1.
சேவலைப் பார் சேவலைப் பார்
சிப்பாயைப் போல - அது
கூவுது பார் கூவுது பார்
கொம்பொலி போல.
வெற்றி நடை போடுது பார்
வீரனைப் போல - போரில்
சுற்றி வந்து அடிக்குது பார்
சூரனைப் போல.
வாலையாட்டும் வண்ணத்தைப் பார்
வானவில் போல - அதி
காலையிலே எழுப்பிடும் பார்
காவலன் போல.
2.
கசட தபற வல்லினம்
கசக்கும் வேம்பு மருந்தினம்
ஙஞண நமன மெல்லினம்
ங ப்போல் உறவைக் காக்கணும்
யரல வழள இடையினம்
இரவில் உணவு குறையணும்
தமிழில் மெய்கள் மூவினம்
தமிழர் எல்லாம் ஓரினம்.
3.
அம்மா கண்ணே அருகேவா
அழகுச் சிலையே அருகேவா
அப்பா செல்லம் அருகேவா
அழகுக் கிளியே அருகேவா
பட்டே சிட்டே அருகேவா
பழமே சுவையே அருகேவா
மொட்டே மலரே அருகேவா
முந்திரிச் சுவையே அருகேவா
4.
புன்னகை என்றும் புரிந்திடு
பொய்களை எதிர்த்து வென்றிடு
அனைத்து மொழியும் கற்றிடு
அமுதத் தமிழில் பேசிடு
கூடா நட்பை வெறுத்திடு
கூடி நீயும் வாழ்ந்திடு
விடாமல் முயற்சி செய்திடு
வெற்றிக் கனியைப் பறித்திடு
பள்ளி பள்ளி பள்ளி
பாடம் படிக்கப் பள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
விளையாடுவோம் துள்ளி
வெள்ளி வெள்ளி வெள்ளி
அக்கா கொலுசு வெள்ளி
அல்லி அல்லி அல்லி
அழகு மலரே அல்லி.
5.
பெற்றோர் காத்தல் நம்கடனே
பெரிதாய்க் கற்றல் நம்கடனே
உற்றார் போற்ற வாழ்ந்திடுதல்
உலகின் முதன்மைக் கடனாகும்.
வெற்றுப் பேச்சில் காலந்தான்
வீணாய்ப் போகும் அதனாலே
குற்றம் இல்லா வாழ்வுதனைக்
குறிக்கோளுடனே வாழ்ந்திடுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment