்கி அருளரிடம் கொடுக்கின்றனர். அருளர் அதைப் பொதுவரிடம் நீட்டி) நீங்கள்தான் வையுங்கோ. நான் வைச்சால் சிலவேளை அதுகள் பறவாது.

தியாகர்: பறவாட்டில் பிறகு எங்களுக்கு வேலை இல்லை. சும்மா பயப்பிடாதையுங்கோ.... வையுங்கோ. (பொதுவர் சுற்றும் முற்றும் கவலையோடு பார்க்கிறார், பின்னர் மெதுவாகத் தயங்கித் தயங்கி ஸ்ரூலில் வைக்கிறார். அவை மீண்டும் பறக்கின்றன. மூவரும் திகைத்தபடியே ஓரிரு வினாடிகள் நிற்கின்றனர். மௌனத்தை அருளர் கலைக்கிறார்)

அருளர்: எனக்குத் தெரியும் உதெல்லாம் பறக்குமெண்டு.

பொதுவர்: (சோர்வோடு) இதோடை நாலாவது தரம். (கதிரையில் பொத்தெண்டு விழுகிறார். கவலையோடு தலையை அங்குமிங்கும் ஆட்டி) இந்த நிலைமை எனக்கு ஏன் வரவேணும். நான் ஒருத்தருக்கும் ஒரு கெடுதியும் செய்யேல்லையே.

தியாகர்: பொதுவர்...நிலத்தைக் கிண்டினால் தண்ணி வருகுது. காத்தை ஊதினால் பலூன் வெடிக்குது. ஸ்ரூலிலை வைச்சால் அது பறக்குந்தானே.

பொதுவர்: நேற்றைக்கு இதுகளெல்லாம் அதே இடத்திலைதான் இருந்ததுகள். ஏன்? பறக்கிறதுக்குக் கொஞ்சம் முந்தியும் அதிலைதான் இருந்ததுகள். ஆனால் பிறகு...பிறகேன் இதுகள் பறப்பான்? அருளர்... தயவு செய்து இந்தப் பிரச்சினைக்கு நீர் வழி சொல்லத்தான் வேணும்.

அருளர்: அதுகளைப்பற்றி நீர் கனக்க யோசியாதையும், யோசினை மனிசருக்கு கூடாது. பிறகு பிறஷராக்கிப்போடும் அது நாளைக்குப் பறவாது.

பொதுவர்: (அந்தரத்தோடு) இண்டைக்குப் பறக்கிறது எப்பிடி நாளைக்குப் பறவாமல் போகும்.

தியாகர்: இண்டைக்கிருப்போர் நாளைக்கிருப்பர் என்பதோர் திடமுமில்லையே.

அருளர்: (பெரும் பீடிகையோடு) உதுகளெல்லாம் பெரும் பிரச்சினைகளில்லை. உதிற் பெரும் பிரச்சினைகளெல்லாம் இருக்கு. அதுகளையும் ஒருக்கால் கவனிக்கவேணும் நாங்கள் நினைச்சமெண்டால்...

தியாகர்: நினைக்காமல் இருக்கிறது கூட எங்கடை பிழையில்லை. (சிறிது நேர மௌனத்திற்குப் பின்னர் திடீரென சிந்தையிற் தட்டுப்பட்ட பாவத்தோடு) ஏன் ஒரு ஊர்வலம் வைச்சால் பிரச்சினை தீரும்தானே?

அருளர்: அதைப்பற்றித்தான் நானும் யோசிச்சுக்கொண்டு இருக்கிறன்... ஆனால் ஊர்வலத்தை எங்கை தொடங்கி எங்கை வரைக்கும் முடிகிறது எண்டது தான் பிரச்சினை.

தியாகர்: (ஆமோதிக்கும் பாவனையில்) ஓமோம்.... அது பெரிய பிரச்சினை. அப்பிடியெண்டால் இந்த விஷயத்தைப் பற்றி ஆராய ஒரு கொமிஷன் நியமிச்சால் என்ன?

அருளர்: (தியாகரைச் சற்றுப் பொறுமையாக இருக்கும்படி சைகை காட்டி கழுத்தைச் சுற்றப் போட்டிருந்த சால்வையை எடுத்து அரையில் கட்டி, அதை இரு கைகளாலும் பிடித்தபடி நெஞ்சை நிமிர்த்தி மேடைப் பிரசங்கம் நிகழ்த்தும் பாவனையில்) கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்த பிரச்சினைகளை உழைத்து உழைத்து ஒடாய் உருக்குலைந்துவிட்ட மனிதனை எதுவிதக் கனிவுமின்றி நசி நசியென நசித்து நட்டாற்றில் கைவிட்ட பிரச்சினைகளை மனைவி வீட்டிலே ஏங்க... பிள்ளைகள் அப்பா வருவார் எனக் கண் தூங்காது காத்திருக்க... உற்றாரும் மற்றோரும் அவனையே எதிர்பாத்திருக்க... அவர்களையெல்லாம் காணாது ஏமாற்றி ஓங்கச்செய்து வாழ்க்கையின் அந்தலைக்கே ஓடவைக்கச்செய்த அந்தப் பிரச்சினைகளை... அக்குவேறு ஆணி வேறாகப் பிளந்து.... நாறி நாற்றமெடுக்கும் நெறி கெட்ட துர்க் கிருமிகளை அதிலிருந்து அகற்றி விட்டால்.... கவலை ஒழியும்... துன்பம் நீங்கும்... பொங்கும் இன்பர் எங்கும் பெருகும். (இந்தப் பேச்சை அணுவணுவாக இரசித்த தியாகர் பெரும் திருப்தியோடு)

தியாகர்: இனிமேல் காகிதமெல்லாம் மறவாது. அது நிச்சயம் (அருளரைக் கனிவோடு அணைக்கிறார், திரும்பி) பொதுவர்... (அருளர் தன் பேச்சின் பிற்பகதிக்கு வரும்போது சிந்தனையில் லயித்த வண்ணம் நடந்து பின் ஒரு முடிவுக்கு வந்தவர் போல், மேல் மேடை நடுப் பகுதியை அண்டியுள்ள தொலைபேசிக்கு அருகே சென்று அதை எடுத்து எண்களைச் சுழட்டுகிறார். பின்னர் பேசுகிறார்.)

பொதுவர்: புறொபசர் பிளீஸ்... ஆ புறொபசர் இங்கை நான் பொதுவர்... ஓ பொதுவர்... (உரத்து) பொதுவர் ஒம் நான் இங்கை ஒரு பெரிய பிரச்சினையிலை மாட்டுப்பட்டுப்போய் நிக்கிறன், அது உங்களாலைதான் விடுபடும் போல இருக்கு... என்னண்டு... கேக்கல்லை... இல்லை... இல்லை... அது போனிலை சொன்னால் விளங்காது... நீங்கள் ஒருக்கால் நேலிலை வந்தியள் எண்டால் எல்லாத்தையும் ஒருக்கால் பார்க்கலாம்... என்னண்டு... கேக்கேல்லை... றிசேச்சா... ஓ... இதுவும் றிசேச்சுக்குரிய விஷயம்தான் பிளீஸ், நீங்கள்தான் இதிலை எனக்கு உதவி செய்ய முடியும் பிளீஸ்.. தங்கியூ... தங்கியூ... (றிசீவரை வையாமலே அருளர் தியாகரிடம் திரும்பி புறபெசர் ஏதோ றிசேச் செய்து கொண்டிருக்கிறாராம். அவர் எனக்கு உதவி செய்ய ஒருக்காலும் பின்னிக்கமாட்டார். இப்ப வாறனெண்டவர். (இந்த நேரத்தில் கதவு மணி அலறுகின்றது. அருளர் போய்க் கதவைத் திறக்கிறார். புறொபசர் மெய்யர் கையிலே பெரிய புத்தகம் பைல் காகிதத்தோடு அவசர அவசரமாய் உள்ளே நுழைகிறார். பொதுவர் இவரைக் கண்ட ஆச்சரியத்தில்)

பொதுவர்: ஹலோ புறொபசர் நீங்களா? நம்ப ஏலாமல் இருக்கே. உங்களுக்கு போன் பண்ணி றிசீவரைக்கூட இன்னும் வைக்கேல்லை. அதுக்கிடையில் இவ்வளவு கெதியாய்... (றிசீவரை வைக்கிறார்)

புறொபசர்: பொதுவர்.. இது விஞ்ஞான உலகம். எல்லாம் றொக்கெட் வேகம். நாங்கள் மட்டும் பின்தங்கலாமா? நான் விஞ்ஞானி. எனக்குத் தெரியும் உலகம் சுத்திற திசைக்கு ஒத்த திசையில வந்தன்... இதோ நான் (திடீர் அந்தரத்தோடு) ஆ... எனக்கு நேரமில்லை... நான் போகவேணும்... ஒரு றிசேச் செய்து பாதியிலை விட்டுட்டு வந்திட்டன். அதை இண்டைக்கு எப்பிடியும் முடிக்கவேணும். அப்பத்தான் நான் எதிர்பார்க்கிற றிசல்ற்வரும். இல்லாட்டில்... நாளைக்கு அதை வேறை ஆரும் செய்து வேறை றிசல்ற்றைப் பப்பிளிஷ் பண்ணிப்போடு வாங்கள். (மற்ற இருவரையும் பார்த்து) மன்னிக்க வேணும்.

பொதுவர்: (புறொபசரின் கைகளைப் பிடித்தபடி) ஓ... புறொபெசர் நீங்கள் வந்ததே எனக்குப் பெரிய ஆறுதல். வாருங்கோ (புறொபசரின் கையிலுள்ள புத்தகங்களையும் பைலையும் வாங்கத் தெண்டிக்கிறார். புறொபசர் மறுத்துவிடுகிறார்) ஓ... புறொபெசர் இவையை உங்களுக்குத் தெரியும் எண்டு நினைக்கிறன். அருட்சோதி அம்பலவாணற்றை ஞாபகார்த்தக் கூட்டத்தில அறிமுகப்படுத்தி வைச்சனான்.

புறொபெசர்: ஓ.... (ஆமோதிக்கும் விதத்தில் தலையை ஆட்டி) அறிமுகப்படுத்தினால் கட்டாயம் தெரியும் (தியாகர் பக்கம் திரும்பி) ஹலோ (அவரை அணைக்கிறார், அணைத்தபிடி விடாமலே பொதுவரிடம்) இவற்றை பெயர் என்ன?

பொதுவர்: தியாகர்... தியாகி தியாகர்...

புறொபெசர்: ஓ... ஓதியாகர்.... தியாகர்... (இரண்டு தரம் அவரை மார்போடு அணைத்துக் கொள்கிறார். முகத்தில் சிரிப்பை வரவழைத்தபடியே) உங்கடை சாகித்தியங்கள் எல்லாம் இப்ப எப்பிடிப் போகுது.

தியாகர்: (சற்று வெட்கப்பட்டவராக) நான் இன்னும் சம்சாரி ஆகேல்லை.

புறொபசர்: ஓ.... அதுதானே, கேட்டன் Hi Parade டிலை உங்கிடை இரண்டு மூண்டு பாட்டுக் கேட்ட ஞாபகம். (அருளர் பக்கம் திரும்பி) ஹலோ....

அருளர்: (அறிமுக பாவனையில்) அருளர்... வணக்கம் (கை கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்).

புறொபசர்: பொதுவர்... இந்த றிசேச்சிலை ஈடுபட்டால் பிறகு மற்றப் பிரச்சினைகளிலை தலையிட எனக்கு நேரமில்லாமல் இருக்கு. என்ன செய்யிறது?

அருளர்: நீங்கள் அதுகளைப்பற்றியெல்லாம் கவலைப்படாதயுங்கோ. அதுகளையெல்லாம் நாங்கள் கவனிப்பம்.

தியாகர்: நாட்டின்ரை முன்னேற்றத்திற்கு நீங்கள் றிசேச் செய்யிறதுதான் நல்லது. மற்ற விஷயங்களிலை ஈடுபட்டீங்கள் எண்டால் நேரம் பிரயோசனமாய்க் கழிஞ்சுபோம்.

புறொபசர்: ஓ...அப்ப... நீங்களும் றிசேச் வேக்கேசா (Research Workers) குட்... குட்... (Good Good) (பொதுவரிடம் திரும்பி) பொதுவரிடம் திரும்பி) பொதுவர்... சுத்தி வளைச்சுப் பேசிறது விஞ்ஞானியின்ரை பழக்கமில்லை. பிரச்சினையை நேரடியாகக் காணுறது, அதை நேரடியாகத் தாக்கிறது இதுதான் எங்கிடை மெதட். (Method)

அருளர்: (சற்று குழப்பத்தோடு தியாகர் பக்கம் திரும்பி) ஆனால் சுத்தி வளைக்காமல் ஆக்களைப் பிடிக்கிறதெண்டது சரியான கஷ்டமே.

தியாகர்: ஒமோம்...அது கத்தி வாற பக்கத்தைப் பொறுத்திருக்கு.

புறொபசர்: தற்ஸ் றைற் (That is Right) எங்கிடை பாஷையிலை நாங்கள் அதை போலறைசேஷன் (Polarisation) முனைவாக்கம் எண்டு சொல்லுவம்.

அருளர்: நாங்களும் அந்த மெதட்டைத்தான் பாவிக்கிறனாங்கள்.

புறொபசர்: ஓ.... அப்பிடியெண்டால் நீங்கள் உண்மையானறிசேச் வேக்கேஸ்தான். ஹவ்... குட்... ஹவ் குட் (How Good How Good) (சொல்லியபடியே அருளரை அங்காலும் இங்காலுமாக மார்போடு இருமுறை அணைக்கிறார். பொதுவரிடம் திரும்பி) பொதுவர் இவர்களைப் போன்ற பிறக்ரிக்கல் றிசேச் லேக்கேஸ் (Practical Research Workers) உமக்கு நண்பர்களாய் இருக்க நீர் குடுத்து வைச்சிருக்க வேணும். (இந் நேரத்தில் கடிகாரம் பதினெட்டுத் தரம் அடித்து ஓய்கிறது இதைப் புறொபெசர் உன்னிப்பாகக் கவனித்த பின்னர் ஓ நேரம் கனக்கச் சிலவழிஞ்சு போச்சிது. பொதுவர் நான் போக வேணும். பிரச்சினையைச் சொல்லும்.

பொதுவர்: (பழைய வேதனை முகத்திற் கவிய ஓ.. புறொபசர் உங்களுக்குச் சொல்லாமல் நான் வேறை ஆருக்குச் சொல்லுவன். எனக்குக் கஸ்டமெண்டால் உங்களைத் தவிர வேறை ஆர் எனக்கு உதவிசெய்ய வருவினம்?

அருளர்: (கலவரம் அடைந்து) எங்களையும் வைச்சுக்கொண்டு நீங்கள் இப்பிடிக் கதைக்கிறது என்னவோ ஒரு மாதிரியிருக்குது. (முகத்தைச் சுழிக்கிறார்)

தியாகர்: ஓம் பொதுவர்இ நாங்கள் போனாப் பிறகு நீர் உண்மையைச் சொல்லியிருக்கலாம்.

புறொபசர்: உண்மையைப் பற்றிப் பேசுகிறதுதான் விஞ்ஞானம். பொதுவர் நீங்கள் சொல்லுங்கோ... உண்மையிலை... நீங்கள் சொன்னதைப் பற்றி அவை குறை விளங்க மாட்டினம்.

பொதுவர்: புறொபசர்... (கவலையோடு, சிதறிக் கிடக்கும் தாள்களைக் காட்டி) இதெல்லாம் இந்த ஸ்ரூலிலை தான் முதல் இருந்தது. நேற்று இண்டைக்கு மட்டுமில்லை. நெடுக இதிலை தான் இருக்கிறது. ஆனால்... ஏனோ எனக்குத் தெரியாது. கொஞ்சம் முந்தித் திடீரெண்டு பறக்கத் தொடங்கியிட்டுதுகள். மூண்டு தரம் திரும்பத் திரும்ப வைச்சும் இதிலை இராமல் பறந்து போகுதுகள்... எனக்கு ஏன் எண்டே விளங்கேல்லை. எப்பிடி எல்லாத்தையும் திருப்பி வைக்கிறதெண்டும் தெரியாமல் நிக்கிறன். (தியாகரையும் அருளரையும் காட்டி) இவை....

அருளர்: (பொதுவரை இடைமறித்து) புறொபசர் இந்த இத்திலை ஒரு விளக்கம் உங்களுக்கு இருக்கிற சந்தேகத்தைப் போக்கும் எண்டு நினைக்கிறேன். ஒருவேளை நீங்கள் நினைப்பியள் நாங்கள் தான் இதையெல்லாம் எறிஞ்சமோ எண்டு. ஆனால் அது பொய். உண்மை என்னெண்டால், நாங்கள் வரேக்கையே அது சிதறிப்போய்த் தான் கிடந்தது. சிதறிப் பறக்கிறதை நாங்கள் கண்டிருந்தால் அதைக் கட்டாயம் அப்பிடிச் செய்ய விட்டிருக்க மாட்டம்.

தியாகர்: புறொபசர், அருளர் சொல்லுவது முற்றிலும் உண்மை, அதுக்கு நான் சாட்சி, ஒருவேளை இதுகள் தான் எங்களைச் சிதற அடிச்சிருக்குமே தவிர, எங்களாலை இதுகளைச் சிதற அடிக்க ஏலாது.

பொதுவர்: புறொபசர்... இதெல்லாம் ஏன் கிளம்பிப் பறக்குது? என்னாலை ஏன் இதுகளை இருந்த இடத்திலை வைக்க ஏலாமல் இருக்குது? அதுதான் புறொபெசர் எனக்கு விளங்கேல்லை.

அருளர்: (புறொபெசரிடம்) இந்த இடத்திலையும் ஒரு சின்ன விளக்கம். ஒருவேளை நீங்கள் நினைப்பியல் எங்களுக்கும் இது விளங்கேல்லை எண்டு. ஆனால் அது பொய்.

தியாகர்: உண்மை என்னெண்டால், எங்களுக்கு இதுகளைப் பற்றி விளங்கிக் கொள்ளுறதுக்கு விருப்பமில்லை.

பொதுவர்: ஆனால் புறொபசர் இது ஏன் இப்பிடி நடப்பான்?

புறொபசர்: (தலையைத் தடவியபடி, தாள்களைப் பார்த்து) கர்த்தர் இல்லாமல் காரியம் நடைபெறாது. இதுக்கெல்லாம் ஏதோ ஒண்டு வெளியாலை நிண்டு தொழில் புரியுது. (பார்வையை ஸ்ரூல்மீது திருப்பியபடியே) அது என்ன எண்டு மாத்திரம் கண்டு பிடிச்சுட்டம் எண்டால்.... பிறகு இதெல்லாத்தையும் இருந்த இடத்திலேயே திரும்பவும் வைக்கலாம்.

அருளர்: புறொபசர்... ஒருவேளை நீங்கள் யோசிப்பியள் இதுகளுக்கெல்லாம் காரணம் ஆர் எண்டு எங்களுக்கு முந்தியே தெரியாது எண்டு. ஆனால் கர்த்தா தான் எண்டு எங்களுக்கு முந்தியே தெரியும்.

தியாகர்: கர்த்தா எண்டது தமிழ். 'கற்றா' (Catarrh) எண்டது இங்கிலிஷ் (English) கற்றா எண்டது ஒருவகை வியாதி. சுருங்கச் சொல்லப்போனால், வியாதியே துன்பத்திற்குக் காரணம். இது முந்தியே எங்களுக்குத் தெரியும். (அருளரையும் தியாகரையும் மாறி மாறிப் புறொபசர் பார்த்த போதிலும் தன் சிந்தனை லயத்தைக் கைவிடாமல் உன்னிப்பாக பொதுவர் பக்கம் திரும்பி)

புறொபசர்: விஞ்ஞான முறையை மூண்டு பிரிவாய்ப் பிரிக்கிறம். பரிசோதனை, நோக்கல், உய்த்தறிவு, இந்த வழியைப் பின்பற்றினால் நிச்சயம் காரியகர்த்தா தெரிவார். இந்த வழியைத்தான் நாங்களும் பின்பற்றுவம். பொதுவர் கவலைப்படாதையும். உம்மிட பிரச்சினைக்கு இன்னும் கொஞ்ச நேரத்திலை விடிவு பிறக்கும்.

பொதுவர்: ஓ புறொபசர் தாங்க் யூ.

புறொபசர்: (மகிழ்ச்சியுடன்) சரி எல்லாத் தாள்களையும் பொறுக்குங்கோ. (மூவரும் அவசர அவசரமாய்த் தாள்களைப் பொறுக்கி எடுத்து, தியாகர் தான் பொறுக்கிய தாள்களை அருளரிடம் நீட்ட அதை அருளர் வாங்கி தான் பொறுக்கியவற்றோடு சேர்த்து புறொபசரிடம் கொடுக்கிறார். பொதுவரு ம தான் பொறுக்கியவற்றை புறொபசரிடம் கொடுக்கிறார். இவற்றை அடுக்கி பொதுவரிடம் நீட்டியபடியே)

புறொபசர்: பொதுவர் நீங்கள் முதல் மூண்டு தடவையும் எப்பிடி வைச்சியளோ... அதே மாதிரி இந்த முறையும் வையுங்கோ. ஒரு கொஞ்சப் பிழை வந்தாலும் பிறகு கல்குலேஷனிலை (calculation) அது தாக்கும். கவனம் (புறொபெசரின் எச்சரிக்கையால் நடுக்கமுற்ற பொதுவர், தயங்கியபடியே)

பொதுவர்: (தாள்களை வைக்காமல்) ஓ... புறொபெசர் நீங்கள் வையுங்கோ.. என்னாலை ஏலாது...பிளீஸ்...

அருளர்: (ஆதரவாக) பொதுவர் பொதுவர் பயப்பிடாதையுங்கோ.... நாங்கள் இருக்கிறம்தானே.... (பொதுவர் யோசிக்கிறார்)

தியாகர்: ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ... அது பறந்தால் நாங்கள் பொறுக்கித்தாறம்.

புறொபெசர்: இதிலை பயப்படுறத்துக்கு ஒண்டும் இல்லைப் பொதுவர். பிரச்சினை தீரவேணும் எண்டால் நான் சொல்லுறது மாதிரிச் செய்யுங்கோ. (பைலையும், காகிதம் பேனை ஆகியபற்றையும் எடுத்து புறொபெசர் குறிப்பெடுப்பதற்கு ஆயத்தமாகி) சரி...இனி வையுங்கோ...

அருளர்: ம்....ம்.... பயப்பிடாமம்.

தியாகர்: நான் வைப்பன்தான் எண்டாலும் அவர் வைக்குமாப்போலை வராது. (பொதுவர் மெல்ல மெல்ல காகிதக்கட்டை வைக்கிறார். இடையில் புறொபெசர்)

புறொபெசர்: கையை விட்டிடாதையும் (அவசர அவசரமாகக் கோட்டுப் பையிலிருந்து 'ரேப்' ஒன்றை வெளியே எடுக்கிறார். அதன் அளவுப் படிவகுப்பைப் பார்த்தபடியே ஸ்ரூலிலிருந்து கையின் தூரத்தையும் பொதுவரின் தூரத்தையும் அளவெடுத்துக் குறித்துக்கொள்கிறார். வேறு சில அளவுகளையும் குறித்துக் கொள்கிறார். இந்நேரத்தில் முன்னர் கேட்டது மாதிரி ஒரு சூறாவளியின் ஆரம்பச் சத்தம் மெல்லக் கேட்கிறது. அது மெல்ல மெல்லக் கூடி வலுக்கும்போது)

புறொபெசர்: (சத்தத்தைக் கவனியாமல்) சரி கையை விடுங்கோ. (ஆனால் பொதுவர் கையை விடாமல் அழுத்திப் பிடிக்கத் தாள்கள் பறக்க எத்தனிக்கும் தன்மை தெரிகிறது. இரு கைகளாலும் காகிதத்தை அழுத்திப் பிடித்தபடியே வேதனைக்குறியை முகத்திற் கூட்டிக் கூட்டி வேதனைக் குரலோடு)

பொதுவர்: புறொபெசர்.

புறொபெசர்: கையை விடுங்கோ..

பொதுவர்: புறொபெசர்.... புறொபெசர்...

புறொபெசர்: (அந்தரத்துடன்) கை விடுங்கோ... கையை விடுங்கோ (சூறாவெளி உச்ச நிலையை அடைய பொதுவர் முன்னர் போல எத்தித் தள்ளப்படுகிறார். தாள்கள் எல்லாம் பறக்கின்றன. வியர்க்க விறுவிறுத்து மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க, தொப்பென்று கதிரையில் விழுகிறார் பொதுவர். அருளரும் தியாகரும் ஓடிச் சென்று அவரைத் தேற்றியபடியே)

அருளர்: பேய் மனிசன்.... செய்த வேலையைப் பார். அறப்படிச்சவன் கூழ்ப்பானைக்குள்ளை எண்டது சரியாய்ப் போய்ச்சுது.

தியாகர்: நல்ல வேளை கூழ்ப்பானை அறப்படிக்கேல்லை. (இவற்றைப் பொருட்படுத்தாது, புறொபெசர் பொதுவர் தள்ளப்பட்ட, தூரம் ஸ்ரூலுக்குக் கிட்டக் கிடக்கும் தாள், அதிதொலைவி கிடக்கும் தாள், ஆகியவற்றினுடைய தூரங்களைக் குறித்துக் கொண்டிருக்கிறார்)

அருளர்: (முன் வசனத்தின் தொடர்ச்சியாக வெடுவெடுப்புடன்) ஓ... படிச்சிருந்தால் அதுவுமிப்ப புறொபெசர் தான் (தியாகர் கிளாசில் தண்­ரை ஊற்றிக் கொண்டிருக்கும் போது)

புறொபெசர்: (தனது அளவைகளிலும் பைலிலும் கவனத்தைச் செலுத்தியபடியே) பொதுவர் நீர் ஒண்டுக்கும் பயப்பிடாதையும். பரிசோதனையும் முடிஞ்சுது. நோக்கலும் முடிஞ்சுது. உய்த்தறிதல்தான் மிச்சம். இன்னும் ஐஞ்சு நிமிஷத்திலை எல்லாஞ் சரி. உமக்கும் உம்முஐடய பிரச்சினைக்கும் விடிவு. (ஒரு கதிரையை இழுத்து நீண்ட மேசைக்கு கிட்டப் போட்டு மிகவும் காத்திரமாக நோக்கல்களுக்குத் தீர்வுகாண முற்படுகிறார். அப்போது)

அருளர்: விடிவென்ன வேண்டியிருக்கு புறொபெசர் விடிவு, ஆளே முடியப் பாத்திது (இந்தக் குறிப்புக்குச் செவி சாய்க்காமல் புறொபெசர் தன் கருமத்தில் கண்ணாய் இருக்கிறார். கீழ் வரும் வசனங்களின்போது புறொபெசர் கிளாசில் தண்­ரை ஊற்றி ஊற்றிக் குடிக்கிறார். தண்­ர் சாடியில் முடீந்தாலும் குடிக்கும் பாவனை தொடர்ந்து நடக்கிறது. மௌனமாக மூன்று நான்கு வினாடிகள் கழிய) இருந்தாலும் இந்த அலட்சியம் கூடாது. அறிவு நல்லது தான். ஆனாலும் அது அலட்சியமாயும் ஆணவமாயும் மாறக்கூடாது.

தியாகர்: ஓமோம்... ஆணவம் அலட்சியமாக மாறலாமே தவிர அலட்சியம் ஆணவமாக மாறக்கூடாது.

அருளர்: (வெறுப்பாகக் குரலை உயர்த்தி) அதுதானே சொல்லுறது இரக்கப் போனாலும் சிறக்கப்போ எண்டு.

தியாகர்: (வெறுப்பாக குரலை உயர்த்தி) ஓமோம்... சிறப்பு இறப்புக்குப் பிறகுதான்.

அருளர்: (புறொபெசரைப் பார்த்தபடி ஆத்திரம் தொனிக்கும் குரலில்) அவிஞ்சு புண்ணாகிறதைவிட, செத்துச் சாம்பலாகிறது நல்லது.

தியாகர்: (அருளரைப் போலவே ஆத்திரக்குரலில் புறொபசரைப் பார்த்து) செத்துச் சாம்பலாகினாலும் அஸ்தியை ஆத்திலை தான் கரைக்க வேணும்.

இருவரும் : (உச்சக்குரலில்) செய் அல்லது செத்துமடி. (இருவரும் புறொபெசரைப் பார்த்தபடியே கண்களில் கனல் கக்க வெடுக்கென்று ஆசனத்தில் அமர்கின்றனர். நான்கைந்து வினாடி மௌனத்துக்குப் பின்பு புறொபெசர் எழுந்து தனது பைலைத் தூக்கிப் பிடித்தபடியே மகிழ்ச்சி மேலீட்டினால்)

புறொபெசர்: கண்டுபிடித்து விட்டேன்... கண்டுபிடித்து விட்டேன்... பொதுவர்.... பொதுவர்....கவலையை விடும். இதோ விடிந்து விட்டது. (எல்லோரும் சடக்கென்று எழுகிறார்கள். பொதுவர் மகிழ்ச்சியோடு புறொபெசரைக் கட்டித் தழுவி, பைலைப் பார்க்கிறார். முன்பிருந்த கோபக் குறிகள் அருளர் தியாகர் ஆகியோரது முகத்தில் இப்போது இல்லை)

அருளர்: (ஏளனத்தோடு) எட..... எங்களுக்கு இது முந்தியே தெரியும்.

தியாகர்: ஓம்... பொழுது பட்டால் விடியுந்தானே.

புறொபெசர்: பொதுவர் (பெருமிதக் குரலோடு) கர்த்தாவை இப்போது நான் சொல்லமாட்டேன். அதுக்கு முந்தி என்ரை உய்த்தறிவிலை வந்திருக்கிற சிறப்பான ஒரு கண்டுபிடிப்பைத்தான் முதலை உங்களுக்குக் காட்டப்போறேன்.

அருளர்: நாங்கள் முன்னமே கண்டு பிடிச்சிட்டம். ஆனதாலை உது எங்களுக்கு அதிசயமாய் இராது. (கீழே சிதறிக் கிடக்கிற காகிதங்களைப் பொறுக்கியெடுத்து, பொதுவரை ஸ்ரூலுக்குக் கிட்ட அழைத்துச் செல்கிறார். முதலில் அசையாது நின்ற அருளரும் தியாகரும் ஆர்வம் மேலீட்டினால் தயங்கித் தயங்கி இரண்டடி முன்னால் எடுத்து வைத்து ஆர்வத்தோடு புறொபெசரைப் பார்க்கின்றனர்)

புறொபெசர்: (அருளரையும் தியாகரையும் மாறி மாறிப் பார்த்து சரி.... இந்தக் காகிதங்களை இதிலை வைக்கிறன் எண்டு வச்சுக் கொள்ளுவம். அப்பிடியெண்டால், இது எந்தப் பக்கத்துக்குப் பறக்கும்? அங்காலையோ இங்காலையோ? (மேடை உள்ளும் சபையோர் பக்கமும் சைகையால் காட்டுகிறார்.)

அருளர்: (இதில் ஏதோ சூது இருக்க வேண்டும் என ஐயப்பட்டவராக) அது... சொல்லுறதெண்டால்.... ம்.... சொல்லுறது... சொல்ல ஏலாது.... அது பறக்கிற பொருளைப் பொறுத்திருக்கு. உது...வந்து...

பொதுவர்: (இடைமறித்து) நாலு தரமும் வைக்கேக்கை இஞ்சாலைதான் பறந்தது. (திசையைக் காட்டுகிறார்)

புறொபெசர்: (தலையை மேலே தூக்கிச் சிரித்தவாறு) ஹஹ்....ஹா...அப்பிடித்தான் எல்லாரும் நினைக்கிறது. நானும் அப்பிடித்தான் முதலிலை நினைச்சன். ஆனால் அது பிழை. இஞ்சை பாரும். (பைலைக் காட்டுகிறார்) இதிலை வருகுது மறைக்குறி (பொதுவர் புறொபெசரைப் பார்க்கிறார்) மறைக்குறி எண்டால் மைனஸ் சய்ன் (Minus Sign) ஆகையாலை காகிதம் எல்லாம் இந்தப் பக்கம் பறக்க ஏலாது. பறந்தால் அது விஞ்ஞானத்துக்குப் பிழை. என்ரை கல்குலேஷன்படி (Coculation) இந்த மைனஸ் சய்ன் இக்கிறதாலை இதெல்லாம் இந்தப் பக்கம்தான் பறக்கும் (சபையோர் இருக்கும் பக்கத்தைக் காட்டுகிறார்)

பொதுவர்: நம்ப ஏலாமல் இருக்குதே புறொபெசர்.

புறொபெசர்: நம்பமுடியாத எத்தினை விஷயங்களை விஞ்ஞானம் சாதிச்சுப்போட்டுது. விஞ்ஞானம் எண்டாலே விசித்திரம்தான்.

தியாகர்: ஆனால் புறொபெசர் எல்லா விசித்திரங்களும் விஞ்ஞானம் ஆகாது.

அருளர்: அதெல்லாம் விசித்திரமாய்க் கொள்ளுற ஆக்களைப் பொறுத்திருக்கு.

பொதுவர்: அருளர்.... நீங்கள் இதை நம்பிறியளா?

அருளர்: உது எங்களுக்கு முந்தியே தெரியும்.

புறொபெசர்: இதைமட்டும் நான் வெளியிட்டால் காணும். இந்த முறை நோபல் பிறைஸ்ஸே (Nobel prize) எனக்குத் தான். (அருளரும் தியாகரும் ஒருதலை ஒருதர் அர்த்தபுஷ்டியோடு பார்க்கின்றனர்)

அருளர்: அதுக்கெல்லாம் இப்ப என்ன அவசரம் புறொபெசர். பாவம் பொதுவர், அவற்றை விஷயத்தை முதலொருக்கால் பாருங்கோ.

தியாகர்: ஓமோம்... நீங்கள் இதைப் பாருங்கோ.... பிறைஸ் கரைச்சலை எங்களோடை விடுங்கோ.

புறொபெசர்: (மிகவும் மிடுக்காக) சரி. இனி எல்லாருக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டின் அதியங்கண்டு பிடிப்பைக் காட்டப்போகிறன் )காட்டுவதற்கு ஆயத்தப்படுத்துகிறார்)

அருளர்: (ஆட்சேபனைக்குரலில்) உது முந்தியே நாங்கள் காட்டிப் போட்டம்.

புறொபெசர்: (ஒவ்வொருவராய்க் கம்பீரமாகப் பார்த்து) இதை முதல் நான் வைப்பேன். எல்லாம் இங்காலே பறக்கும் பிறகு நான் கர்த்தாவைவ் சொல்லுவேன். பிறகு பொதுவரின் பிரச்சினையைத் தீர்ப்பேன். பிறகு பொதுவரின் கவலை தீரும். (அருளர் ஏதோ கதைக்க முற்படும்போது வாயிலே விரலை வைத்து அவரை அடக்குகிறார். புறொபெசர் மௌனம் இரண்டு மூன்று வினாடிகள் மண்டபத்தைக் கௌவிக்கொள்ள மூவரையும் பார்த்தபடியே ஸ்ரூலில் தாள்களை வைக்கிறார். அவை சிதறி முன்னர் பறந்த திசையிலேயே பறக்கின்றன. நால்வரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். தாள்களை வெறித்துப் பார்த்தபடியே நிற்கிறார் புறொபெசர். மற்ற மூவருடைய கண்களும் தாள்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகின்றன. சில வினாடி மௌனத்துக்குப் பின் அருளர் தன் நிலை அடைகிறார், அலட்சியப் பார்வை ஒன்றை புறொபெசரில் ஓட விட்டபடியே அருளர் சொல்கிறார்)

அருளர்: உது எங்களுக்கு முந்தியே தெரியும்.

தியாகர்: (சிந்தனை லயத்தோடு) உதெல்லாத்துக்கும் மருந்து ஊர்வலம்தான். (கலவரமடைந்த புறொபெசர் தலையைத் தடவியபடியே தனது பைலைப் பார்க்கிறார். பின்னர் அதைப் பார்த்தபடியே அங்குமிங்குமாக நடக்க ஆரம்பிக்கிறார். பின்னர் நின்று பைலைப் பார்த்தபடியே)

புறொபசர்: எங்கேயோ ஓரிடத்திலை பிழை விட்டிட்டன். எங்கை எங்கை...ம்....விஞ்ஞானம் ஒருக்காலும் பிழைக்காதே... எங்கை...எங்கை.... (பைலோடு இருந்து செய்கையைச் சரிபார்க்கத் தொடங்குகிறார்).பொதுவரும் குனிந்து அவரோடு பார்க்கிறார். பின்னர் அருளர் நடந்து வந்து இருவரோடு தானும் சேருகிறார். சில வினாடிகளுக்குப் பின் தியாகரும் சேர்கிறார். அருளர், தியாகர், பொதுவர் மூவரும் பைலைப் பார்த்தபடியே நிற்க, அவசர அவசரமாக இருந்தபடியே வெட்டி வெட்டி எழுதுகிறார் புறொபெசர். இது நடக்கும்போது ஒருவரையொருவர் பார்க்காது மற்றவர் பக்கத்தே நிற்கிறார் என்ற உணர்வுகூட இல்லாமல் உன்னிப்பாய் மூவரும் பார்த்தபடியே இருக்க புறொபெசர் வெட்டி வெட்டி எழுதுகிறார். பின்னர் நால்வரும் சிலையாகிறார்கள். இவ்வாறு ஓரிரு வினாடிகள் கழிய, விசித்திரமான உடைகளோடு ஒருவர் அடிமேல் அடி வைத்து மேல் மேடை வலப்புறத்திலிருந்து கீழ் மேடைக்கு வருகிறார். இவர் ஆர், என்ன வர்க்கத்தினர், என்பது வெளிப்படையாக நாடகப் பார்வையாளருக்குத் தெரியக் கூடாது. அடிமேல் அடிவைத்து வந்தவர்கீழ் மேடைக்கு வந்ததும் நின்று, சபையோரைச் சத்தம் செய்யாமல் இரு ககும்படி சைகை செய்கிறார். பின்னர் நால்வரையும் அச்சத்தோடு பார்த் ஓர் ஏழனச் சிரிப்பை உதட்டில் உதிர விட்டபடி பேசத் தொடங்குகிறார்.

பிரச்சினை: சூ.... சத்தம் செய்யக் கூடாது. அந்த நாலுபேரும் மும்முரமாய் ஏதோ வேலையில் ஈடுபட்டு இருக்கினம். அவையைக் குழப்பக் கூடாது. நான் இப்ப இங்கை வந்தது உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போகத்தான். நான் ஆரெண்டு உங்களுக்குத் தெரியுமே. உங்களுக்குத் தெரியிறகாலை ஒரு பிழையுமில்லை, ஆனால் அவைக்குத் தெரிஞ்சால் பெரிய பிழை. பிறகு என்னை இருக்க விடமாட்டினம். (இரண்டடி கரைக்கு எடுத்து வைத்து) இவையெல்லாம் தலையை உடைக்கிறதுக்குக் காரணமாய் இருக்கிறதே நான் தான். என்ரை பேர்தான் 'பிரச்சினை' நான் இல்லாட்டில் உலகத்திலை கவலை இராது. அதாலைதான் நான் இப்படியே பேசாமல் இருக்கிறன். அறிவு பொய்க்காது அதாலை எல்லாத்தையும் சரிக்கட்டலாம் எண்ணுறார் புறொபெசர். தங்களுக்கு எல்லாத்தையும் தீர்க்கிறதுக்கு வழி தெரியும் எண்டு சொல்லிக்கொண்டு ஒண்டும் தெரியாமல் ஏமாத்தித் திரியினம் அருளரும், தியாகரும். புறொபெசர் சொல்வது ஓரளவுக்குச் சரி. ஆனால் அறிவு மட்டும் இருந்தால் போதுமே. அதைச் சரியான வழியிலை பிரயோகிக்கவும் தெரிய வேணுமெல்லே. பொதுவரை விட்டு நான் நீங்கின பாடில்லை. பொதுவர் பாவம், இவரிட்டையும் அவரிட்டையும் போகாமல் தன்னிலை நம்பிக்கை வச்சு, தன்னைச் சுறண்டி வாழுறவையை முதலிலை நீக்கி, தன்ரை அதிகாரத்தை பொதுவர் தானே நிலைநாட்டி இருந்தால் எனக்கு இஞ்சை வேலையே இருந்திருக்காது. பொதுவருக்கு அந்த யோசனை வரேல்லை. இவை செய்யிற பிழை என்ன தெரியுமே. (பிறகும் இரகசியமாக) ஒவ்வொருதரும் தங்கிடை தங்கிடை இருக்கயிலை இருந்து கொண்டு என்னைக் கண்டு பிடிக்கிறதாய்ப் பாவனை செய்யினம். நான் என்ன மடையனே. இவையிட்டைப் போய் இஞ்சை பாருங்கோ, நான்தான் இதுகளுக்கெல்லாம் காரணம் எண்டு சொல்லுறதுக்கு? என்னைக் கண்டு பிடிக்க முயலுகிறவை எல்லாரும் கொஞ்சம் கீழை இறங்கிவந்து நான் இருக்கிற தளத்திலை நிண்டு பார்த்தால் நான் என்ன மறைஞ்சு போவனே? இப்ப நடந்ததைப் பாருங்கோ. என்னைக் கண்டு பிடிக்க வெளிக்கிட்டவை, என்னை மறந்துபோய், வேறை எதையோ பற்றி முழிச்சுக் கொண்டு நிக்கினம். பாவம் பொதுவர். இன்னும் கொஞ்சம் வளைஞ்சு குடுத்தார் எண்டால் உவை மாத்திரமில்லை இன்னும் எத்தனையோ பேர் அவரிலை ஏறியிருந்து குதிரை விடுவினம். இனியும் நான் இஞ்சை நிக்கிறது ஆபத்து. நான் வாறன். நான் வந்திட்டுப் போறன் எண்டு மட்டும் சொல்லிப் போடாதையுங்கோ. சரி அப்ப நான் போட்டுப் பிறகு வாறன். (திரும்பி அடிமேல் அடி வைத்துப் போய் மறைகிறார் (கடிகாரம் தான் விரும்பிய மட்டும் அடித்து ஓய்கிறது புறொபசர் மெல்ல நிமிர்கிறார். எல்லோரும் சற்று விலகுகிறார்கள். மூவரையும் திரும்பிப் பார்க்கிறார் பின்பு வைலைப் பார்க்கிறார். எழுந்தபடியே)

புறொபெசர்: சரி... இப்ப எல்லாம் சரி. ஆனால் இந்தக் கொன்ஸ் ரன்ஸ் (constant) தெரிஞ்சுதெண்டால் பிரச்சினை தீர்ந்து போகும். (யோசனையோடு) ம்.... இந்தக் கொன்ஸ்ரன்ற் என்னவாயிருக்கும்? ம்....

பொதுவர்: (பயத்தோடு) அதென்ன புறொபெசர்....இந்தக் கொன்ஸ்ரன்ற்

புறொபெசர்: பயப்பிடாதையும் பொதுவர். அது ஒரு லேசான விஷயம். பரிசோதனை நடக்கிற நிலைமைகளுக்குள்ளை மாறாமல் இருக்கிற ஒண்டைத்தான் கொன்ஸ்ரன்ற் எண்டுசொல்லுறம் மாறிலி எண்டு தமிழிலை சொல்லுறது.

பொதுவர்: அப்பிடியெண்டால் புறொபெசர்....இந்த....கொன்ஸ்ரென்ற்ரை கண்டுபிடிக்க வேறை வழியில்லையே.

புறொபெசர்: அது தான்... என் திறயத்தை அப்பிளை Theorem Apply பண்ணலாம் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.

அருளர்: இந்த இடத்திலை ஒரு சின்ன விளக்கம் புறொபெசர். நீங்கள் நினைப்பியள் தியறம் அப்பிளை பண்ணுறது பற்றி எங்களுக்கொண்டும் தெரியாது எண்டு..... அப்பிடி நினைச்சால் அது பிழை. (இந்த நேரத்தில் கதவு மணி அலறுகிறது. பொதுவர் கதவைத் திறப்பதற்காகப் போக மற்ற மூவரும் பார்த்தபடியே நிற்கிறார்கள். பொதுவர் கதவைத் திறந்ததும் சிவாயர் உள்ளே வருகிறார். இவர் மெலிந்த தோற்றமுடையவர். நெற்றியிலே சந்தனப் பொட்டு பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. இவரைச் 'சாமியார்' என்ற வடிவிலே இரசிகர் இனம் கண்டு கொள்ளக் கூடாது. பக்தி மார்க்கத்திலே ஈடுபட்ட பெரிய மனிதர். அவர் உள்ளே வரும்போதே)

பொதுவர்: (ஆச்சரியத்தோடு) சிவாயர்.... கனகாலத்துக்குப் பிறகு....

சிவாயர்: ஓம்... எனக்கு இஞ்சை வர விருப்பமில்லை எண்டு நீங்கள் கருதக்கூடாது. குளத்தங்கரைத் தாளங்காய்க்கு ஆறென்ன கிணறென்ன. பற்றற்றதுதானே வாழ்க்கை. நாங்கள் அறுத்தால் அறுமே. படைச்சவன் இருக்கிறார். படி அறுப்பான்தானே... பாரும் என்னுடைய குருநாதர் எனக்குச் சொன்னார் 'டேய் தம்பி பிறந்திட்டன் எண்டு ஒருநாளும் நீ கவலைப்படாதை.... கட்டாயம் ஒரு நாளைக்குச் சாவாய் எண்டார். உண்மையைத்தான் சொல்லுறன் அந்த மகானின்ரை வார்த்தை ஒரு நாளும் பொய்யாது.

பொதுவர்: (பெருமூசோடு) ம்.... அந்த நாள் வராமல் இருக்குதே எண்டுதான் எனக்கு கவலை.

சிவாயர்: ஓ...ஓ....ஓ (சிரிக்கிறார்) என்னுடைய குருநாதர் சொன்னது மாதிரி இருக்குது. 'சா வருகுதில்லை எண்டு கவலைப்படுறதிலையே நீ செத்துப்போவாய் எண்டு அவர் சொல்லுவார். இதிலை ஒரு பெரிய உண்மை இருக்கு. அதென்னெண்டால் கவலைப்பட்டாட்டில் மனிசன் சாகமாட்டான். 'கவலைப்படு கடவுளைக்காண்' எண்டுதானே பழமொழியும் இருக்குது.

அருளர்: இந்த இடத்திலை ஒரு சின்ன விளக்கம். நாங்களும் கவலைப்படுகிறதில்லை எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. அப்பிடி நீங்கள் நினைச்சால் அது உங்களின்ரை பிழை.

தியாகர்: ஏனெண்டால்.... நாங்கள் ஒவ்வொரு நாளும் கோவிலுக்குப் போறனாங்கள்.

சிவாயர்: என்னுடைய குருநாதர் கோயிலுக்கே போறேதில்லை. அதாலை அவருக்குக் கவலையுமில்லை நாட்டமுமில்லை அவர் அடிக்கடி எனக்குச் சொல்லுவார் 'கோயிலே காயமாக' எண்டு. அதிலை எவ்வளவு உண்மையிருக்குப் பாருங்கோ. (இந்த நேரம் புறொபெசர் பைலைப் பார்த்தபடி வாயல் பென்சிலைக் கடித்தபடி அவர்களுக்கண்மையில் வந்து)

புறொபெசர்: (தன்பாட்டில்) ஓ இந்தக் கொன்ஸ்ரன்ற் மட்டும் என்னெண்டு தெரிஞ்சுதெண்டால்...

சிவாயர்: (அப்பொழுதுதான் புறொபெசரைக் கண்ட அதிர்ச்சியில்' ஓ...புறொபெசர்... புறொபெசர்... நீங்கள் இங்கை இருந்ததை நான் கவனிக்கவேயில்லை. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.... 'பென்சிலைப் பார்த்து' தலைவீக்கம் எண்டு நீங்கள் கணிக்கக் கூடாது.

புறொபெசர்: (தன்னிலையிலிருந்து மீண்டு) ஓ....(பொதுவரைப் பார்த்து) இவர்....

பொதுவர்: சிவாயர்.... சி..வா...யர்

அருளர்: இந்த இடத்திலை ஒரு சிறு விளக்கம். சிவாயர் என்டது சீ...வாயரே தவிர சிவா...யார் இல்லை...

தியாகர்: ஏனெண்டால் புறொபெசர்... இந்த இடத்திலை நாங்கள் பிழை விட்டம் எண்டால் பிறகு இவர் ஆர் எண்டு கண்டுபிடிக்கிறதிலை கஸ்டம் வரும்.

சிவாயர்: புறொபெசர். ஆயிரம் தான் உங்கிடை விஞ்ஞானம் வளர்ந்தாலும் கடைசியிலை அது கடவுளுக்கு அடிமைதானே?

புறொபெசர்: அடங்கிக்கிடக்கிற சக்தியைக் கட்டவிழ்த்து விட்டால் அது அம்பலவாணனையே தகர்த்துப் போடும்.

சிவாயர்: சும்மா வெருட்டாதையுங்கோ புறொபெசர். என்னுடைய குருநாதர் சொல்லுவார் 'தம்பி டேய் அமெரிக்கனிட்டையும் றஸ்யாக்காரனிட்டையும் தான் அணுக்குண்டிருக்குதெண்டு நினையாதை. இதை விட பெரிய குண்டு (மேலே காட்டி) அவனிட்டை இருக்கு' எண்டார். அதுக்குப் பிறகுதான் எனக்கு விளங்கிச்சு அது உண்மையெண்டு.

அருளர்: (அலட்சியமாக) ஆ.... உதெல்லாம் எங்களுக்கு முந்தியே தெரியும்..

புறொபெசர்: (தன் பைலிலே கவனமாய்) ம்.... இந்த கொன்ஸ்ரன்ற் மட்டும் கிடைச்சுதெண்டால்.

சிவாயர்: (கலவரத்தோடு புறொபெசரைப் பார்த்து) ஓ புறொபெசர் இவ்வளவு படிச்சும் இதுக்கு இவ்வளவு யோசிக்கிறியளே. என்னுடைய குருநாதர் அடிக்கடி சொல்லுவர் அழுதால் பெறலாமே' எண்டு.

அருளர்: இதுவும் எங்களுக்குத் தெரியாது எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது.

தியாகர்: ஏனெண்டால் உண்மையிலை பெறேக்கைதான் தாய்மார் அழுகினம்.

சிவாயர்: அழுகிறது எண்டால் சும்மா லேசான காரியமெண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. என்னுடைய குருநாதர் சொல்லுவர்....(கீழே கிடக்கும் தாள்களைக் கண்டு பொதுவரிடம் திரும்பி) 'சுத்தம் சுகம் தரும், எண்டு, இதேன் கடுதாசி எல்லாம் கீழை கிடக்குது.

பொதுவர்: (திடீரென்று கவலைக்குள்ளாகி) ஓ.... அதுதான் எனக்குத் தெரியேல்லை. இதுக்கு முந்தி இப்படி நடக்கவேயில்லை. இண்டைக்குத்தான்.....ஓ......சிவாயர்.....நான்.....நான்... என்ன செய்ய? எனக்கு...எனக்கு....

சிவாயர்: (ஆதரவாக) பொதுவர்....பொதுவர்......இதுகளுக்கெல்லாம் நீர் இப்பிடிக் கவலைப்படக்கூடாது எல்லாம் அவன் செயல். என்னுடைய குருநாதர் சொல்லுவார் 'டேய் தம்பி, ஆட்டுறதும் அவன், ஆடுறதும் அவன்; பாயிறதும் அவன் பறக்கிறதும் அவன்' எண்டு.

அருளர்: (பொறாமையாக) உதெல்லாம் நாங்கள் முந்தியே சொல்லிப் போட்டம்.

தியாகர்: ஓமோம்.... ஆனால் நீங்கள் ஒண்டை விட்டிட்டியள் (குரலைத் தாழ்த்தி, மிகுந்த பக்திலயத்தோடு) வீசுகிறதும் அவன், விழுகிறதும் அவன்....

சிவாயர்: (தியாகரைப் பார்த்தபடி சிறிது யோசித்துவிட்டு தலையை ஆட்டியபடியே பொதுவர் பக்கம் திரும்பி) பொதுவர்.... 'கவலைக்கு மருந்து கடன் கொடுத்தல்' பயப்படாதையும் உம்மிடை கவலையை எனக்கு தாரும். என்னுடைய குருநாதரின் பெயராலை எல்லாத்தையும் தீர்த்து வைக்கிறன்.

பொதுவர்: (கவலை தோய்ந்த முகத்தோடு கீழே கிடக்கும் தாள்களைக் காட்டி) இதெல்லாத்தையும் நாலுதரம் அதிலை திருப்பித் திருப்பி வைச்சன். ஆனால் நாறு தரமும் அது பறந்திட்டுது. ஏன் பறக்கிது? அதுதான் எனக்குத் தெரியேல்லை. புறொபெசரும் இவையுங்கூடத் தெண்டிச்சுப் பார்த்தும் ம்ஃம்....முடியேல்லை.

அருளர்: இந்த இடத்திலை ஒரு சின்ன விளக்கம். எங்களாலை இது முடியாத அலுவல் நீங்கள் நினைக்கக் கூடாது. அப்பிடி நினைச்சால் அது உங்கிடை பிழை.

தியாகர்: ஊர்வலம்....கஸ்ட நிவாரணி....

புறொபெசர்: (அவர்களுக்குச் சமீபமாக வந்து தன்பாட்டிலேயே) இந்தக் கொன்ஸ்ரன்ற் மட்டும் கிடைச்சால் பிரச்சினை தீர்ந்து போகும்.

சிவாயர்: அஃ...அஃ...ஹா.... (சிரித்தபடி) என்னுடைய குருநாதர் சொல்லுவார் "டேய் தம்பி எல்லாரும் அழுதால் நீ சிரியடா லெண்டு" உங்களாலை ஏலாட்டில் கட்டாயமாக என்னாலை ஏலும்.

அருளர்: (அவரை இடைமறித்து) புறொபெசரும் உதைத்தான் சொன்னவர், செய்ய முதல்.

தியாகர்: ஓமோம்.... செய்தாப்பிறகு, "கொன்ஸ்ரன்ற்" எண்டுதான் சொல்லுகிறார்.

சிவாயர்: (ஏளனமாக அவர்களைப் பார்த்துவிட்டு தாள்களைப் பொறுக்கி அடுக்கியபடியே) என்னுடைய குருநாதர் சொல்லுவார். "டேய் தம்பி, எண்ணித் துணி கருமம் துணிந்த பின் மறந்து போ, எண்டு. (ஸ்ரூலை அணுகி அவரை அறியாமலே விசிறிக்கும் ஸ்ரூலுக்கும் இடையில் நின்றபடி அனைவரையும் பார்க்கிறார். அருளர், தியாகர், பொதுவர் அவரைப் பார்த்தபடி நிற்க புறொபெசர் தன் வேலையில் கவனமாய் இருக்கிறார். கையிலே இருக்கும் தாள்களை ஸ்ரூலில் மெல்ல வைத்த கையை எடுக்கிறார். அவை பறக்காது இருக்கின்றன. இந்நேரத்தில் பொதுவர் ஆச்சரியம் தாங்காது புறொபெசரை அணுகி)

பொதுவர்: புறொபெசர், புறொபெசர்... (ஸ்ரூலைக் காட்டுகிறார். புறொபெசர் உன்னிப்பாகப் பார்க்கிறார். பார்த்துக் கொண்டே ஸ்ரூலை அண்மித்து வரும்போது அவற்றை 'லபக்' எனச் சிவாயர் எடுத்து விடுகிறார்)

புறொபெசர்: (ஸ்ரூலை நோக்கி நடந்தபடியே) முந்தி இருந்த நிலமை மாறி இருக்க வேணும். இல்லாட்டில் இது நடந்திருக்கவே முடியாது. புறவிசை எப்பிடியோ இல்லாமல் போச்சுது.

அருளர்: தோல்வியை ஒப்புக்கொள்ளுறதுதான் வீரருக்கு அழகு. வெற்றி எங்களுக்குத்தான். எங்களுக்கு முதலிலே தெரியும் வைக்கலாமெண்டு.

தியாகர்: ஏனெண்டால் இருந்த பொருள் பறந்தால் பறந்த பொருள் இருக்கத்தானே வேணும் (குழம்பியபடி நிற்கிறார் புறொபெசர். தன்னுடைய பைலை மீண்டும் பார்த்தபடி நிற்கிறார். சிவாயர் எல்லாரையும் பெருமிதத்தோடு பார்த்து)

சிவாயர்: இது என்னெண்டு என்னாலை செய்ய முடிஞ்சுதெண்டு நீங்கள் அதிசயீப்பிர்கள். என்னுடைய குருநாதர் சொல்லியிருக்கிறார். 'எதையும் செய்ய முதல் என்னை யோசியடா எண்டு' இதையெல்லாம் வைக்க முதல் அவரை யோசிச்சுக் கொண்டு வைச்சன். என்னுடைய குரு.... ஓ அந்த மஹான்... இது மாத்திரம். தான் அந்த மகான்ரை அற்புதம் எண்டு நினைக்கக் கூடாது. அண்டைக்கொரு நாள் அவசரமாய் ஒரு இடத்துக்குப் போகவேண்டி இருந்திது. இந்த நேரத்திலை பஸ் கிடைக்குமோ எண்டு கவலைப்பட்டு அந்த மகான்ரை பேரை நினைச்சன். சொன்னால் நம்ப மாட்டியள் ஒரு பஸ் பழுதாகி என்ரை வீட்டுக்கு முன்னாலை நிண்டு போச்சுது.

தியாகர்: சத்தியம் பண்ணிச் சொல்லுங்கோ இது உண்மையெண்டு.

அருளர்: (வெறுப்போடு குழந்தைப் பிள்ளைத்தனமாக) உது எங்களுக்கு முந்தியே தெரியும்.

பொதுவர்: (ஆர்வ மேலீட்டினால்) அப்பிடியெண்டால் என்னை ஒருக்கால் அவரிட்டை கூட்டிக்கொண்டு போறியளோ?

சிவாயர்: அவரைக் காணுறது எண்டால் என்ன சில்லறை வேலையெண்டா நினைக்கிறியள். இமயமலையிலை பத்து மைல் உயரத்துக்கு ஏறி இருந்திட்டார். குளிர் எண்டால் கடுங் குளிர். நிண்டால் ஆள் ஐஸ் கட்டியாப் போம். என்னெண்டுதான் அந்த மகான் அங்கை இருந்தாரோ. கீழை கூட்டியாறதே பெரிய கஸ்டமாய்ப் போச்சு. ஒருக்கால் அவரிட்டைக் கேட்டன் 'குருவே இமயமலையி இருட்டு இஞ்சை இருக்கிறது எப்பிடி இருக்குது' எண்டு. உடனை அந்த மஹான் சொன்னார்' எயர் கெண்டிஷன் (Air Condition) தியேட்டருக்குள்ளை இருந்திட்டு வெளியிலை வந்தது மாதிரி இருக்குதடா' எண்டு.

தியாகர்: அப்ப சுவாமி நினைக்கிற காரியம் சொல்லுவாரோ?

சிவாயர்: நினைச்ச காரியம் என்ன? நினையாத காரியமே சொல்லுளார். ஒருதரும் அவருக்கு முன்னாலை பொய் சொல்ல ஏலாது. இருந்தாப்போலை எனக்கொரு நாள் சொன்னார் 'டேய் தம்பி, நீ எதையோ பற்றி யோசிக்கிறார், எண்டு. நான் 'இல்லை' எண்டன். வந்துதே அவருக்கு சிரிப்பு. அட்டகாசமாய் அஃ.....ஹஃ.... ஹா.... எண்டு வாய் விட்டுச் சிரிச்சுப்போட்டு, 'பொய் சொல்லாதை' எண்டார். நான் உடனை உண்மையை ஒப்புக் கொண்டிட்டன்.

அருளர்: ஆனால் நான் உங்கிடை குருநாதரைப் பற்றிக் கேள்விப்படயில்லையே...

சிவாயர்: அவருக்குப் பேர் புகழிலை அவ்வளவு விருப்பமில்லை. ஒருக்கா நானே அவரிட்டைக் கேட்டன். 'ஏன் குரு உங்களுக்குப் பேரில்லை? எண்டு. அவர் உடனை சொன்னார் 'டேய் பேர் ஊர் இல்லாதவன்தான்ரா கடவுள்' எண்டு. பாருங்கோ தத்துவத்தை. நான் வாயைப் பொத்திக்கொண்டு பேசாமல் இருந்திட்டன்.

பொதுவர்: அப்ப அவற்றை தத்துவங்களை எல்லாம் புத்தகமாய் அடிச்சு விட்டிருக்கினமோ? சிவாயர் உங்களிட்டை இருக்கே?

சிவாயர்: பிறெஸ் ஒண்டும் சொந்தமாய் இல்லாததாலை இன்னுமொண்டும் அடிச்சு விடயில்லை. வாங்கின உடனை அடிச்சு விடத்தான் யோசிக்கிறார். இந்தச் சனங்கள் குடுக்கிற காசு சிலவுக்குப் போதாதெண்டு அடிக்கடி சொல்லுவார். ஆனால் அவற்றை தத்துவங்கள் இருக்குதல்லே....ச்சா.... அதுகளெல்லோ தத்துவங்கள்.

பொதுவர்: உண்மையாய்ச் சிவாயர்....ஒரு தத்துவமாவது நீங்கள் எங்களுக்குச் சொல்லத்தான் வேணும். உண்மையிலை அந்த மஹானைப் பற்றிக் கேட்க எனக்கு ஆசையாய் இருக்குது.

அருளர்: எங்களுக்கும் இப்பதான் உங்களிலை நம்பிக்கை பிறக்குது. நீங்கள் கட்டாயம் சொல்லத்தான் வேணும்.

சிவாயர்: சரி எல்லாரும் கேக்கிறதாலை ஒண்டு மட்டும் சொல்லுறன். ஒருநாள் நானும் அந்த மஹானும் றோட்டிலை நடந்து கொண்டிருந்தம். இருந்தாப்போலை ஒரு கல்லைக் காட்டி 'அது என்ன எண்டார்.' நான் அதை வடிவாய்ப் பாத்தன். கல்லுத்தான். இருந்தாலும் குரு கேட்கிறார் எண்டு போட்டுப் பார்த்தன் .... ம்.... கல்லுத்தான். பிறகு குருவைப் பாத்தன். என்னை ஒரு குறும்புப் பார்வை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். மெல்லமாய்ச் சொன்னன் 'கல்லு' எண்டு ஓஃ.......ஹொஃ.........ஹோ.....ஓ... எண்டு சிரிக்க விழுந்தார். பிறகு என்னைப் பார்த்துச் சொன்னால் 'டேய் தம்பி.. அது தான்ரா கடவுள்' எண்டார். நான் திகைச்சுப் போனன். பிறகுதான் உண்மை விளங்கிச்சுது.

பொதுவர்: ஓ....என்ன அற்புதம்...

அருளர், தியாகர்: இன்னுமொண்டு, இன்னுமொண்டு.

சிவாயர்: அந்த மகானைப் பற்றிச் சொல்ல நான் ஆர். ஆனாலும் கேட்டதுக்காக இன்னுமொண்டு மட்டும். நானும் குருவும் ஒருநாள் ஒரு காட்டுப் பாதையாலை நடந்துவாறம். றோட்டிலை இரண்டு பக்கத்திலையும் நெருஞ்சி முள்ளுப்பதை. திடீரெண்டு நெருஞ்சிப் பத்தையைக் காட்டி ஒரு கேட்டார். 'டேய் தம்பி நீ இதுக்குள்ளை நடப்பியா' எண்டு. நான் உடனையும் சொன்னன் மாட்டனெண்டு. அவர் சிரிச்சுக் கொண்டு சொன்னார் 'நீ புத்திசாலி தான்ரா' எண்டு.

பொதுவர்: எனக்கொண்டும் விளங்கேல்லையே.

சிவாயர்: சிவாயர் உம்மிடை வித்தையை நம்ப ஏலாது. நான் எல்லாம் கணக்குப் பண்ணிப் பாத்திட்டன். உதெல்லாம் பறந்தே ஆக வேணும்.

சிவாயர்: (கடுமையாக) புறொபெசர் நீங்கள் என்னை அவமரியாதை செய்தால் அதைப்பற்றி நான் அதிகம் கவலைப்பட மாட்டன், ஆனால் என்னுடைய குருவை அவமதித்து என்னை அவமதிக்கிறதாகும். அதை என்னாலை பொறுக்க முடியாது. என்னுடைய குருவினுடைய அற்புறதத்தை நீங்கள் எல்லாரும் பாத்தியள் பாத்ததை மறுக்க ஏலாது.

அருளர்: (கடுமையாக) சிவாயர் உது உங்களாலை மட்டும்தான் சாதிக்க ஏலும் எண்டு நினைக்கக் கூடாது.

புறொபெசர்: (உரத்த தொனியில்) அசையும் ஒரு பொருள்... அசைக்கும் விசை இல்லாமல் போகும் வரை.....அசைந்து கொண்டே இருக்கும்.

சிவாயர்: (ஆவேசத்தோடு) ஆடுகிறவன் அம்பலவாணன், ஆட்டுவிக்கிறவனம் அவன்தான்.

புறொபெசர்: சரி பாப்பம்...வையும் அதை.

சிவாயர்: (உரத்த குரலில்) ஆ.....குருவோடு போட்டியா? கெடுதி கதவைத் தட்டுது. (ஆவேசத்தோடு ஸ்ரூலை அணுகி மேல்நோக்கி) குருவே....(வைக்கிறார் இது நடக்கும்போது முன்னர்போல் விசிறியின் காற்றை மறையாது ஸ்ரூலுக்குப் பின்னால் நின்று வைக்கிறார். தாள்கள் யாவும் பறக்கின்றன. அதிர்ச்சியோடு தாள்கள் பறப்பதை வெறித்துப் பார்த்தபடி நிற்க, பொதுவரைத் தவிர மற்றைய மூவரும் புன்னகை பூக்கிறார்கள்)

அருளர்: உதுகள் பறக்குமெண்டு எங்களுக்கு முந்தியே தெரியும்.

தியாகர் ஓமோம். ஒருக்கால் பறந்தால் பிறகும் பறக்கும்..... இல்லாட்டில் பறக்கப் பாக்கும்....இல்லாட்டில் பேசாமல் இருக்கும். (இனி வரும் வசனங்கள் தொனியிலே மெதுவாக ஆரம்பித்து, படிப்படியாக ஆத்திரத்தில் பேசப்படுவது, போன்று உயர வேண்டும். இவை பேசப்படும்போது மீண்டும் 'பிரச்சினை' அடிமேல் அடிவைத்து வந்து தாள்களைப் பொறுக்கி விசிறியின் ஓட்டத்தை நிற்பாட்டி விட்டு தாள்களை ஸ்ரூலில் வைத்துவிட்டு, பேசாமல் இருக்கும்படி சபையோருக்குச் சைகை காட்டிவிட்டு மீண்டும் அடிமேல் அடி வைத்து மறைகிறார். இவர் வந்ததையும் செய்த கருமங்களையும் தாள்கள் ஸ்ரூலில் இருப்பதையும் பின்னர் குறிப்பிடும்வரை மற்றைய ஐவரும் காணக்கூடாது.

பொதுவர்: அப்பிடியெண்டால் புறொபெசர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையா?

புறொபெசர்: இந்தக் கொன்ஸ்ரன்ற் மட்டும் கிடைச்சுதெண்டால் பிறகு எல்லாம் சுகம்.

அருளர்: நாங்கள் உதைத் தீர்ப்பம். ஆனால் உவை நிக்கேக்கை செய்யமாட்டம்.

சிவாயர்: கடவுளைத்தவிர வேறை ஆராலையும் உது செய்யேலாது.

புறொபெசர்: அறிவை நம்பினால் ஆபத்தில்லை.

சிவாயர்: எங்களை கைவிட்டால் உன்பாடு ஆபத்து.

பொதுவர்: எனக்கேன் இந்த நிலை.

அருளர்: இருக்கிறதைக் கொண்டு வாழுறது தான் சிறப்பு.

தியாகர்: இல்லாட்டில் கேக்கலாம். கேக்காமலும் சாகலாம்.

சிவாயர்: நல்லவர் போனால் நரகம் சொர்க்கமாகும்.

புறொபெசர்: சத்தியை உண்டாக்கவுமேலாது. அழிக்கமேலாது. வேணுமெண்டால் மாத்தலாம்.

பொதுவர்: எப்பிடியெண்டாலும்... என்ரை நிலை மாறதோ?

சிவாயர்: ஆண்டவன் நினைச்சால் அகிலமே தலைகீழ்.

அருளர்: நாங்கள் நினைச்சால் நீங்களே தலைகீழ்.

புறொபெசர்: சக்தி கட்டவிழ்த்தால் எல்லாமே தலைகீழ்.

தியாகர்: தலைகீழ்...தலைகீழ்......தலைகீழ்.....தலைகீழ்....

எல்லோரும்: தலைகீஷ்.... தலைகீழ்....தலைகீழ்.... (சத்தம் திடீரென்று நிற்கிறது. ஓரிரு வினாடிகளுக்குப் பின்னர்)

பொதுவர்: புறொபெசர்....சிவாயர்.... (தாள்களைக் காட்டி) காகிதங்கள். (எல்லோரும் மெல்ல இரண்டடி முன்னுக்கு எடுத்து வைத்து ஆச்சரியத்தோடு ஸ்ரூலிலுள்ள காகிதக் கட்டைப் பார்க்கின்றனர். ஆச்சரியக்குறிகள் மெல்ல மெல்ல நீங்கிய பின்னர், அருளர் மௌனத்தைக் கலைக்கிறார்)

அருளர்: நான் தான் அதெல்லாத்தையும் ஸ்ரூலிலை வச்சது.

தியாகர்: நானும் தான்.

சிவாயர்: இருக்க முடியாது. இது என்னுடைய குருநாதரின் அற்புதம்.

புறொபெசர்: இல்லை. இது ஒரு புறவிசையின் தொழிற்பாடு.

பொதுவர்: கடையிசியிலை அது பறக்காமல் இருக்குது.

அருளர்: இனிமேல் அது பறவாது. அதுக்கு நான் உத்தரவாதம்.

தியாகர்: நானும் தான்.

சிவாயர்: என்னுடைய குருவின்ரை ஆசி. இனிமேல் பயமில்லை.

புறொபெசர்: இதெல்லாம் பிறகும் பறக்குமோ. அப்பிடியெண் எனக்கு இனி நிம்மதியே கிடையாதோ?

சிவாயர்: பறந்தால் என்னடைய குருவாலை தான் பறக்கும்.

அருளர்: அதைப்பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். நாங்கள் இருக்கிறம்.

தியாகர்: ஓமோம்.... நீங்கள் ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ.

புறொபெசர்: நாலு மடையரை கும்பிடுகிற நேரம் நான் ஒரு புத்திசாலியின்ரை காலிலைவிழத்தயார். (இந்த வசனம் பேசப்பட்டதும் மற்ற நால்வர்கள் முகத்திலும் வெறுப்பும் அருவருப்பு உணர்ச்சியும். இனிப் பேசப்படும் வசனங்கள் வெறுப்புணர்ச்சியோடு தொடங்கி தொனியில் மெல்ல மெல்லக் கூடி கடைசியாகவுள்ள சில வசனங்கள் ஆத்திரத்தாலும் வெறுப்பாலும் கதைப்பது போல் உச்சத் தொனியிலே கத்தப்பட வேண்டும்.)

சிவாயர்: காலிலை விழுந்தாலும் காட்டுமிராண்டிகனைக் கடவுள் ஏற்கார்.

அருளர்: காலம் போனால் காட்டுமிராண்டியும் கடவுள் ஆகலாம்.

தியாகர்: கடவுள் தூணிலுமிருப்பார், துரும்பிலும் இருப்பார்.

சிவாயர்: என்னுடைய குரு இமயமலையிலை.

பொதுவர்: பிரச்சினை இமயமலை அளவெண்டால் எல்லாரும் சாமிகள் தான்.

அருளர்: நான் பொதுவருக்கு உலகத்தையே கொடுப்பன். ஆனால் உங்களாலை அவருக்குச் சூரியனைக் கொடுக்க முடியாது.

புறொபெசர்: இருட்டிலை இருந்து கொண்டு சூரியனைப் பார்த்தால்... கண் கூசும்.

பொதுவர்: உண்மையைப் பார்க்க மறுக்கிறவனே உண்மையான குருடன்.

சிவாயர்: உண்மை. என்னுடைய குருவே உண்மை.

அருளர்: இடி இடிச்சாலும் வானம் இடியாது.

தியாகர்: வானம் இடிஞ்சாலும் எங்களுக்குச் சாவில்லை.

புறொபெசர்: எண்டைக்கோ ஒருநாளைக்குச் சாவை அறிவு வெல்லும்.

பொதுவர்: காலந்தான் தீர்வோ.... காலந்தான் தீர்வோ.....

தியாகர்: அற்பருக்குப் பணம் கிடைச்சால் சிவராத்திரியிலை சினிமாவுக்குப் போவார்.

சிவாயர்: ஆத்திலை மிதக்கிற தாளங்காய்க்கும் கிணத்திலை விழுகிற கல்லுக்கும் வித்தியாசம் இல்லை.

புறொபெசர்: பூமியின்ரை இழுவையாலை பொருள் கீழை விழுகுது

அருளர்: ஒருக்கால் விழுந்தால் பிறகு எழும்பலாம்.

தியாகர்: உதாரணம் வேணுமெண்டால் எங்களைப் பார்.

சிவாயர்: நல்லவர் போனால் சொக்கமும் நரகமாகும்.

அருளர்: நாமார்க்கும் குடியல்லோம்.

தியாகர்: நமனை அஞ்சோம்.

பொதுவர்: நகரத்திலை நான்...நகரத்திலை நான்....

சிவாயர்: காத்திலை பறக்கிற காத்தாடியை விட, கடலிலை மிதக்கிற கப்பல் மேல்.

புறொபெசர்: கப்பலும் ஒரு நாள் கரைக்கு வரும்.

அருளர்: கடலிலை நிண்டாலென்ன கரைக்கு வந்தலென்ன கட்டாயம் நாங்கள் அதிலை ஏறுவம்.

தியாகர்: ஏறினால் இறங்க மாட்டம்.... இறங்கினால் ஏறுவோம்.

புறொபெசர்: அறிவு, அதை விட்டால் அழிவு.

சிவாயர்: என்னுடைய குரு. அவர் தான் ஒளி.

அருளர்: நான் காட்டுகிறேன் வழி.

தியாகர்: ஊர்வலம் உலகத்துக்கு ஒளி

பொதுவர்: எவடம்....எவடம்...புளியடி....புளியடி.

புறொபெசர்: ஐசாக் நியூட்டன்....ஐசாக் நியூட்டன்....

அருளர்: முடியாட்சி குடியாட்சி.... முடியாட்சி.... குடியாட்சி

தியாகர்: முடி....குடி......தடி.....அடி......படி

சிவாயர்: பாபா....பாபா......பா....பா.....வா...வா....வா

பொதுவர்: எவடம்......எவடம்...

அருளர்: தியாகர்: புளியடி.....புளியடி.....

பொதுவர்: எவடம்...எவடம்....

அருளர்: தியாகர், சிவாயர்: புறொபெசர்: புளியடி.....புளியடி...மீண்டும் எல்லோரும்: எவடம்.....எவடம்.....புளியடி.....புளியடி.

பொதுவர்: பிரச்சினை.....பிரச்சினை.....பிரச்சினை......பிரச்சினை.....

அருளர்: நாங்கள் தீர்ப்பம்....

தியாகர்: நாங்கள் தீர்ப்பம்..

சிவாயர்: குருவை நம்பு.....தீர்வைக் காண்பாய்....

புறொபெசர்: கொன்ஸ்ரன்ற் கிடைச்சால்.....தீர்வு கிடைக்கும்....

சிவாயர்: சர்வஸ்சிய யோச்சனம் சாஸ்த்திரம்...தார்மீக ஷேத்திரம் கேத்திரம் (திடீரென்று மேடை விளக்குகள் அணைக்கின்னற இருட்டின் நடுவே குரல்கள் கேட்கின்றன)

பொதுவர்: வழிஎங்கை....வழி எங்கை...

அருளர்: இஞ்சை இருக்கு.....இந்தப்பக்கம் வாரும்....இஞ்சை இருக்கு.

சிவாயர்: இஞ்சை இருக்குது பாதை.....இதாலை வாருங்கோ......ஓ வெளிச்சம் தெரியுது....வந்து பாருங்கே.....இதாலை வாருங்கோ.

புறொபெசர்: பொய்க்குப் பின்னாலை போகாதையுங்கோ. அறிவை விட்டால் அழிவு....இஞ்சை இருக்கு அறிவுப்பாதை இதாலை வாருங்கோ...இதாலை வாருங்கோ....

அருளர்: பொய்....உதெல்லாம் பொய்.... இதாலை வாருங்கோ...

இப்போது திடீரென ஒரு ஒளிப்பொட்டு நடு மேடையில் ஒளியைப் பாய்ச்சிப் பிரகாசிக்கின்றது. இந்த ஒளிப்பொட்டின் மத்தியிலே பொதுவர் முடங்கியபடி குந்தி இருக்க, அவரைச் சுற்றித் தியாகர், அருளர், சிவாயர் ஆகியோர் நின்று "இதாலை வாருங்கோ.... இதாலை வாருங்கோ" எனக் கூறியபடி பொதுவரைத் தம்பால் இழுப்பதுபோன்று பாவனை செய்கின்றனர். இப்பாவனை சிறிது நேரம் தொடர அங்குமிங்கும் இழுபடும் பாவனையோடு பொதுவர் மெல்ல எழுகிறார். இவர் எழும்போது தியாகர், அருளர், சிவாயர் ஆகியோர் தமது கைகளைக் கோர்ப்பதுப் பிடித்த படி ஆவேசமாக உடலை உள்ளும் புறமும் ஆட்டியபடி தமது கரலைப் படிப்படியாகக் கூட்டி உச்சத் தொனியில் "இதாலை வாருங்கோ....இதாலை வாருங்கோ..... இது நல்ல பாதை" என மாறி மாறிக் கூவுகின்றனர். பொதுவரும் இழுபடுவது போன்ற தனது பாவனையை சிறிது நேரம் உக்கிரமாக்கிப் பின்னர் அவர்களை வெறுப்போடும் கோபத்தோடும் தள்ளும் பாவனையோடு அவர்களின் பிடியைத் தகர்த்து வெளியே வருகிறர். தள்ளுவது போன்று பொதுவர் பாவனை செய்யும்போது மற்ற மூவரும் தாக்குண்டவர் போல மேடையிலே சாய்கின்றனர். பொதுவர், தியாகர், அருளர், சிவாயர் ஆகியோரது இந்தப் பாவனைகள் ஒரு தாளத்தோடு செய்யப்படுவது நல்லது.

மேலே கூறியது போன்று மூவரது பிடியிலிருந்தும் பொதுவர் விடுபடும்போது, மற்ற ஒளிப்பொட்டுகளும் மேடை முழுவதும் தம் ஒளியைப் பரப்புகின்றன. இந்நேரத்தில், மற்ற மூவரோடும் சேராது ஒரு புறத்தே விலகி நின்ற புறொபெசரைப் பொதுவர் மிக உறுதியாக அணுகி, தனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பாவனையோடு அவரை மின் விசிறிக்கு முன்னால் அழைத்து வருகிறார். வந்ததும், மற்றைய ஒளிவிளக்குகள் மங்கி மறைய கீழ்மேடை வலப்புறத்தே மின் விசிறிக்கு ஒளியூட்டிய ஒளிப்பொட்டு மாத்திரம் தன் ஒளியைப் பரப்பிப் பிரகாசிக்கின்றது. இந்த ஒளிப்பொட்டினுள்ளே நின்றபடி பொதுவர் மிகக் காத்திரமாகப் பாவனை மூலம் தனது பிரச்சினைகளைப் புறொபெசருக்கு விளக்க முற்படுகிறார். பாவனை நடக்கும்போது இந்த ஒளிப்பொட்டும் மங்கி மறைகிறது. இருட்டில் திரை மூடிக் கொள்கிறது

0 comments:

Post a Comment

ஈழ நாட்டியம்

சமஸ்கிருதமயப்பட்ட பரத நாட்டியத்தையும்,தெலுங்கு மயப்பட்ட கர்நாடக சங்கீதத்தையும் ,நமது கலைவடிவங்களாக வருங்கால சந்ததியினருக்கு வழிமொழிகின்றனர். ஈழத்தமிழர்களுக்கென தனியான பல நடன மரபுகள் இருந்தும் அதனை கண்டு கொள்வதில்லை.பரத நாட்டியம் கடந்த நூறாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட ஒன்று. கிருஸ்ன அய்யரும் அவர் வழி வந்த பலரும் தமிழர் நடனமுறையை சமஸ்கிருதமயப்படுத்தி இன்று பரதர் புனைந்த நாட்டிய சாஸ்திரத்தோடு தொடர்பு படுத்தியுள்ளனர்.ஈழத்தில் ஏரம்பு சுப்பையா மூலம் அறுபதுகளில்அறிமுகப்படுத்தப்பட்ட இவ் வடிவம் இன்று நம்மவர் கலையாக உலகம் முழுவதும் இந்திய நடனம் என்ற பெயரில் உலாவருகிறது.நாம் நமது மரபு வழிப்பட்ட ஈழ நாட்டியத்தை கவனத்தில் எடுக்காமல் அதனை மலினப்படுத்தியே பார்க்கிறோம். உலகமெங்கும் நமது நடன மரபாக உள்ள ஈழ நாட்டியத்தை எழுச்சி பெற செய்ய வேண்டும்.

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

பரதத் தமிழ்

பரதத் தமிழ்

ஈழ நாட்டியம்

ஈழ நாட்டியம்

தமிழமுதம்-நிகழ்ச்சிகள் முன் வரைவு

1.தமிழ்த் தாய் வாழ்த்து
2.தமிழமுதம் மைய நோக்கு பாடல்
3.வாழ்க தமிழ் மொழி-ஆடல்
4.தேன் தமிழ் மழலை
5.இசயோடு அசையும் தமிழ்
6.தமிழமுது-சொற்பொழிவு
7.வண்ணத் தமிழ்-பாடல்
8.இன்பத் தமிழ்-பாடல்
9.ஆறுமுகநாவலர்-சொற்பொழிவு
10.கத்தரி வெருளி-பாடல்
11.அக்கினி குஞ்ஞொன்று கண்டேன் -ஆடல்
12.சுவாமி விபுலானந்தர்-சொற்பொழிவு
13.தமிழே தமிழே அழகிய தமிழே-வில்லுப்பாட்டு
14.ஈழ நாட்டியம்-அரச வரவு
15.சங்கத் தமிழ்-சொற்பொழிவு
16.நாடகம்-ஆசிரியர்கள்
17.ஈழநாட்டியம்-அரசி வரவு
18.சிலப்பதிகாரம்-பாடல்
19.முயலார் முயல்கிறார்-சிறுவர் நாடகம்
20.சிறுவர் இசைத் தமிழ் மாலை
21.செம்மொழியான தமிழ் மொழி-ஆடல் அரங்கு


தமிழமுதம் -மைய நோக்கு பாடல்

தமிழும் அமுதும் ஒன்று
தரணியில் அதுவே நன்று


முத்தமிழை பயின்றிடுவோம்
முன்னோர்களின் வழி நடப்போம்
தமிழமுதம் கண்டிடுவோம்
தமிழ் சாரலில் நனைந்திடுவோம்

தொல் பழ நூல்கள் கற்றிடுவோம்
தொன்மை மரபைப் பெற்றிடுவோம்
புதிய இலக்கியம் நாம் படைப்போம்
புகலிட மண்ணில் தமிழ் வளர்ப்போம்

பாட்டும் கூத்தும் எங்களது
பண்பாட்டின் சிகரமது
நாட்டமுடனே நன்றாக
நமது கலைகளை போற்றிடுவோம்

தமிழ் எங்கள் தாய் மொழி
செம்மொழியாக வாழும் மொழி
ஈழம் எங்கள் தாய் நாடு
இனிமை தமிழில் நீ பாடு

ஈழ நாட்டியம் கூத்து

ஈழ நாட்டியம்  கூத்து


இன்னியம்

இன்னியம்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்

எங்கள் நிலத்தில் எமக்கான கலைகள்


Followers

Powered by Blogger.